பொதுவாக தலித், வன்னியர் என்ற சொல்லப்படும் மக்களை சாதியை விலக்கிவிட்டு பார்த்தால் இருவரின் வாழ்க்கை தரத்திற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அடித்தட்டு உழைப்பாளிகளாக இருப்பவர்கள் இம் மக்கள் தான். ஆனால் வன்னியர்களுக்கு தாம் தலித்துகளை விட மேலானவர்கள் என்ற எண்ணம் உண்டு. எங்கள் கிராமத்தில் முக்கியமான இரு சாதிகள் முதலியார் மற்றும் வன்னியர். வன்னியர்கள் தலித்துகளை எப்படி கீழாக பார்க்கிறார்களோ அதைப் போலத் தான் முதலியார்கள் எங்களைப் பார்ப்பார்கள்.
சமுதாயத்தின் கீழ்தட்டில் இருந்த இரு சமுதாயங்கள் இரு வேறு மனோபாவங்களால் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கீழ் மட்டத்தில் இருந்த இரண்டு சமுதாயங்களின் விழிப்புணர்வுக்கு காரணகர்த்தாக்கள் டாக்டர் ராமதாஸ் மற்றும் திருமாவளவன்.
வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே பல கலவரங்கள் நடந்திருக்கின்றன. தலித்துகள் மீதான வன்னியர்களின் தாக்குதலையும் நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஆனால் வன்னியர்களின் இந்த மனோபாவத்தை மாற்ற டாக்டர் ராமதாஸ் பாடுபட்டார் என்பது தான் எந்த மீடியாக்களும் சொல்லாத உண்மை.
டாக்டர் ராமதாசின் அரசியல் வரலாற்றை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கொள்கையுடன் இருந்த காலம். கொள்கையை காற்றில் பறக்க விட்ட காலம். அவர் கொள்கையுடன் இருந்த காலத்தில் யாருமே அவரை கண்டுகொள்ள வில்லை. கொள்கையை காற்றில் பறக்க விட்டப் பிறகு தான் கலைஞர், ஜெயலலிதா என அனைவருக்கும் அவர் தேவைப்படும் பொருளாகிவிட்டார். மீடியாக்களும் அவரை கண்டு கொண்டு கிழிக்க தொடங்கின.
குடிதாங்கி என்று ஒரு ஊர். ஒரு தலித் இறந்து விட்டார். தலித்தின் உடல் வன்னியர்கள் இருக்கும் கிராமத்தின் வழியாகத் தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒரு தலித் சடலம் வன்னியர்கள் இருக்கும் பகுதியில் செல்வதை வன்னிய மக்கள் அனுமதிக்கவில்லை. பிரச்சனை பெரியதாகி கலவரம் வரும் நிலை. டாக்டர் ராமதாசுக்கு இந்த செய்தி தெரியவந்தது. உடனடியாக இந்த கிராமத்திற்கு வந்தார். வன்னிய மக்களிடம் பேசிப் பார்த்தார். ஒன்றும் நடக்க வில்லை. வன்னிய மக்களின் எதிர்ப்பை மீறி அந்த தலித்தின் சடலத்தை வன்னிய கிராமத்தின் வழியாகவே கொண்டு சென்று இறுதிச்சடங்கள் செய்யவைத்தார் டாக்டர் ராமதஸ். வன்னியர்களின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்து நெகிழ்ந்துப் போன திருமாவளவன் டாக்டர் ராமதாசுக்கு "குடிதாங்கிக்கொண்டான்" என்று பெயர் சூட்டினார்.
அரசியல் நிகழ்வுகள் இருவரையும் பிரித்து விட்டது. இப்பொழுது சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் இரு சமுதாயங்கள் ஒன்று சேர்ந்திருப்பது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமதாசின் தற்போதைய அரசியல் கொள்கை பிடிப்புடன் இருப்பதாக நான் வாதாடிக்கொண்டிருக்க மாட்டேன். அதில் எந்தவித கொள்கையும் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் கொள்கை பிடிப்புடன் இருந்த பொழுது இந்த அரசியல் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்றே கலைஞர் நினைத்தார். திமுகவின் பாரம்பரிய ஓட்டு வங்கிகளான வன்னியர்கள் எங்கே பாமக வுடன் சென்று விடுவார்களோ என்ற அவரின் அச்சம் அவரை பாமக வை அழிக்க தூண்டியது.
ஒரு காலத்தில் பாமக வுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே தருவேன் என்று கூறிய கலைஞர் இன்று பல பாரளுமன்றத் தொகுதிகளையும், ராஜ்சபா இடத்தையும் கொடுத்திருக்கிறார். இதற்கு டாக்டர் ராமதாஸ் கொடுத்த விலை "கொள்கைகள்". கொள்கைகளுடன் இருந்திருந்தால் இன்று ராமதாஸ் காணாமல் போயிருப்பார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் ராமதசைப் பற்றி பல கட்டுரைகளை அவர் கொள்கைப் பிடிப்புடன் இருந்த பொழுது எழுதியிருக்கிறார். அது எல்லாம் அச்சுப் பிரதிகள். கிடைத்தால் வெளியிடுகிறேன். தமிழகத்தில் கொள்கை பிடிப்புடன் இருக்கும் ஒரே அரசியல் தலைவர் டாக்டர் ராமதாஸ் தான் என்று எழுதியிருப்பார். ஆனால் அந்தக் கட்டுரையை இப்பொழுது படித்தால் நல்ல நகைச்சுவையாக தோன்றும்.
திருமாவளவனுக்கும் ராமதாசுக்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் கீழ்தட்டில் இருக்கும் தன் சமுக மக்களுக்காக போராடினார்கள். தேர்தல் அரசியலை வெறுத்தார்கள். தேர்தல் மறுப்பு இயக்கங்களையும் நடத்தினார்கள். ஆனால்
அதனால் ஒரு பலனும் கிடைக்க வில்லை.
1989 தேர்தலை புறக்கணிப்போம் என்றார் ராமதாஸ். பல பூத்துகளில் ஒட்டு பதிவே நடக்க வில்லை. அதனால் என்ன பலன். ஒன்றுமேயில்லை. அதையே தான் திருமாவளவன்
செய்தார்.
அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் மூலமாக சாதிக்கலாம் என்று நினைத்தார்கள். தனித்து நின்றார்கள். ஒன்றும் சாதிக்க வில்லை.
தேர்தலில் நிற்கும் பொழுது கட்சி தொடர்ந்து தோல்வியை தழுவும் பொழுது கட்சித் தொண்டர்கள் சிதறிப் போவார்கள்.
அது தான் நடந்தது. 1996 தேர்தலில் 4 தொகுதிகளை மட்டுமே பா.ம.க தனித்து நின்று வென்றது.(ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வும் 4 இடங்களில் மட்டுமே வென்றது)
கட்சி சிதறிப் போகும் அபாயம் ஏற்பட்டது. அங்கு தான் கொள்கைகளை துறந்து ராமதாஸ்
ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். இதைப் போல தான் அன்று வைகோவும் ஜெயலலிதாவிடம்
கூட்டணி சேர்ந்தார். அந்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டிருந்தால்
பா.ம.க. காணாமல் போயிருக்கும்.
அதைத் தான் இன்று திருமாவளவனும் செய்திருக்கிறார். சிதம்பரம் தொகுதியில்
கடுமையான போட்டிக்குப் பிறகும் வெற்றி கிடைக்கவில்லை என்னும் பொழுது தொண்டர்கள்
விரக்தி நிலைக்கு சென்று விடுவார்கள். கட்சி காணாமல் போய் விடும்.
இன்றைய இந்திய அரசியலின் யதார்த்த நிலை கூட்டணி தான்.
இந்த போட்டியில் தொடர்ந்து இருக்க கூட்டணி வேண்டும்.
(முந்தைய ஒரு பதிவின் மீள்பதிவு)
1 comment:
Dear,
it is true that he got a place in history but only because he got 20 percent reservation for MBC and vanniyars not because of his dirty politics...
how will you justify his promotion of son ?
it is ok he compromised on his idealism. but history will forgive only who has achieved something in a right way..minting money for him and his family is not a achievement..
any way visit my blog
www.muthuvintamilvazhkai.blogspot.com
Post a Comment