Monday, October 31, 2005

தீபாவாளி - சீ என்று விடுவீரே

‘ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி” என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தாம் எழுதிய “தமிழர் மதம்” என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர்-

“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவராயினர்’ (வேளாளர் நாகரிகம் - பக்கம் 60)

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று, தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் கொலைக்காக தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்று அன்று” என்று தமிழ்ப் பெரும் புலவர், பேராசிரியர் சைவப் பெரியார் கா.சுப்பிரமணிய(ன்) பிள்ளை தாமெழுதிய ‘தமிழர் சமயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

‘தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை’ எனப்பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாம் எழுதிய ”மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு” என்னும் நூலில் மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார்.

-----------
தனது எதிரியைக் கொல்வதற்கு குறுக்கு வழியில் சூழ்ச்சி செய்கின்ற ஒருவரை கடவுள் என்று அழைக்க முடியுமா?

ஆனால் புராணக் கதைகள் அப்படித்தான் ‘பரம்பொருளை’ சித்தரித்திருக்கிறார்கள். எந்தப் புராணத்தை எடுத்துப் பார்த்தாலும் இந்த அசுரர்கள் தேவர்களைக் கொடுமை செய்ததாகவும்;, தேவர்களை மீட்க கடவுள் அவதாரம்செய்ததாகவும் சொல்கின்றன.

உண்மையில் இவையெல்லாம் அன்றைய ஆரிய திராவிட இனங்களுக்கு இடையிலான போரையே குறிக்கும்.

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, பன்றி, முயல், உடும்பு இவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் ‘அவிர்ப்பாகம்’ என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்தரிக்கப் பட்டார்கள். குதிரை, மாடு, ஆடு, முயல், உடும்பு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் பரசுராமன் அவதாரம் என்பது முழுக்க முழுக்க அசுரர்களை கொன்றொழித்த கதைதான். பூலோகத்தில் அசுரர்கள் செய்துவரும் கொடுமைகளினால் பூமாதேவி பாரம் தாங்க முடியாமல் தனது கணவன் விஷ்ணுவிடம் முறையிட்டாள். உடனே ‘பூமியில் அவதாரம் செய்து பூமிபாரத்தைத் தீர்த்து வைப்பேன்’ என்று கூறி தக்னி முனிவருக்கும் அவரது பத்தினி ரேணுகைக்கும் பரசுராமனாகப் பிறக்கிறார் விட்ணு. தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய ‘வீரன்” என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர் களையும் (அசுரர்களை) ஒரு காலத்திலும் தலை தூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமி பாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், சகோதரனைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்?
இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்?

-------------------
மானம் உணரும் நாள்!
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
இப்பெயரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னுகின்றனர் என்பது பொய்யா?
இவைகளை நாம் எண்ண வேண்டும்.
எண்ணாதெதையும் நண்ணுவதென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொளவேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும்பாகாது!
‘உனக்கெது தெரியும், உள்ள நாளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்றுகேட்பவனை, ‘ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று
கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணருநாள் இந்நாள்.
தீவாவளியும் மானத்துக்குத்
தீபாவாளி ஆயின் சீ என்று விடுவீரே!

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

4 comments:

Anonymous said...

வீர வன்னியரே,

வீரமெண்டால் இதுவல்லவோ வீரம்!
போட்டு சாத்து பாப்பானை!
தீபாவளி கொண்டாட்டத்தை பாப்பான்தான் உண்டக்கினானெண்டால், போத்தீச், சென்னை சில்க்ச், நல்லி, ஐம்பதினாயிரம் கலர் ஆரெம்கேவி, சரவணா, கோஆப்டெக்ச், காளீச்வரி, நடைபாதை கடை போடரவங்கள், ரங்கநாதன் தெருவு, புரசவாக்கம் கடைத்தெருவு, சைனா பஜார் நெடுக்க கூவி வித்து நாலு காசு பாக்கிரவங்கள், கதர், கைத்தறி, பட்டு நெசவாளர்கள், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடத்தி விளம்பரம் வாங்கிறவங்கள், தவிர சாலமன் பாப்பையா, இராசா போன்றவங்கள் - இவிங்க எல்லாருமே பாப்பானுக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்காங்கள்!

அடுத்தது என்ன?
பருப்பு சாம்பார் பாப்பான் கொண்டாந்தது போல. அதுக்கும் ஏதாச்சும் பாட்டு இருந்தா எடுத்து விடுங்கள்.

Maraboor J Chandrasekaran said...

தீபாவளி சரியல்ல என்று சொல்லி விளக்கங்கள் ஆயிரம் சொன்னாலும், பலருக்கு வியாபாரம், மகிழ்ச்சி, பிழைப்பு நடத்த ஒரு வடிகால் எனப் பல பரிமாணம் உள்ளதை நண்பர் மறந்துவிட்டார். அதே பெரியார், சிலை வழிபாட்டையும், பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் வேண்டாம் என்று சொல்லியும் ஏற்போர் எத்தனை பேர்?
இதை விட்டு, இனி நடப்பதை சொன்னால், நல்லது. தமிழகத்தில் வெள்ளத்தால் பல சேதம். உள்ளவர்கள், விட்டெரிந்து செலவு செய்வதை விடுத்து, அருகிலுள்ள ஆதரவற்றோருக்கு துணிமணி, இனிப்பு, பட்டாசு வாங்கி, அதை நம் குழந்தைகள் கையால் கொடுக்க செய்தால், ஈயும் குணம் கற்பித்ததாலும், பிறர் மகிழக் காணும் சுகானுபவமும் கிட்டும்.

Maraboor J Chandrasekaran said...

anonymous..
does he have guts to spell out his name? why he became anonymous, while spelling such venemous things in Tamizmanam? How can a moderator allow such comments in this beautiful Tamil oriented web site?
போட்டு சாத்து பார்ப்பானை - இது போன்ற சாதி எதிர்ப்பு வெறியர்களின் கடிதத்தை எப்படி moderator அனுமதித்தார் என்பது பெரிய விந்தை! தமிழ் மணம், தமிழ் பரப்ப மட்டும் தான்! இதுபோன்ற சிந்தனைகளை பறப்ப அல்ல. எல்லோரும் கொண்டாடும் மாகவி பாரதி, கவியோகி சுத்தானந்தர், தமிழ் தாத்தா உ.வே.சா.. மற்றும் பலர் இவர் பாஷையில் 'பார்ப்பனர்'. ஆம், தமிழ் பார்ப்பனர், அறிவு பார்ப்பனர், தொலை நோக்கு பார்ப்பனர். இதெல்லாம் நண்பருக்கு தெரியாதது மற்றொரு விந்தை!

supersubra said...

இன்றைய காலகட்டத்தில் இது போன்ற பார்ப்பன எதிர்ப்பு முஸ்லிம் எதிர்ப்பு என்ற வாதங்கள் தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து. மனித இனம் முழுவதும் அமைதியாக வாழும் வகை சொல்வோம். தீபாவளி ஆரியர் கொண்டு வந்தது என்றால் பிப்ரவரி 14 வாலென்டின் தினம் யார் கொண்டு வந்தது. மகிழ்ச்சியாக மனித இனம் இருக்க அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடலாம். மனித இனம் வேதனையுற எதையும் கொண்டாட வேண்டாம்.