Sunday, December 11, 2005

திருமாவின் பிம்பம்

திருமாவளவனின் சமீபத்திய செயல்பாடுகள் அவருக்கு அதிக எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. திருமாவைப் பற்றி பேசினால் செருப்பால் அடிப்பேன் என்று உணர்ச்சி வசனம் பேசியவர்கள் எல்லாம் இன்று சட்டி சட்டதடா என்ற வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திருமாவை எழுச்சித் தலைவன் என்று கூறியவர்கள் எல்லாம் இன்று எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திருமாவைப் பற்றிய மிகப் பெரிய பிம்பம் தகர்ந்து போயிருக்கிறது.

இதனால் எனக்கொன்றும் சந்தோஷம் இல்லை. ஆனால் திருமாவை ஒரு எழுச்சித் தலைவனாகவோ, திருமாவை குறித்து எந்தவித பிம்பமும் உருவாக்காமல் அவரது அரசியல் பாதையை நான் கவனித்து வந்திருக்கிறேன். தமிழகத்தின் சராசரி அரசியல் தலைவர்களுக்கும் திருமாவிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் அவர் சராசரி அரசியல் தலைவராக வந்து தான் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியும். அதை செய்ய வேண்டிய நிலைமைக்கு அவர் வந்து விட்டார். டாக்டர் ஐயாவும் இதைத் தான் செய்தார். திருமாவும் அந்த நிலைக்கு இப்பொழுது வந்து விட்டார்.

அது தான் நம்முடைய அரசியலின் அவலம். இதனால் திருமா மேல் வைத்திருந்த பிம்பங்களை உடைத்து தூர எறிந்து விட வேண்டிய அவசியம் இல்லை. அவரது கட்சியின் தொண்டனாக இருந்து பார்த்து அவர் எடுத்திருக்கும் அரசியல் முயற்சிகளை புரிந்து கொள்ள முயற்சிப்பது அவசியம்.

1989ல் பாமக ஆரம்பிக்கப்பட்ட பொழுது அது குறித்து ஒரு மிகப் பெரிய ஆர்வம் வடமாவட்ட வன்னிய கிராமங்கள் எங்கும் இருந்தது. வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என்ற கோஷம் உச்சகட்ட நிலையை எட்டியிருந்தது. முதல் தேர்தலே பாரளுமன்ற தேர்தல். ஒரு இடத்தில் கூட பாமக வெற்றி பெறவில்லை. ஆனால் தன்னுடைய பலத்தை பிற கட்சிகளுக்கு காண்பித்தது. மொத்த ஓட்டுகளில் 5% ஓட்டுகளை தனித்து போட்டியிட்டு வென்றது. தருமபுரியில் சுமார் 2.15லட்சம் ஓட்டுகள் பெற்று திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி காங்கிரஸ்-அதிமுக கூட்டணிக்கு அடுத்த இடத்தைப் பெற்றது. சிதம்பரம் தொகுதியில் சுமார் 1.75லட்சம் ஓட்டுகள், சுமார் 5பாரளுமன்ற தொகுதியில் சுமார் 1லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பாமக பெற்றது.

இந்த தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் வெற்றியை பெற்றது

பாரளுமன்ற தேர்தல் காரணமாய் வெற்றி பெற முடியவில்லை. சட்டமன்ற தேர்தலில் சுலபமாக சில தொகுதிகளை கைப்பற்றலாம் என்ற எண்ணத்தில் 1991 தேர்தலில் களமிறங்கிய எங்களுக்கு அப்பொழுது வீசிய ராஜீவ் காந்தி மரண அனுதாப அலையில் பாமக 1தொகுதியை மட்டுமே பெற்றது. ஆனால் அதே ஓட்டுவங்கியை தக்க வைத்துக் கொண்டது.

கட்சியின் இரண்டு தோல்விகள் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியது. இவருக்கு வேற வேலையே இல்லை. இவரு மட்டும் கொள்கையை வைச்சிக்கிட்டு என்ன பண்ண போறார் என்பன போன்ற பேச்சுக்கள் அப்பொழுது பிரபலம். இது தான் சமயம் என்று கட்சிக்குள் புதிதாக வந்த பண்ருட்டியார் போன்ற தலைவர்கள் கட்சியை பிளவுபடுத்த முயற்சி செய்தனர்.
1996 தேர்தலில் ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசிய சமயம், திமுகவுடன் கூட்டணிக்கு டாக்டர் ஐயா முயன்று கொண்டிருந்தார். சீட்டு தருகிறேன் என்று கூறிக் கொண்டே இருந்த கருணாநிதி கடைசி நேரத்தில் "மனதில் இடம் இருக்கிறது, கூட்டணியில் இடம் இல்லை" என்று நக்கலடித்தார். அந்த கருணாநிதி தான் பின்பு 8 பாரளுமன்ற தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார் என்பதை நினைக்கும் பொழுது தமிழக அரசியலின் உண்மை புரியும்.

டாக்டர் ஐயா தனியாகத் தான் நிற்பார், தனக்கு எந்தவித நஷ்டமும் அதனால் இல்லை என்று கருணாநிதி நினைத்து வன்னியர்களுக்கு 1996ல் மிகப் பெரிய துரோகத்தை செய்தார். இதனை என்றைக்கும் வன்னியர்கள் மறக்க மாட்டார்கள். அந்த தேர்தலில் 15வருடங்கள் ஆளும்கட்சியாக இருந்த அதிமுக 4தொகுதிகளைப் பெற்றது. பாமகவும் 4தொகுதிகளை பெற்றது.

கட்சிக்குள் இப்பொழுது கடும்சலசலப்பு. தொண்டர்களிடையே விரக்தி. தொடர் தோல்வி. முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு கொண்டிருக்க இவர் மட்டும் என்ன பெரிய கொள்கைவாதியா இருக்கிறாரு என்று வெளிப்படையான கேள்விகள். டாக்டர் ஐயாவிற்கு எதிராக வன்னிய சிங்கங்கள் போன்ற இயக்கங்கள் எல்லாம் வளர தொடங்கின. கட்சிக்குள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டந்தோறும் அமைக்கப்பட எல்லா கூட்டங்களிலும் கூட்டணி வைத்தே ஆக வேண்டும். கருணாநிதிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கோஷங்கள்.

அடுத்த வந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். எல்லா பத்திரிக்கைகளும் திமுக-மூப்பனார் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று எழுதிக் கொண்டு இருக்க அதிமுக-பாமக-மதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. வடமாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை இந்தக் கூட்டணி தான் வென்றது. அப்பொழுது தான் பத்திரிக்கைகள் பாமகவின் பலம் மற்றொரு கட்சியுடன் சேரும் பொழுது பெறுகின்ற உண்மையான பலத்தை எழுதின.

அதன் பிறகு டாக்டர் ஐயா எடுத்த நிலைப்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்தின. இவரா இப்படி என்று யோசித்தேன். சில காலம் இவர் குறித்த என்னுடைய பிம்பம் தகர்ந்து போனது. ஆனாலும் கீழ் மட்டத்தில் இருந்து பல நேரடி நிகழ்வுகள் பற்றிய புரிதல் எனக்கு இருந்ததால் இது குறித்து நான் கவலைப்படவில்லை. அந்த அரசியல் நிர்பந்தம் எனக்கு புரிந்தது.

அவ்வாறே திருமாவளவன் முதன் முறையாக அரசியலில் நுழைந்த பொழுது அவர் குறித்த பெரிய ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. எனக்கு அவரால் இதே நிலையில் அரசியலில் நீடிக்க முடியாது என்று தெரியும். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்ட பொழுது நடந்த நிகழ்வுகள் எனக்கு தெரியும். விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்த பொழுது தான் அந்த தேர்தல் நடந்தது. களப்பணிக்காக சென்ற என் ஊர் நண்பர்களுடன் நானும் அங்கு சென்றேன். அங்கு நான் கண்டது ஒரு மிகப் பெரிய சமுதாய பிளவு. அங்கு கட்சிகளுக்கிடைய போட்டி நடந்தது போல தெரியவில்லை. திருமாவளவனை தோற்க்கடித்தே தீர வேண்டும் என்ற வெறியில் திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளையும் சேர்ந்த பெருவாரியான வன்னியர்கள் பாமகவிற்கே வாக்களித்தனர். அது போல கடந்த தேர்தலில் நடந்த கடுமையான போட்டியில் கூட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த வன்னியர்கள் பாமகவிற்கு தான் ஓட்டளித்தனர். தலித் ஓட்டுகள் பலமாக திருமாவளவன் பின்பு அணி சேர்ந்தது. திருமாவளவன் தனித்து நின்று போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார். ஆனால் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் கூட அதே ஓட்டுகளை தான் பெற்றிருக்க முடியும்.

மிகக் கடுமையான போட்டிக்கு பிறகு விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டர்கள் என்ன நிலைக்கு சென்றிருப்பார்கள் என்பது எனக்கு புரியும். ஏனெனில் ஆண்டிமடம் தொகுதியில் நாங்கள் கடுமையாக உழைத்தப் பிறகும் கூட முதல் தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். அப்பொழுது எங்களுக்கு இருந்த மனப்பான்மை தான் திருமாவளவனின் தொண்டர்களுக்கும் இருந்திருக்கும். அடுத்த தேர்தலில் கடந்த தேர்தல் போல தொண்டர்கள் வேலை செய்ய மாட்டார்கள். விரக்தி அடைந்து விடுவார்கள். கட்சிக்கு பிரச்சனை வரும்.

தொண்டர்கள் கூட்டத்தை கட்டிக்காக்க வேண்டிய கட்டாயம் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் உண்டு. திருமாவளவனும் அதைத் தான் சேர்ந்தார். வன்னியர்களும், தலித்துக்களும் ஓன்று சேர்ந்தால் அது 100%வெற்றிக் கூட்டணி தான் என்பது ஓட்டுவங்கிக் கணக்கைப் பார்த்தாலே தெரியும். திருமா-டாக்டர் ஐயா இணைந்து எந்தக் கூட்டணியில் போட்டியிடுகிறார்களோ அந்தக் கூட்டணி தான் வடமாவட்டங்களில் வெற்றி பெறும். சாதாரண கூட்டல் கணக்கு தெரிந்த எல்லோருக்கும் இது தெரியும். திருமா அதைத் தான் செய்தார்.

இந்தக் கூட்டணியில் திமுகவில் சேர்ந்தால் இது வடமாவட்டங்களில் ஏற்கனவே அடித்தளம் இல்லாமல் இருக்கும் அதிமுகவிற்கு சரிவை ஏற்படுத்தும். அதே சமயத்தில் இந்தக் கூட்டணி அதிமுகவுடன் சேர்ந்தால் கருணாநிதியின் இறுதிக்கால முதல்வர் கனவு கானல் நீராகி விடும்,

இவர்களை வளைத்துப் பிடிப்பது தான் இப்பொழுது இரு பெரும் திராவிட கட்சிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்க போகிறது.

மற்ற்படி கலாச்சார காவலர்கள் மண்ணைக்கவ்வ போகிறார்கள் என்பது எல்லாம் நல்ல நகைச்சுவை. இவர்கள் தொடந்து ஒரே அணியில் இருந்தால், படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம்.

இது தான் திருமா கொள்கைகளை தூற எரிந்ததால் கிடைத்த நன்மை. இங்கு தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவருக்கும் வெற்றி வேண்டும். அதற்காக திருமா கொள்கைகளை துறந்ததில் எந்த தவறும் இல்லை. கொள்கைகளை கட்டிக் கொண்டு நல்ல பெயர் எடுத்து, வீட்டிற்கு சென்று இராமாயணம் பார்த்து கொண்டிருப்பதை விட அவர் முன்னிலைப்படுத்தும் மக்களை அதிகாரப்பீடத்தில் உட்கார வைக்க அதன் மூலம் நன்மைகளை செய்ய ஓரளவுக்காவது கொள்கைகளை துறப்பதில் தவறெதுவும் இல்லை,

இங்கு யார் தான் கொள்கையுடன் இருக்கிறார்கள். யாருமே கொள்கையுடன் இல்லாத பொழுது இவர்கள் மட்டும் கொள்கையுடன் மட்டுமே நடக்க வேண்டும் என்று பத்திரிக்கைகள் எழுதிக் கொண்டு இருக்கும். ஏ.சி. அறையில் இருப்பவர்களுக்கு களத்தில் இருக்கும் தொண்டர்கள் மனநிலை எங்கே தெரியப் போகிறது.

இந்த தலைவர்கள் தங்களுடைய மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு, டாக்டர் ஐயா வருவதற்கு முன் இருந்த வன்னியர்களின் நிலையையும், தற்போதைய நிலையையும் ஒப்பிட்டல் உள்ள நிலவரம் தெரியும். இதற்கு டாக்டர் ஐயா மட்டுமே காரணம் என்றும் அனைவருக்கும் தெரியும்.