Friday, October 27, 2006

தேன்கூடு, திண்ணை நடுநிலை இதழ்களா ?

ரவி ஸ்ரீநிவாஸ் குறித்த கேள்வியை நான் எழுப்பிய பொழுதே அவரின் இரட்டை வேடத்தை துகிலூரித்து பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து, தனிப்பட்ட தாக்குதலாக இருக்கும் என்று எண்ணி விட்டு விட்டேன். இப்பொழுது நீங்கள் :-) (மற்றொரு தயிர்சாதம் பதிவு எழுதியிருக்கிறது, பூங்காவின் சார்பு குறித்து).

பூங்காவின் சார்பு, தமிழ்மணத்தின் சார்பு போன்றவை குறித்து கேள்வி எழுப்புபவர்கள் தேன்கூடு, திண்ணை, தமிழோவியம் போன்ற இதழ்களின் சார்பு குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை ? தமிழ்மணத்தில் சில பதிவுகள் நீக்கப்பட்டதற்கு எழுந்த பெரிய கூக்குரல், ஈழப் பதிவர்களை தேன்கூட்டில் அனுமதிக்காதது குறித்து ஏன் எழவில்லை ? திண்ணையில் தயிர்சாதங்களின் கட்டுரைகளே வெளிவந்து கொண்டிருக்கும் பொழுது, அங்கு அதன் சார்பு குறித்து கேள்வி எழுப்பாத ரவி ஸ்ரீநிவாஸ் மற்றும் பிற தயிர்சாத கோஷ்டிகள் தமிழ்மணம்/பூங்காவில் மட்டும் சார்பு வாதத்தை தூக்கிக் கொண்டு ஓடி வருவது எதனால் ?

இவையெல்லாம் என் கேள்விகள் மட்டும் அல்ல, என்னைப் போன்ற பல வலைப்பதிவாளர்களின் கேள்விகள். பல தரப்பட்ட பதிவுகளின் குரல்கள் ஒலிப்பதை விரும்பாத சில மேல்சாதி கொழுந்துகள் இவ்வாறு தங்கள் எரிச்சலை கேள்விகள் மூலம் தணித்து கொள்கிறார்கள் என்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன்

- இது பூங்கா குறித்து எழுதப்பட்ட இந்தப் பதிவில் நான் பின்னூட்டமாக எழுதியது. பின்னூட்டம் எழுதி பல மணி நேராங்களுக்குப் பிறகும் அந்தப் பின்னூட்டம் வெளிவரவில்லை. ஆனால் பல அனானிமஸ் பின்னூட்டங்கள் வெளிவந்து விட்டன. இதில் இருந்து அந்தப் பதிவு எழுதியவரின் உள்நோக்கமும், புத்தியும் புரிகிறது.

என்னுடைய பின்னூட்டத்தை அனுமதிக்காததால் தான் தனிப்பதிவாக எழுத நேரிட்டது.

அது சரி.. தேன்கூட்டை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யார் ? அவர்களின் சார்பு என்ன ?

யதார்த்த சினிமா - தங்கர்பச்சான்

தமிழகத்தில் எத்தனையோ சினிமாக்காரர்கள் தோன்றியிருக்கிறார்கள், ஸ்டைல் என்ற பெயரில் ஊரை கெடுத்து குட்டிச் சுவராக்கியிருக்கிறார்கள், லிப் கிஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ச்சி புயலால் நாசமாக்கியிருக்கிறார்கள், "அவள் அம்மா என் காதலி, என் அப்பா அவள் காதலன்" போன்ற அற்புதமான தத்துவ படங்களை கொடுத்திருக்கிறார்கள், நாளை நாம் தான் தமிழக முதல்வர் என்ற கனவில் கையை சுற்றி சுற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் இமயங்களின் நாறிப் போன கதைகளுக்கு மத்தியில் தங்கர்பச்சானின் படங்கள் தான் சனங்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பலக் காலக்கட்டங்களில் பலர் உருவாகியிருக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் இருந்து வரும் கலைஞர்களால் தான் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த முடிந்திருக்கிறது. சினிமாவின் தரம் என்பது வெறும் கிராபிக்கல் அம்சங்களாக, டெக்னிக்கல் சமாச்சாரங்களாக இருப்பதில்லை. கதையம்சம் தான் படத்தின் தரமாக இருக்க முடியும்.

தமிழ் சினிமாவின் ஸ்டீரியோடைப் படங்களுக்கு மத்தியில் கிராமத்தின் ராஜா - பாரதி ராஜா, தமிழ் சினிமாவின் பாதையை மாற்றி அமைத்தார். சமஞ்சது எப்படி என்ற ரீதியில் பாடல்கள் எழுதிய தாடி மற்றும் குடுமிகளுக்கு மத்தியில் அற்புதமான வைர வரிகளை எழுதிய வைரமுத்து, அறிவுமதி அனைவரும் கிராமத்தான்கள் தான். என்னுடைய தமிழ் ஆசிரியர் கிராமத்தான்களால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்றார். அது உண்மை தான் என்பதை இவர்களைப் போன்றவர்கள் தான் நிருமித்துக் கொண்டிருக்கிறார்கள்

தமிழ் சினிமாவில் பலர் தோன்றியிருந்தாலும், யதார்த்தம், நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு போன்றவற்றுக்கு இங்கு பஞ்சம் அதிகம். அதனை களைந்தவர் தங்கர்பச்சான் தான் என்று உறுதியாக சொல்லலாம். தன்னுடைய அழகி மூலம் நிஜ வாழ்க்கையின் பல யதார்த்தங்களை திரையில் கொண்டு வந்தார். இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இது வரை திரையில் தோன்றாத வன்னிய பூமியை கொண்டு வந்தது. பலாப்பழத்தின் வாசனையை தமிழ் சினிமாவில் காணக் கூடிய முதல் வாய்ப்பு அப்பொழுது தான் கிடைத்தது.

அவருடைய "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" என்ற படத்தை பார்க்கும் பொழுது நான் என் வாழ்க்கையில் கண்ட பல நிகழ்ச்சிகள் நெஞ்சில் உருண்டோடியது.

என்னுடைய அத்தை ஒருவர் இருக்கிறார். அப்பாவின் தங்கை. ஜெயங்கொண்டத்தில் அரசு வேலையில் இருக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். குடிப் பழக்கம் உடையவர். தினமும் ஒயின் ஷாப்பிலும், சாராயக் கடையிலும் தான் வாசம் செய்வார். வீட்டிற்கு வரும் பொழுது தள்ளாடிக் கொண்டே தான் வருவார். கொஞ்சம் கூட பொறுப்பு இருக்காது. அரசு வேலைக்கு ஒழுங்காக செல்ல மாட்டார். கிடைக்கிற எல்லா லோனும் எடுத்து விடுவார். லோன் போக வரும் சம்பளம், சம்பள தேதியில் பிராந்திக் கடையில் கரைந்து போய் விடும். பிறகு வீட்டில் அடி தடி தான். அத்தை கஷ்டப்பட்டு சில வேலைகளுக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். அரசு வேலையில் இருந்தாலும், வருகிற சம்பளத்தை வைத்துக் கொண்டு சுகமாக வாழலாமே என்று பலர் புத்தி மதி சொல்வார்கள். ஒன்றும் காதில் ஏறாது. சம்பள நாள் வந்தால், நேராக அத்தை அவர் ஆபிசுக்கு சென்று விடுவார். அப்பொழுதெல்லாம் வங்கிகளில் பணம் நேரடியாக செல்லாமல் கவரில் சம்பளம் வரும். அவரிடம் இருந்து சம்பள கவர் பிடுங்க ஒரு பெரிய யுத்தமே நடக்கும். பெரிய கச்சேரியே அலுவலக வாசலில் நடக்கும். இந்த கூத்துக்கு பிறகு வேலைக்கு செல்வதையும் மாமா குறைக்க ஆரம்பித்து விட்டார். எதற்கு வம்பு அரசு வேலையாயிற்றே, வேலை போய் விடுமே, என்றாவது ஒரு நாள் திருந்துவார் என்ற எண்ணத்தில் அப்படியே விட்டு விட்டார்கள். அத்தை பல கஷ்டங்களை அனுபவித்தார். இப்படி தொடர்ந்த அவர் வாழ்வில் என் அத்தைப் பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழா ஒரு திருப்புமுனையாக அமைந்து இவரா இப்படி என்று வியந்து போனோம் ? வாழ்க்கையில் ஏற்படும் ஒரு கணம் சிந்தனை, பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. பலர் கூறிய புத்திமதி அவரை மாற்றவில்லை. ஆனால் சில கணம் தன் மகளை பெரிய மனுஷியாக பார்த்த பொழுது அவருக்குள் ஒரு தீப்பொறி எழுந்து அவரது வாழ்க்கையை மாற்றி விட்டது.

வாழ்க்கை ஒரு படிப்பினை. வாழ்க்கையில் நடக்கும் பல மாற்றங்களை திரைப்படத்தில் கொண்டு வருவது முடியாத காரியம். அந்த முடியாத காரியத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தங்கர்பச்சான் ஏற்படுத்தி இருக்கிறார். "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" படத்தை பார்த்த பொழுது எனக்கு என் மாமாவின் முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது. தங்கர்பச்சான் முகத்திற்கும் அவர் முகத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. கதையில் நடக்கும் பல, நிஜ வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. என் வாழ்க்கையில் நான் அனுபவிக்க வில்லை என்றாலும் கண் கூடாக பார்த்து இருக்கிறேன்.

அவருடைய சொல்ல மறந்த கதையிலும் சரி, அழகியிலும் சரி வாழ்க்கையின் யதார்த்தம் பிரதிபலிக்கிறது. சொல்ல மறந்த கதையில் சேரன் அனுபவிக்கும் மன உளைச்சலை அவ்வளவு சரியாக இது வரை தமிழ் சினிமாவில் யாரும் பிரதிபலித்தது இல்லை என்றே நினைக்கிறேன். அழகி பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

இந்த திரைப்படங்களை போலவே அவரின் ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு பெரிய மரத்தைப் பற்றிய கதை. ஒரு மரத்தை சுற்றி நிகழும் நினைவுகள், பொருட் செலவுக்காக அந்த மரம் வெட்டப்படும் பொழுது ஏற்படும் உளைச்சல். அதனை சுற்றி பின்னப்பட்ட உணர்வு அலை. எனக்கும் அது போன்ற நினைவுகள் உண்டு.

உண்மையான சனங்களின் கலைஞனாக தங்கர்பச்சானை தான் நினைக்க முடிகிறது.தமிழ் சினிமாவிற்கு தங்கத் தாமரை பெற்று தரும் தகுதி தங்கர்பச்சானுக்கு மட்டுமே உண்டு.

இது ஒரு மீள்பதிவு

Thursday, October 26, 2006

விருத்தாச்சலத்தில் மண்ணைக் கவ்விய விஜயகாந்த்

உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு அவரது சொந்த தொகுதியான விருத்தாச்சலத்தில் பெரும் அடி கிடைத்துள்ளது.

விருத்தாச்சலம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில், 2 வார்டுகளில் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கான 19 கவுன்சிலர்களில் தேமுதிகவிலிருந்து ஒருவர் கூட ஜெயிக்கவில்லை. அந்தத் தொகுதியில் உள்ள கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள 24 வார்டுகளில் 5ல் மட்டுமே தேமுதிகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

கங்கைகொண்டான் பேரூராட்சியில் 2 வார்டிலும், மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 1 வார்டிலும் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் தேமுதிகவுக்கு தோல்வியே கிடைத்தது.

பிறந்த ஊரான மதுரையில் 9 வார்டுகளைக் கைப்பற்றி திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் மண்ணைக் கவ்வியுள்ளார்.


நன்றி :

Friday, October 20, 2006

சிவகாசி பிஞ்சுகள்

தீபாவளி பட்டாசு சத்தங்களை கேட்கும் பொழுதெல்லாம் எங்கோ தூரத்தில், சிவகாசியில் ஒரு மழலையின் அபயக் குரலாகத் தான் எனக்கு தோன்றும். என்னுடைய குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவாது தீபாவளியின் பொழுது பட்டாசுகள் கொளுத்தலாம் என்ற என் எண்ணத்தை கூட சிவகாசி பிஞ்சுகளின் சோகக் கதைகளை கேட்ட பிறகு அடியோடு மாற்றிக் கொண்டேன்.

இந்தப் பதிவு ஏதோ வலைப்பதிவுகளில் சில பின்னுட்டங்களை பெறுவதற்காகவோ அல்லது அதிக ஓட்டுகளைப் பெற்று தமிழ்மணத்தின் சம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காகவோ எழுதவில்லை என்பதை நான் உண்மையான உள்ளத்துடன் இங்கு பறைசாற்றி விட நினைக்கிறேன்.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் என் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு என்னுடைய இந்த வலைப்பதிவு இந்த வருடம் ஒரு வடிகாலாக அமைந்து விட்டது.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் எல்லா ஊடகங்களிலும் அலசப்படும் இந்த விடயம், பிறகு ஏதேனும் ஒரு பரபரப்பு செய்திகளில் காணாமல் போய் விடும். அடுத்த தீபாவளிக்கு தான் அனைவரும் இதனை மறுபடியும் நினைத்துப் பார்ப்போம்.

இந்த இடைவேளையில் சிவாகாசியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை, மழலைப் பருவ விளையாட்டுகள் எல்லாம் பறிபோய் விடும். காலையில் படிப்பு பின் மாலை முழுவதும் விளையாட்டு என்று பாரதி நகரத்தில் இருக்கும் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு தான் பாடினான் போலும். சிவகாசியிலும், பிற ஏழ்மை கிராமத்திலும் இருக்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் வேலை தான்.

சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக சுமார் 500 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த 500 தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மட்டும் சுமார் 20,000 முதல் 40,000 வரை இருக்ககூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 90 விழுக்காட்டில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு கரியாகி விடுகிறது.

இந்த ஒரு நாள் கூத்துக்காக சிவகாசி வருடம் முழுக்க உழைக்கிறது. பல மழலைகள் தங்கள் மழலைப் பருவத்தை இழந்து தவிக்கின்றனர். பலக் குழந்தைகள் பட்டாசு தயாரிக்கும் பொழுது நேரும் விபத்துக்களாலும், பல வித நோய்களாலும் மரணமடைகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம். ஆனால் நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.

பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அதன் மூலம் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதாக வெளிஉலகுக்கு பட்டாசு முதலைகள் காண்பிப்பார்கள்.

பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.

1989ம் ஆண்டு மினம்பட்டி என்ற கிராமத்தில் நடந்த ஒரு வெடிவிபத்தில் 30பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா டூடே பத்திரிக்கை பின்பு நடந்திய விசாரணைகளில் சுமார் 300 பேர் இறந்ததாகவும், அதில் 200 பேர் குழந்தைகள் என்றும் தெரியவந்தது. அரசு அதிகாரிகள் உதவியுடன், பட்டாசு முதலைகள் இவ்வாறான பல செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றனர்.

பட்டாசு சுற்றும் பொழுது மருந்துப் பெருட்களுடன் வாழ்வதால் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகளின் கற்பப்பை வளர்ச்சி குறைந்து போவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த குழந்தைகளின் வாழ்நாள் கேள்விக்குறியுடன் தான் தொடங்குகிறது.

இப்படி பல குழந்தைகளின் பரிதாப வாழ்க்கையின் வெளிப்பாடு தான் நம்முடைய தீபாவளி மத்தாப்புகளும், புஸ்வானங்களும், காதைப் பிளக்கும் அணுகுண்டுகளும்.

ஒவ்வொரு மத்தாப்பின் ஒளியிலும் தெரிவது அழகான வண்ணங்களாக இருந்தாலும் அதற்கு பின் இருப்பது என்னவோ சிகப்பு நிறம் தான்... ஆம் அது சிவகாசி பிஞ்சுகளின் ரத்தம்..

தீபாவளி என்னும் முட்டாள்தனம்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம்

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

  • ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்
  • தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்
  • விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
  • ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது
  • அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது
  • அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்
  • தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்
  • விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்
  • இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்
  • இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?


இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது? பூமி தட்டையா? உருண்டையா?

தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?

கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?

விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா?

மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.

இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்” என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் மோசம் போகலாமா?

தந்தை பெரியார் தீபாவளி என்ற பண்டிகை பற்றி கூறியதன் சிறு தொகுப்பு



நன்றி