Monday, February 28, 2005

லல்லுவும், அத்வானியும்

நமக்கு சில விஷயங்கள் சரியா புரியலைங்க

இந்த பாரதிய ஜனதா கட்சி இருக்கே, அது எப்ப பார்த்தாலும் குற்றச்சாட்டு உள்ள மந்திரிங்கள பாரளுமன்றத்துல புறக்கணிப்போம்னு சொல்றாங்க.நல்ல கொள்கைங்க. நமக்கும் அதுல உடன்பாடு உண்டுங்க.

இந்தப் பத்திரிக்கைங்க. லாலுவை கிழி கிழின்னு கிழிக்கறாங்க. பத்திரிக்கைங்க மட்டும் இல்லைங்க. இந்த வட நாட்டுல இருக்கிற நிறைய தொலைக்காட்சிங்க, அவரை கோமாளி மாதிரி சித்தரிக்கிறாங்க. பார்க்க சிரிப்பா இருக்கும்ங்க. சரியா தாங்க சொல்றாங்க. நமக்கும் அதுல உடன்பாடு உண்டுங்க.

குற்றம் செஞ்சவங்க, குற்றப்பத்திரிக்கையில இருக்கறவங்க, முக்கிய பதவிக்கு வரக்கூடாதுன்னு எல்லோரும் சொல்றாங்க. நல்ல கருத்துங்க. இதுல மாற்று கருத்து இருக்க முடியாதுங்க.


ஆனா பாருங்க, நம்ம அத்வானி, அவரு பெரிய தலைவருங்க.

ரத யாத்திரை போனாருங்க. கூடவே நிறைய கூட்டம் சேர்த்துக் கிட்டு போனாருங்க. எல்லோரும் கத்தி, கம்பு, கட்ப்பாரை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போனாங்க. போய் அயோத்தியில கூடி மசூதிய இடிச்சாங்க.
அவரு மேல கேசு போட்டாங்க. நம்ம சி.பி.ஐ, குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் பண்ணாங்க. அவரு மட்டும் இல்லைங்க. நம்ம ஜோஷி, அப்புறம் இப்ப சமீபத்துல அத்வானி கூட பப்ளிக்கா சண்டை போட்டாங்களே, ஒரு சாமியாரு, பெரு கூட என்னவோ பெப்சி உமா, அய்யய்யோ, இல்லைங்க, உமாபாரதி, அவங்க தாங்க. எல்லாரும் குற்றப்பத்திரிக்கையில இடம் பிடிச்ச புண்ணியவான்கள்.

குற்றப்பத்திரிக்கையில பெயர் இருந்தாலும் மூன்று பேரும் அமைச்சராகிட்டாங்க. அப்புறம் நம்ம வாஜ்பாயை மிரட்டி, பாவம் அவரு என்ன பண்ணுவாரு அவரு வெறும் முகமுடி தானுங்களே, அத்வானி துணை பிரதமராயிட்டாரு. அப்பவும் அவரு மேல குற்றப்பத்திரிக்கை இருக்குங்க.

அப்புறமா, லக்னோவுல இதப் பற்றி விசாரிக்க ஒரு ஸ்பெஷல் கோர்ட் வச்சாங்க. நம்ம மாயாவதி அம்மா கூட கூட்டணி சேர்ந்து அவங்கள ஒரு மேடையில புகழ்ந்து தள்ளினாரு. ஸ்பேஷல் கோர்ட் அம்பேல் ஆச்சு.
திடீர்னு ஒரு நாளு அத்வானி மேல இருக்கற கேஸ் காணாம போயிடுச்சி. அத்வானி தூய்மை அடைஞ்சிட்டாரு.

நம்ம லல்லு மேல இருக்கறது ஒரு ஊழல் வழக்குங்க.ஆனா நம்ம அத்வானி மேல இருந்தது கிரிமினல் வழக்குங்க. லல்லுவ கிழி கிழின்னு கிழிக்கற பத்திரிக்கைங்க, நம்ம அத்வானிய ஏங்க என்னைக்குமே அதிகமா கண்டுக்கிறதில்லை.

ஏன்னே நமக்கு புரியலைங்க

அப்புறங்க, ஜார்ஜ் பெர்னாண்டஸ் அப்படின்னு ஒருத்தர் இருக்காருங்க. அவரு கட்சிக்காரங்க கட்டு கட்டா பணம் வாங்கியதை படம் புடிச்சி போட்டாங்க. அவரு சில மாதம் அமைச்சரவையில இருந்து வெளிய இருந்துட்டு திரும்ப உள்ள வந்துட்டாரு.

அப்ப எங்கங்க போச்சு இந்தியாவோட தூய்மை.

ஏன்னே நமக்கு புரியலைங்க

Sunday, February 27, 2005

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில்ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேட்டிருக்கிறார். அவ்வளவு தான். கருணாநிதிக்கு கோபம் வந்து விட்டது. தங்களது கட்சியின் எம்.பி.கள் கூட்டத்தை கூட்டி விட்டார். சோனியா, மன்மோகன் என எல்லோரும் அவரை சமாதானப்படுத்த, கொஞ்ம் அடங்கியிருக்கிறார்.

கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு நல்லதா, கெட்டதா என்று முடிவெடுப்பதற்கு முன்பாக, தமிழகத்தில் ஒரு கட்சி கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியுமா என்று ஆராய வேண்டும். நிச்சயமாக முடியாது. தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடையாது. ஆனால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஓட்டு வங்கி இருக்கிறது. காங்கிரசுக்கும் இருக்கிறது. திராவிடக் கட்சிகள் காங்கிரசின் இந்தஓட்டு வங்கி மூலமாக மாறி மாறி வெற்றி பெற்று வந்திருக்கின்றன. காங்கிரஸ் மேல்சவாரி செய்து தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டன.

தி.மு.க.வின் ஓட்டு வங்கி மாநிலமெங்கும் பரவலாக இருந்தாலும், ஒரு மாவட்டம் முழுமையிலும் வெற்றி பெரும் அளவுக்கு இருக்கிறதா என்றால்..நிச்சயமாக இல்லை. தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு திமுக வை விட பலம் அதிகம். வட மாவட்டங்கள்திமுக வின் பலம் என்று சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை. வட மாவட்டங்களில் மூன்றுபலமானக் கட்சிகள் இருக்கின்றன என்றுச் சொல்லலாம். திமுக, பா.ம.க, விடுதலைச்சிறுத்தைகள் தான் அந்தக் கட்சிகள். அதிமுக, காங்கிரஸ் போன்றவற்றுக்கு ஒரளவுக்குச் செல்வாக்கு உண்டு.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுக விடுதலைச் சிறுத்தைகளுடன் சவாரி செய்துவடமாவட்டங்களில் சிலத் தொகுதிகளை கைப்பற்றிக் கொண்டது. இந்த பாரளுமன்ற தேர்தலில் பா.ம.க வுடன் சவாரி செய்து மறுபடியும் கணிசமானத் தொகுதிகளைகைப்பற்றிக் கொண்டது.

வடமாவட்டத்தைப் பொறுத்தவரை பா.ம.க வும், விடுதலைச் சிறுத்தைகளும் தவிர்க்கமுடியாத கட்சிகள். ஒரு சிறு உதாரணம், சிதம்பரம் பாரளுமன்ற தொகுதி.

கடந்த தேர்தலில் திருமாவளவன் தனித்து நின்று 2.5 லட்சம் ஓட்டுகளைப் பெற்றார்.பா.ம.க 3.4 லட்சம் ஒட்டுகளைப் பெற்றது. பா.ம.க. தனித்து போட்டியிட்ட பொழுது 2லட்சம் ஓட்டுகளைப் பெற்றதை ஒப்பிடும் பொழுது திமுக வுடன் கூட்டு சேர்ததால் பா.ம.க வுக்கு கிடைத்த லாபம் 1.4 லட்சம் ஓட்டுகள். ரஜினியின் "பலமான (?)"ஆதரவுடன் களத்தில் நின்ற பா.ஜ.க, அதிமுக வின் ஓட்டுக்களான 1 லட்சத்தை பெற்றது. டெபாசிட்டும் காலி.

ஆக வட மாவட்டங்களில் வெற்றியை நிர்ணயம் செய்வது பா.ம.க வும் விடுதலைச்சிறுத்தைகளும் தான். இதனை அலசி ஆரய்ந்தப் பிறகு தான் டாக்டர் ராமதாசும்திருமாவளவனும் இணைந்திருக்கிறார்கள். வடமாவட்டங்களில் இவர்கள் இருவரும் கூட்டணிஅமைக்கும் பட்சத்தில் அது வலுவாக இருக்கும். அதே சமயத்தில் தனித்துநிற்பதெல்லாம் சிக்கலாகி விடும். எல்லா தொகுதிகளும் சிதம்பரம், தருமபுரி போலஅமைந்து விடாது. அதனால் திமுக, அதிமுக என ஏதாவது ஒரு அணியில் தொற்றிக் கொள்வது.நிறைய இடங்களை வாங்குவது. ஏற்கனவே மத்தியில் கூட்டணி அரசின் அங்கம் வகிப்பதால்மாநிலத்திலும் அதையே பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் டாக்டர் ராமதாசுக்கு உண்டு.கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பல வருடங்களாக கேட்டுக் கொண்டும்இருக்கிறார். இளங்கோவனும் அதையே கேட்க கருணாநிதிக்கு போபம் வந்து விட்டது.

ஏற்கனவே டாக்டர் ராமதாஸ்-திருமாவளவன் இணைப்பு கருணாநிதிக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சென்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க. 27இடங்களில் போட்டியிட்டது. இப்பொழுது 30க்கும் மேற்பட்ட இடங்களைக் கேட்க கூடும்.திருமாவளவன் குறைந்தது 15 இடங்களையாவது கேட்பார். அல்லது இருவரும் சேர்ந்து 50இடங்களைக் கேட்க கூடும். ஆட்சியில் பங்கு என்பதையும் முன்வைக்க கூடும். எனவேமுளையிலேயே கிள்ளி ஏறிய எம்.பி.கள் அவசர கூட்டம், மத்திய அரசில் இருந்து விலகஆலோசனையோ என்று நினைக்கும்படி ஒரு ஸ்டண்ட் அடித்தார்.

ஆட்சியைப் பிடிக்க கூட்டணி வேண்டும் ஆனால் அதற்கு உதவி செய்தக் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரமாட்டேன் என்பது தான் கருணாநிதியின் நீதியா ?

கூட்டணி இல்லாமல் தனித்து நின்று தனியாக ஆட்சி அமைக்கலாமே ?

இடஒதுக்கீடும் - திறமையும்

இடஒதுக்கீடு என்றாலே திறமை பிரச்சனை வந்து விடுகிறது. திறமை குறைச்சலா இருக்கிறவங்க இடஒதுக்கீடு மூலமா உள்ள நுழைஞ்சிடறாங்க அப்படின்னுட்டு சில அறிவுஞீவிங்க சொல்றாங்க. ஏதோ உலகத்துலேயே அறிவிஞீவியா இருக்கிறவங்க இவங்க மட்டும் தான்னு ஒரு நினைப்பு இவங்களுக்கு. இவங்களுக்கு மட்டும் தான் அந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதன் மூளையை வைச்சான், மத்தவங்களுக்கு எல்லாம் களி மண்ணத் தான் வைச்சான் போல பேசுறாங்க.

நம்ம சினிமா உலக அறிவு ஞீவி ஒருத்தர் இருக்காறே, ஒரு பையன் ஒரு வயசான அம்மாவை காதலிக்க, அந்த வயசான அம்மாவோட பொண்ணு பையனோட அப்பாவை காதலிக்க, ஒரு அற்புதமான காதல் ஓவியத்தை எடுத்தாறே அந்த அறிவுஞீவி தான். நேரடியா மோதாம, முதலியார் புள்ளைக்கு இடஒதுக்கீடால சீட் கிடைக்கல அப்படின்னுட்டு படத்துல பிட் ஓட்டுவாரு.

அப்புறம் வந்தாரு ஒருத்தர், ஜெண்டில்மேன்னு படம் எடுத்தாரு. அந்தப் படத்த பாத்தீங்கன்னா, நோட்டீஸ் போர்ட்ல மெடிக்கல் காலேஜ் ரிசல்ட் ஒட்டியிருப்பாங்க. கறுப்பா இருக்கற பசங்கள்லாம் ரிசல்ட பாத்து சந்தோஷமா குதிப்பாங்க. வெள்ளையா, சுண்டினா ரத்தம் வர்ற கலர்ல இருக்கறவருக்கு சீட்டு கிடைக்காது. என்ன சொல்லவர்றாங்கன்னு புரியுதா...

நம்ம ஆளுங்க நிறையப் பேரு இத பாக்கறதுல்ல, மதுபாலா தொப்புள்ல அர்சுனன்னு வாள்வைக்கறத தான் பார்பாங்க. அப்புறம் அவருக்கு ஒருத்தர் அட்வைஸ் வேற பண்ணுவாரு. சத்ரியனா இருக்காதே, சாணக்கியனா இரு அப்படின்னுட்டு. நாம எல்லாம்சத்ரியன்/சூத்ரன் - மூளை இல்லாதவங்க. இவங்க சாணக்கியன் - மூளை இருக்கறவங்க.

பிரச்சனைக்கு வந்திடலாமா..

90% க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இருந்துஇப்பொழுது தான் முதல் தலைமுறை பட்டதாரிகள் வெளிவந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர்கள் கிராமத்து இளைஞர்கள். இவர்களுடைய குடும்பத்தில் உள்ள பலர் படிப்பறிவில்லாதவர்கள். தாங்கள் படிக்கா விட்டாலும் பரவாயில்லை. நம்மகன்/மகளாவது படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நிறையப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.

ஆனால் முற்படுத்தப்பட்ட பிராமண குடும்பங்களில் இருக்கும் நிலைமையே வேறு. ஆங்கிலேயர் காலத்திலேயே அவர்களுக்கு சேவகம் செஞ்சு, திவான்களா இருந்து, கைக்கூப்பி இங்கிலிப்பிச்சு கத்துக் கிட்டாங்க. காலத்துக்கு ஏத்த மாதிரிமாறக் கூடிய ஒரே தகுதி இவங்களுக்குத் தான். நம்ம ஆளுங்கல்லாம், கொடி தூக்கிவெள்ளைக்காரன்கிட்ட அடி வாங்கனப்ப இவங்க சொகுசா திவானா இருந்து இங்கிலிப்பிச்சு கத்துக்கிட்டாங்க. இவங்க தாத்தா, பாட்டி எல்லாம் இங்கிலிபிச்சு பேசற கதை இதுதான். இவங்க எல்லா பிரிவுலேயும் இருப்பாங்க. பி.ஜே.பி யும் இவங்க தான்,காங்கிரஸ்சும் இவங்க தான், கம்யுணிஸ்டும் இவங்க தான். நம்ம இந்து ராம் கம்யுணிஸ்டு, ஆனா சங்கராச்சாரியாரை தமிழக எல்லை வரைக்கும் போய் வரவேற்பாரு. இதுமாதிரி நிறைய கூத்து இருக்கு.

அதை விடுங்க.விஷயம் என்னான்னா...

பலத் தலைமுறைகளா பிராமணர்கள் படிப்பறிவுடன் இருக்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களில் இப்பொழுது தான் முதல்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் படிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.ஒரு படித்த குடுமபத்தில் இருந்து ஒருவன் பட்டதாரியாவது சுலபம். ஆனால் படிப்பறிவே இல்லாத குடும்பத்தில் இருந்து வெளிவரும் இளைஞர்கள் படும் பாடு ரொம்ப கொடுமை. நான் அனுபவப்பட்டுள்ளேன். வழிக் காட்டுவதற்கு ஆளே இருக்க மாட்டார்கள். நாமாக முட்டி மோதி விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். பல சமயங்களில் லேட்டாகத் தான் விஷயங்கள் தெரிய வரும். சில முறை தவறாக நடந்து நொந்துப் போய், அடுத்த முறை அதைச் சரி செய்துள்ளேன். வசதியான குடும்பத்தில் இருந்தால் கூட இது தான் நிலைமை.

இதுவே வசதியே இல்லாத குடும்பமாக இருந்தால்... அவன் பாடு இதை விடக் கொடுமை. வயிற்றுப் பாடு ஒரு புறம், படிக்க வேண்டும் என்ற ஆவல் ஒரு புறம். கிராமத்துபள்ளிகளில் கிடைக்கும் அற்புதமானக் கல்வி ஒரு புறம் என்று அவன் படும் இன்னல்கள் கணக்கிலடங்கா.

இவ்வளவு கொடுமைக்கு இடையிலே அவன் படித்தாலும், அவன் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்றாலும் அவனுக்கு இடஒதுக்கீடு மூலமாக சுலபமாக இடம் கிடைத்து விடுகிறதா என்றால்... நிச்சயமாக இல்லை.. இல்லவே இல்லை.

ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும் கட்-ஆப் மதிப்பெண்களை கவனித்திருப்பீர்கள்.

மருத்துவ படிப்பில் 300/290 எடுத்தவர்களுக்கு கூட மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பதில்லை. அவன் தலித்தாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்டவனாக இருந்தாலும் இடம் கிடைப்பதில்லை. அந்தளவுக்கு இப்பொழுது கடும் போட்டி நிலவுகிறது.

பொதுவான போட்டியில் (OC) 297-298 மதிப்பெண்களில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும். இப்பொழுதெல்லாம் இந்தப் பொதுப் போட்டியில் கூட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நிறையப் பேர் தேர்வு ஆகிறார்கள் என்பதை கவனியுங்கள். படிப்பு என்பது அவர்களின் சொத்து அல்ல என்பது தெளிவு.

அடுத்து BC, MBC எல்லாம் 295 மதிப்பெண்கள் என்ற நிலையில் நிரப்பப்படுகின்றது. SC என்னும் பொழுதும் இதே நிலை தான்.

ஆக 10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் அனைத்துக் கோட்டாக்களும் நிரப்பப்பட்டுவிடுகின்றன.

10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஒருவனின் திறமை குறைந்து விடுமா ?

பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவன் படும் இன்னல்கள், பல கஷ்டங்களுக்கு இடையேயும்அவன் படித்துப் பெறும் இந்த மதிப்பெண்கள், நெய் சாதமும், பருப்பு சாதமும்சாப்பிட்டு சொகுசாக படிக்கும் பிரமண மாணவர்களை விட பல மடங்கு அதிக வேல்யு உடையது.

திறமை போய் விடும் என்ற கோஷமெல்லாம், இவர்களின் வயித்தெறிச்சல்.