Sunday, April 10, 2005

சாதிக் கட்சிகளை விலக்குங்கள்

சாதிக் கட்சிகளை பற்றிய ஒரு சமூகவியல் ஆய்வு

இன்று தமிழ்நாட்டில் சாதிச் சங்கங்களும், சாதிக் கட்சிகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அரசியலில் போக்கிடம் இல்லாமல் வீட்டிற்கு போக வேண்டிய முன்னாள் அரசியல்வாதிகளுக்கு சாதி ஒரு ஆயுதமாக மாறி இன்று ஒவ்வொரு அரசியல்வாதியும் அரசியலில் வேர்வை சிந்தி, உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு ஊர் ஊருக்கு கூட்டம் போட்டு சாதியின் பெயரால் கட்சி ஆரம்பித்து கொண்டிருக்கிறார்கள். மெத்த படித்த மேதாவிகள் எல்லாம் சாதிக் கட்சிகள் பெருகுகிறது என்று கூறிக் கொண்டே இந்துவிலும், தினமலரிலும் தங்கள் வாரிசுகளுக்கு எந்த கோத்திரத்தில் வரன் தேடலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த தேர்தலில் ஆரம்பிக்கப்பட்ட புதிய நீதிக் கட்சி, மக்கள் தமிழ் தேசம் போன்றவையெல்லாம் காணாமல் போன அரசியல்வாதிகள் மறுபிறப்பு எடுக்க மேற்கொள்ளப்பட்ட புது அவதாரம். இந்த அவதாரமும் கலைந்து போய் இந்தக் கட்சிகளுக்கு அந்த சாதி மக்களின் மத்தியில் கூட எந்த செல்வாக்கு இல்லை என்று நிருபிக்கப்பட்டது.

இந்தச் சாதி சங்கங்கள் மற்றும் கட்சிகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் ராமதாஸ் ஆரம்பித்த வன்னியர் சங்கமும், பிறகு வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக வளர்ந்து பெற்ற வெற்றிகளும் தான் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் பெற்ற வெற்றியை ஏன் பிற சாதி சங்கங்களால் பெற முடியவில்லை. அவர்கள் யாருக்காக சாதி சங்கங்கள் தொடங்கினார்களோ அந்த சாதி மக்களே ஏன் இவர்களை கண்டு கொள்ள வில்லை. நம் சமூகச் சூழலை கொஞ்சம் ஆராய்ந்தால் அதற்கு காரணம் தெரியும்.

இந்த சாதிக் கட்சிகளை ஆராய வேண்டுமானால் வன்னியர் சங்கம் பெற்ற வெற்றியை முதலில் ஆராய வேண்டும். அன்றைய வன்னிய மக்களின் சமூக சூழலை பற்றி விளக்குகிறேன். இது நடுநிலை தவறாத நேர்மையான விளக்கம் என்பதை இப் பகுதிகளில் இருப்பவர்கள் அறிவார்கள்.

வன்னியர் சங்கம் 1980 களின் துவக்கத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. வன்னியர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் பலப் பெயர்களில் பலவாறாக சிதறிக் கிடந்தனர். திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் கவுண்டர் என்றும், பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம் போன்ற பகுதிகளில் படையாச்சி என்றும், சேலம், தருமபுரி போன்ற பகுதிகளில் கவுண்டர், படையாச்சி என்ற இரண்டு பெயர்களிலும் அழைக்கப்பட்டு வந்தனர். வன்னிய மக்கள் பெருமளவில் இருப்பது வடமாவட்டங்களில் தான். இவர்களை ஒன்று சேர்த்து வன்னியர்களுக்கான ஒரு அமைப்பாக வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது.

படையாட்சி = படை + ஆட்சி

இது தான் படையாட்சி என்ற பெயர் உருவாக காரணம். காலம் காலமாக இவர்கள் போர் வீரர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் மன்னர்கள் வரலாற்றில் கூட வன்னிப் படைகள் என்ற ஒரு பிரிவு இருந்தது. இவ்வாறு போர் வீரர்களாக இருந்து பின் அந்தப் படைகள் எல்லாம் கலைந்து போய் வாழ்கை போரட்டத்திற்காக கூலித் தொழிலாளர்களாக மாறினர். காலம் காலமாக இந்தப் பகுதியில் இவர்கள் இருந்தாலும் வன்னியர்களில் பெரும் பகுதி மக்களுக்கு சொந்தமாக ஒரு காணி நிலம் கூட கிடையாது. வட மாவட்டங்களில் ஆதிக்க சாதிகள் அல்லது மேல் சாதிகள் என்று சொல்ல வேண்டுமானால் அது நாயுடுக்கள், ரெட்டியார்கள், முதலியார்கள் போன்றோர்களே. விளை நிலங்கள் பெரும்பாலும் இவர்கள் கைகளில். இவர்களிடம் கூலி வேலை செய்வது வன்னியர்கள். இது தான் இங்கிருந்த நிலை.

தமிழ் நாட்டு மக்கள் தொகையில் சுமார் 20% மக்கள் வன்னியர்கள் தான். ஆனால் இந்தப் பெரும்பான்மையான மக்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கூலித் தொழிலாளிகளாக இருந்த நிலையில் தான் இவர்களின் முன்னேற்றத்திற்காக வன்னியர் சங்கம் பிறந்தது.

இந்தச் சமுதாயத்தில் பிறந்து இம் மக்கள் பட்ட இன்னல்களை கண்டு இந்த இன்னல்களுக்கு ஒரு விடிவு தேட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசு மருத்துவராக இருந்த டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். ஒவ்வொரு வன்னிய கிராமத்திற்கும் சென்று அந்த கிராமத்தின் உண்மை நிலையை கண்டு அம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமானால் இந்த சாதி மக்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் உதித்தது தான் இடஒதுக்கீட்டு போராட்டம். வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் மாநிலத்தில் 20%, மத்தியில் 2% கேட்டு துவங்கிய இடஒதுக்கீட்டு போராட்டம்.

முதலில் உண்ணாவிரதம், ரயில் மறியல், ஒரு நாள் சாலை மறியல் என்று தொடங்கி பின் 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் 1987ல் நடந்தது.

1987ல் நடந்த 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் தான் வன்னியர் சங்கத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஸ்தம்பித்தன. சென்னைக்கு ஏழு நாட்களும் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. கிராமங்கள் தோறும் போலீஸாரின் அடக்குமுறை. ஆண்கள் எல்லாம் சிறையில் இருக்க கிராமத்தில் எஞ்சியிருந்த பெண்களிடம் போலீஸார் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவங்கள் நிறைய உண்டு. என்னை போன்றவர்கள் எங்கள் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரி தோப்புகளில் ஒளிந்து கொள்வோம். இந்தப் போராட்டத்தில் 9 பேரை போலீஸாரின் துப்பாக்கி சூட்டில் வன்னிய சமுதாயம் பறிகொடுத்தது. பலர் காயமடைந்தனர். இந்தப் போராட்டத்தை எப்படியும் வெற்றியடைந்த வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் பல மரங்களை நாங்கள் வெட்டினோம் என்பதும் உண்மை. வெட்டப்பட்ட மரங்களில் என்னுடைய பங்கும் உண்டு. இதனை நான் பெருமையாகக் சொல்ல வில்லை. ஆனால் எங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்ற வேட்கைக்கு முன்பாக மரங்கள் எங்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. 9 பேரை போலீஸாரின் துப்பாகிச் சூட்டிற்கு பலி கொடுத்த எங்கள் சமுதாயத்தின் தியாகம் பற்றி ஊடங்கங்கள் இதுவரை ஒன்றுமே எழுதவில்லை. ஆனால் அவர்கள் எழுதியதெல்லாம் நாங்கள் வெட்டிய மரங்களைத் தான். நாங்கள் செய்த தவறுக்கு நிவாரணம் தேடத் தான் இன்று பசுமை தாயகம் சார்பாக லட்சக்கணக்கான மரக்கன்றுகளை வளர்க்கிறோம்.
(இந்தப் போராட்டத்தை பற்றிய எனது சாட்சியமாக நான் கண்டவற்றை மிக விரிவாக மற்றொரு பதிவில் பதிவு செய்கிறேன்)

இவ்வாறு போராடி பெற்றது தான் மிகப் பிற்படுத்த சமுதாயத்திற்கான (Most Backward Classes - MBC) 20% இடஒதுக்கீடு. வன்னிய மக்களுக்கு மட்டும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டால் பிரச்சனை உருவாகும் என்ற காரணத்தால் பின்தங்கி இருந்த பலச் சாதிகளை ஒன்றிணைத்து MBC பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் எண்ணிக்கையை கொண்டு பார்த்தால் இதில் இருக்கும் முக்கிய பிரிவு வன்னியர்கள் தான். இன்று வன்னிய சமுதயாத்தில் இருந்து பல பெறியாளர்கள், மருத்துவர்கள் உருவாகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த இடஒதுக்கீடு தான். நான் இன்று ஜெர்மனியில் இருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் அது ராமதாஸ் என்ற மனிதர் வன்னிய மக்களின் மத்தியில் உருவாக்கிய விழிப்புணர்ச்சியும் அதன் காரணமாக நடந்த போராட்டங்களும் அதற்கு விலையாக கொடுத்த உயிர்களும் தான்.

இது தான் வன்னியர் சங்கத்தின் வெற்றி. டாக்டர் ராமதாஸ் என்ற தனி மனிதன் சாதித்த வெற்றி. தன் சமுதாயத்திற்காக ராமதாஸ் என்ன செய்தார் என்று கேள்வி கேட்பர்வர்களுக்கு எங்களுடைய சிறிய பதில் இது (இன்னும் பல இருக்கின்றன).

இவ்வாறு வன்னியர் சங்கம் உருவாக ஒரு காரணம் இருந்தது. பிந்தங்கியிருந்த ஒடுக்கப்பட்ட வன்னிய மக்களை முன்னேற்ற அன்றைக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஒரு தலைவர் தேவைப்பட்டார். ராமசாமி படையாச்சியார், பண்ருட்டியார் போன்ற பல வன்னிய தலைவர்கள் இருந்தாலும் சுயநலம் இல்லாத போராட்ட குணம் மிக்க ஒரு தலைவர் அன்றைக்கு தேவைப்பட்டார். அந்த போராட்ட குணம் மிக்க தலைவராக தோன்றியவர் தான் டாக்டர் ராமதாஸ். அவரை வன்னியர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். அவர் வன்னியர்களின் ஒரே தலைவராக உருவாகினார்.

எந்த தலைவரும் திடீர் என்று உருவாகுவதில்லை. அன்றைக்கு இருக்கும் சமூக சூழல், மக்களின் பிரச்சனை போன்றவற்றுக்கு அவர்கள் மேற்கொள்ளும் அணுகுமுறை இவற்றால் தான் உருவாகுகிறார்கள்.

தந்தை பெரியார் உருவானதும் அப்படித் தான். அவர் உருவாக்கிய அமைப்பை அடித்தளமாக கொண்டு தான் அண்ணாவும், கலைஞரும் இன்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி. ஆர் அவர்கள் இந்த சித்தாந்தத்தில் இருந்து விலகி சினிமா கவர்ச்சியை கொண்டு அரசியலுக்குள் நுழைந்தார். இதனை திட்டமிட்டு செய்தார். திடீரென்று செய்ய வில்லை. இந்த சித்தாந்தமும் அவர் ஒருவருக்கு தான் சரியாக வந்தது. அதற்கு சாட்சி கடந்த தேர்தலில் ரஜினிகாந்த் கண்ட தோல்வி.

அது போலவே தலித் போராட்டம் என்பது திருமாவளவன் புதியதாக கண்டெடுத்த ஒன்று இல்லை. ஆனால் தலித்துகளுக்காக பல தலைவர்கள் தோன்றி எவருவே மக்களின் அபிமானத்தை பெறாத நிலையில் ஒரு போராட்ட குணம் மிக்க தலைவராக நேர்மையான தலைவராக தலித்துகளுக்கு கிடைத்தவர் தான் திருமாவளவன்.

ஆக மக்கள் முட்டாள்கள் அல்ல. தங்களுக்கு ஒரு தலைவன் தேவைப்படும் பொழுது தான் தங்களுக்கான தலைவரை அங்கீகரிக்கிறார்கள்.
அதனால் தான் தேவையில்லாத சமயத்தில் தோன்றிய சாதிக் கட்சிகளை மக்கள் நிராகரித்தார்கள்.

முதலியார்களுக்காக ஒரு தனிக் கட்சியை (புதிய நீதிக் கட்சி) ஏ.சி. சண்முகம் நிறுவனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

முதலியார்கள் பிற்படுத்த பட்டியலில் இருந்தாலும் உண்மையில் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லவே. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் முன்னேறிய சமுதாயம் தானே. ஏ.சி.சண்முகத்திற்கு அரசியலில் அங்கிகாரம் பெற வேண்டிய அவசியம் இருந்ததால் சாதிக் கட்சியை தொடங்கினார். ஆனால் முதலியார் சமூகத்துக்கு அவரது கட்சியை ஆதரிக்க வேண்டிய பின்பற்ற வேண்டிய எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்பதால் அதனை நிராகரித்தார்கள்.

அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற தேவர் சமுகத்திற்கும் ஒரு தலைவரும் இல்லையே ஏன் ? தங்களுக்கென ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டிய அவசியம் அம் மக்களுக்கு இல்லை.

இது போல தான் பல சாதி சங்கங்களும் அதற்கான தேவை இல்லாமல் அந்தச் சாதி மக்களாலேயே நிராகரிக்கப்பட்டன.

டாக்டர் ராமதாஸ் பெற்ற வெற்றியை கண்டு வன்னிய மக்களுக்காக போட்டியாக அமைப்புகளை தொடங்க முயன்ற பல தலைவர்கள் தோல்வியையே கண்டனர். அவர்கள் அதற்கு கண்டெடுத்த ஆயுதம் வன்னியர்களின் போராட்டம் காரணமாக பெற்ற 20% இடஒதுக்கீடு பிற சமுதாயத்திற்கு போய் சேருகிறது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு வேண்டும் என்பது தான். ஆனால் இதற்கு வன்னியர்கள் மத்தியிலேயே ஆதரவு இருக்க வில்லை. இன்று பல வன்னிய கிராமங்களில் படித்த இளைஞர்கள் உருவாகி விட்டார்கள். சமுதாயம் முன்னேற தொடங்கியிருக்கிறது. இந்த வாதம் எடுபடவில்லை.

இனி தொடங்கப்படும் எந்தச் சாதிக் கட்சியும் வெற்றி பெற முடியாது. சாதியை மட்டுமே முன்னிறுத்தி அங்கீகாரம் பெற முடியாது. நான் இந்தச் சாதிக் கட்சிகளை விலக்குங்கள் என்ற பதிவு எழுதுவதற்கும் அவசியம் இப்பொழுது இல்லை. ஏனெனில் மக்கள் தாமாகவே அக் கட்சிகளை நிராகரித்து விடுவார்கள்.

இன்று புதியதாக அரசியல் கட்சியை யார் தொடங்கினாலும் அவர்களும் தோல்வியே அடைவார்கள். ஏனெனில் அதற்கான அவசியம் இன்று இல்லை.

Monday, April 04, 2005

நான் RSS எதிர்ப்பாளன் - 4

காந்தியார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பொழுது மறுபடியும் ஒரு மன்னிப்பு கடிதத்தை சர்வார்கார் எழுதினார்.

அவருக்கும் மன்னிப்பு கடிதத்திற்கு அப்படி ஒரு நெருங்கிய தொடர்பு. கூசாமல் தன் கொள்கை, போராட்டங்கள், இயக்கம் போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று ஒரு மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுவார்.

இவ்வாறு 1911, 1913, 1925, 1948, 1950 என பல தடவை மன்னிப்பு கடிதங்களை கொடுத்துள்ளார்.

1948, பிப்ரவரி 22ம் தேதியிட்ட மன்னிப்பு கடிதத்தை சுதந்திர இந்தியாவின் பாம்பே காவல்துறை கமிஷனருக்கு தன்னை காந்தியார் கொலை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக கொடுக்கிறார்

"Consequently, in order to disarm all suspicion and to back up the above heart representation, I wish to express my willingness to give an undertaking to the government that I shall refrain from taking part in any communal or political public activity for any period the government may require in case I am released on that condition."

இந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது

இதன் பிறகு ஜூலை 13, 1950ம் ஆண்டு மற்றொரு மன்னிப்பு கடிதம். சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமானால் எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று நீதிபதி கேட்க, அவ்வாறே இருப்பதாக சர்வார்கார் உத்திரவாதம் கொடுக்க அவரும் விடுவிக்கப்பட்டார்.

போதும்டா சாமி..இது போல ஒரு கேவலத்தை இது வரைக்கும் பார்த்ததில்லை.

இறுதியாக இந்த பதிவுகளை முடிக்கும் முன்பு அத்வானியின் ஒரு நகைச்சுவையை பாருங்கள். சர்வார்கார் பகத்சிங்கிற்கு ஒப்பான தியாகியாம்.

பகத்சிங்கின் கால் தூசிக்கு கூட சர்வார்கார் ஈடாக மாட்டார்.

பகத் சிங்கின் தியாகம் அளவிட முடியாதது. பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் இப்படி கூறுகிறார்

"என்னுடைய உயிரை நான் துச்சமென மதிக்கிறேன். கொள்கைக்கு முன்பு என் உயிர் ஒரு பொருட்டல்ல. என்ன விலை கொடுத்தாலும் நான் எடுத்த நிலையில் இருந்து பின்வாங்க மாட்டேன்"

தன்னுடைய மரணத்திற்கு முன்பாக பகத்சிங் இப்படி கூறினார்.

"எங்களை உங்களுடைய தீர்ப்பில் போர்க் கைதியாகத் தான் கூறியிருக்கிறீர்கள். போர்க் கைதிக்கு தரும் தண்டனை தூக்கிலிடுவதில்லை. துப்பாக்கியால் சுடுவதே. எங்களை துப்பாக்கியால் சுடுங்கள். அவ்வாறு சாவதையே நான் விரும்புகிறேன்".

பகத் சிங்கின் தியாகம் எங்கே ? தனக்கு உயிர் பிச்சை கேட்டு பிரிட்டிஷாரிடம் பின்பு இந்திய அரசிடமும் மண்டியிட்ட சர்வார்கார் எங்கே ?

எனக்கு இவ்வாறு ஒப்புமை படுத்தி எழுதுவதற்கே கேவலமாக இருக்கிறது. அளவிட முடியாத தியாகத்தை மித மிஞ்சிய கேவலத்தையும் எங்ஙனம் ஒப்பிடுவது

காலம் அப்படி மாற்றி விட்டது. சரித்திரத்தை மாற்ற நினைக்கிறார்கள்.

பகத்சிங்கின் வழி வந்த வீரத்தையும் தேசப்பற்றையும் மெச்சுகிற நான், தேசவிரோதியான சர்வார்கரை எப்படி ஆதரிக்க முடியும் ? அவர் சித்தாந்தத்தை பின் பற்றுகிற RSS இயக்கத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

எனவே தான் நான் RSS எதிர்ப்பாளனாக இருக்கிறேன்

- நிறைவுற்றது -

Sunday, April 03, 2005

நான் RSS எதிர்ப்பாளன் - 3

காந்தியார் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய இந்து மகா சபையைச் சேர்ந்த பாத்வே என்பார் பின்வருமாறு சாட்சியம் அளித்தார்.

1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி நாதுராம் விநாயக் கோட்சே, நாரயணன் ஆப்தேவுடன் பாத்வேவும் சர்வார்கரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு சர்வார்கார் கோட்சே மற்றும் நாரயணன் ஆப்தேவிடம்
"காந்தியின் சகாப்தம் முடிந்து விட்டது. வெற்றியுடன் திரும்பி வா" என்று கூறி சர்வார்கார் வழியனுப்பி வைத்தாராம்.

சர்வார்கார் ஏன் காந்தியடிகளை கொலை செய்ய முடிவு செய்தார் என்பதை பார்க்கும் பொழுது இன்றைய பாரதீய ஜனதாவின் அத்வானிகளும் நரேந்திர மோடிகளும் எதைத் தேடி அலைகிறார்களோ அதற்கு தான் சர்வார்கரும் அலைந்தார் என்பது தெரிகிறது. அது தான் பதவி, அரசியல் வெறி.

இன்றைய பாரதிய ஜனதா இந்துத்வா மதவெறியை தூண்டி விட்டு ஆட்சியை பிடிக்க துடிப்பது போல அன்றைக்கு இந்து மகா சபை அரசியல் அதிகாரம் பெற காந்தியாரை கொலை செய்வது தான் ஒரே வழி என்று சர்வார்கார் முடிவு செய்தார். இந்துக்களின் பெரும்பகுதியினர் காந்தி பின் அணிவகுப்பதை சர்வார்கார் விரும்பவில்லை. தான் மிகவும் நம்பியிருந்த பிரிட்டிஷாரும் தன்னை புறக்கணித்து விட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கி விட்டு சென்று விட்டதால் காந்தியை கொன்றால் தான் தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும் என்று முடிவு செய்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த அம்பு தான் கோட்சே.

கோட்சே சர்வார்கார் இடையேயான தொடர்பு குறித்த பல விபரங்கள், அப்ரூவர் கொடுத்த சாட்சியங்கள் இருந்தாலும் அதனை வலுவாக நிருபிக்க முடியவில்லை. இது எல்லா பெருந்தலைகளின் வழக்குகளில் இந்தியாவில் நடைபெறுவது வழக்கம் தானே.

இந்தக் கொலை குறித்த விபரங்கள் சர்வார்காரின் மரணத்திற்கு (1966) பிறகு தான் அதிகம் வெளியாகியது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எல்.கபூர் தலைமையில் இந்த கொலை வழக்கு பின்னனி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணண கமிஷன் தான் காந்தியார் கொலை வழக்கில் சர்வார்கருக்கு இருந்த தொடர்புகளை அம்பலப்படுத்தியது. ஆனால் இந்த விசாரணை கமிஷனின் அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

சர்வார்காரின் உதவியாளர்களாக இருந்த ராமச்சந்திர கேசர், விஷ்ணு தம்லே போன்றோர் இந்த விசாரணை கமிஷன் முன்பு சாட்சியம் அளித்துள்ளார்கள். இந்த கமிஷன் இறுதியாக சமர்பித்த தன் அறிக்கையில் சர்வார்கார் மற்றும் அவரது குழுவினர் தான் காந்தியாரை கொல்ல சதி திட்டம் தீட்டி கொலையும் செய்தார்கள் என்று தெரிவிக்கிறது. இது நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருந்தால் சர்வார்கார் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டிருப்பார்.

தில்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மறுபடியும் 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி கோட்சே, ஆப்தே இருவரும் சர்வார்கரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள் என்று சர்வார்கரின் உதவியாளரான விஷ்ணு தம்லே வாக்குமூலம் அளித்தார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் கோட்சே சர்வார்கரின் வீட்டிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் வந்து செல்லக் கூடிய செல்வாக்கு பெற்றிருந்ததாகவும் தன் வாக்குமூலத்தில் இவர் கூறியிருக்கிறார்.

அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
அத்வானியை இன்னெரு சர்தார் வல்பாய் பட்டேல் என்று தான் பாரதீய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள். அத்தகைய சர்தார் வல்லபாய் பட்டேல் காந்தியாரின் கொலையில் சர்வார்கார் உள்ளிட்ட இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள் தான் திட்டமிட்டு செய்ததாக முழுமையாக நம்பினார்

"It was a financial wing of the Hindu Mahasabha directly under Savarkar that (hatched) the conspiracy and saw it through"
என்று சர்தார் வல்லபாய் பட்டேல் கூறியிருக்கிறார்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சர்வார்கார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோர்ட் விசாரணையின் பொழுது தனக்கும் கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சர்வார்கார் உண்மையை மறைத்து பொய் சொன்னார். அவர்கள் ஏதோ கட்சி தொண்டர்கள் என்ற வகையில் தான் தனக்கு தெரியும் என்று சர்வார்கார் சொன்னார்.

ஆனால் சர்வார்காரின் மறைவுக்கு பிறகு 1967ம் ஆண்டு கோட்சேவின் சகோதரர் கோபால் எழுதிய "காந்தியின் படுகொலையும் நானும்" என்ற புத்தகத்தில் கோட்சேவுக்கும் சர்வார்காருக்கும் இருந்த தொடர்பை அம்பலப்படுத்தியிருக்கிறார். பல இடங்களுக்கு ஒன்றாக செல்லும் அளவுக்கு அவர்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு இருந்ததாக கோபால் தெரிவிக்கிறார்.

இவ்வாறு காந்தியாரின் படுகொலைக்கு காரணமான சர்வார்காரின் புகைப்படம் தான் இன்று பாரளுமன்றத்தில் காந்தி, சர்தார் பட்டேல் ஆகியோர் இருக்கும் இடத்திற்கு நேர் எதிராக அலங்கரித்து கொண்டிருக்கிறது.

அந்தமான் விமான நிலையத்திற்கு சர்வார்கார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரைத் தான் பாரதீய ஜனதா தனது வழிகாட்டியாக கொண்டுள்ளது. காந்தியார் சுதந்திரம் வாங்கித் தந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய சதிகாரர் சர்வார்கரின் புகைப்படமும் அலங்கரிப்பது இந்தியர்கள் அனைவருக்கும் கேவலம்

அந்தமான் சிறையில் வாடிய பல தியாகிகள் ஊர் பெயர் தெரியாமல் காணாமல் போய் விட்டார்கள். ஆனால் பிரிட்டிஷாருக்கு கூஜா தூக்கியவரின் பெயரில் அந்தமான் விமான நிலையம்

இந்தியாவில் உண்மையான தியாகத்திற்கு என்றுமே மதிப்பு கிடையாது

பதிவுகள் தொடரும்

ஆதாரம் :- Savarkar & Hindutva - The Godse Connection by A.G. Noorani

நான் RSS எதிர்ப்பாளன் - 2

டோண்டு தன் பதிவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படி நாசிக்களை ஆதரித்தாரோ அது போலத் தான் தாங்களும் நாசிக்களை ஆதரித்ததாக கூறி நோதாஜியுடன் தங்களை இணைத்து கொள்ள முனைகிறார்.

ஆனால் நேதாஜி தன் ஆதரவை நாசிக்களுக்கு தெரிவிக்கும் பொழுது பின் வருமாறு கூறினார்

"It is dreadful, but it must be done. It is our only way out. India must gain her independence, cost what it may. Have you any idea, Mr. and Mrs. Kurti, of the despair, the misery, the humiliation of India? Can you imagine her suffering and indignation? British imperialism there can be just as intolerable as your Nazism here."

From the book K. Kurti, Subhas Chandra Bose as I knew him

இவ்வாறு நாசிக்களின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தாலும், நாசிக்களின் கொள்கை மோசமானது என்று அறிந்திருந்தாலும் இந்திய விடுதலைக்காகவே நேதாஜி அவர்களை ஆதரிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஆனால் சர்வார்காரோ இந்திய விடுதலைக்கும் பாடுபடவில்லை. பிரிட்டிஷாருக்கும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார். அப்புறம் என்ன இந்திய நலனுக்காக ஆதரித்தார் என்று பேச்சு என்பது தான் விளங்கவில்லை.
சர்வார்கார் பெரும்பான்மையாக உள்ள மக்கள் சர்வாதிகாரிகளாக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். அந்த வகையில் நாசிக்கள் யூதர்களை ஜெர்மனியை விட்டு துரத்தியதையும் ஆதரித்தவர். அவர் வழி வந்த கூட்டம் தான் இப்பொழுது இஸ்ரேலை ஆதரிப்பதாக கூறிக் கொள்கிறது.

ஜெர்மனியில் நாசிக்கள் யூதர்களை விரட்டியடித்தது போல முஸ்லீம்களை இந்தியாவை விட்டு வெளியேற்றி இந்து ராஷ்டிரம் அமைத்து விட வேண்டும் என்பது தான் சர்வார்காரின் எண்ணம்.

"A nation is formed by a majority living therein. What did the Jews do in Germany? They being in minority were driven out from Germany."

"The Indian Muslims are on the whole more inclined to identify themselves and their interests with Muslims outside India than Hindus who live next door, like Jews in Germany."

ஆக நாசிக்கள் உயர்வாக இருக்கும் பொழுது நாசிக்களுக்கு ஆதரவு, இஸ்ரேல் இன்று அதிகார பீடமாக இருப்பதால் இஸ்ரேலுக்கு ஆதரவு. இன்று சிங்கள இனவெறி ஆட்சி பீடத்தில் இருப்பதால் அவர்களுக்கும் ஆதரவு

சர்வார்கார் காந்தியாரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய குழுவில் முக்கியமானவர். இந்த கொலை வழக்கின் பின்னனியை விசாரித்த கபூர் கமிஷன் சர்வார்காருக்கும் கோட்சேவுக்கும் உள்ள தொடர்பை அமபலப்படுத்தினாலும் இதனுடைய விபரங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

அது போலவே காந்தியாரை கொன்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு வேறு யாரும் இந்த படுகொலையில் சம்பந்தப்படவில்லை என்று கோட்சே அளித்த வாக்குமூலமும் சர்வார்காரை தப்பிக்க வைத்தது.

கோட்சேவின் குரு சர்வார்கார் தான் என்பதும் இந்த படுகொலைக்கு முன்பாக 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 17 தேதிகளில் கோட்சேவும் சர்வார்கரும் சந்தித்தார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்த உண்மை

துகிலுரிக்கும் பதிவுகள் தொடரும்

Saturday, April 02, 2005

நான் RSS எதிர்ப்பாளன் - I

சர்வார்கார் தேசபக்தரா ? இது அவரை துகிலுரியும் பதிவு

அந்தமான் சிறையில் சர்வார்கார் வாடியதாகவும் நாட்டின் சதந்திரத்திற்காக அவர் போராடியதாகவும் பாரதிய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள். அவர்கள் தான் தேசபக்தர்கள் போலவும் அவர்களின் நிறுவனர் சர்வார்கார் தான் பெரிய தேசபக்தர் என்றும் கூறிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் நடந்தது அவர்கள் கூறுவதற்கு எதிர்மறையானது. எதையாவது அழுத்தமாக கூறிக் கொண்டே இருந்தால் உண்மையாகிவிடும் என்ற நினைப்பு அவர்களுக்கு உண்டு.

1910ம் ஆண்டு சர்வார்கார் ஒரு கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 1911ம் ஆண்டும், 1913ம் ஆண்டு என இரு முறை தன்னை விடுவிக்க பிரிட்டிஷ் அரசிடம் கருணை வேண்டி மனு கொடுத்தார்.

1913ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் நாள் தேதியிட்ட அந்த கருணை மனுவில் பின்வருமாறு கூறுகிறார்

"என்னை நீங்கள் விடுவித்தால் பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிந்து இந்த அரசுக்கு விசுவாசமாய் இருப்பேன். என்னை நீங்கள் விடுவிப்பதால் என்னை பின்பற்றுகிறவர்களும் உங்கள் பின் அணிவகுப்போம். இந்தியாவில் இருக்கும் வழிதவறிய இளைஞர்களையும் (சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருப்பவர்களைத் தான்இப்படி சொல்கிறார்) நாங்கள் மாற்றி விடுவோம்."

என்னுடைய மொழிபெயர்ப்பு கொஞ்சம் மோசமாக இருக்கும். ஆனால் உண்மையான வாசகங்கள் இதைவிட கேவலமாக இருக்கும். அதை அப்படியே தருகிறேன்

"The Mighty alone can afford to be merciful and therefore where else can theprodigal son return but to the parental doors of the government?"

prodigal son = வீணாப்போன மகன் என்று சொல்லலாமா ?

சர்வார்கர் தன்னைத் தானே "வீணாப்போன மகன்" என்று கூறிக் கொள்கிறார். இந்த வீணாப்போனவனுக்கு கருணை காட்டுங்கள் என்று கெஞ்சுகிறார். அந்த வீணாப்போனவரைத்தான் இன்று ஒரு வீணாப்போன கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அந்தமான் சிறையில் இருந்த பெங்காலிய புரட்சியாளர் திரிலோக்கிய நாத் சக்ரவர்த்தி என்பார் சர்வார்காருடன் அந்தமான் சிறையில் இருந்தவர். அவர் தனது நூலில் அந்தமான் சிறையில் இருந்த நிலைமைகள் குறித்து கூறுகிறார். அந்தமான் சிறையில் நிலைமை மிக மோசமாக இருந்ததாம். அங்கு இருந்தவர்களில் மூத்த வயதினராக இருந்த சர்வார்கார் அங்கிருப்பவர்களை சிறையில் இருக்கும் நிலைமைகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் படி சொல்கிறார். அவர் சொல்வதைக் கேட்டு அனைவரும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களை உண்ணாவிரதம் இருக்க தூண்டிய சர்வார்கார் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வில்லை. இதனால் எரிச்சலடைந்த சக்ரவர்த்தி "எங்களை தூண்டி விட்டு நீங்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறீர்களே" என்று கடிந்து கொண்டாராம்.

இது தான் சர்வார்கார் தியாகத்தின் லட்சணம்

இறுதியாக சிறையில் இருந்து வெளியேறும் முன்பாக அவர் எழுதிக் கொடுத்த உத்திரவாதக் கடிதம் கீழே தரப்பட்டுள்ளது

"I hereby acknowledge that I had a fair trial and just sentence. I heartilyabhor methods of violence resorted to in days gone by and I feel myselfduty bound to uphold law and constitution (British, added) to the best of mypowers and am willing to make the 'reform' a success in so far as I may beallowed to do so in future"

இங்கு அவர் கூறும் 'reform' - Montague Chelmsford proposals of 1919.

இதனை காந்தியார் மற்றும் வேறு எந்த தேசபகதர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை.

இவ்வாறு இந்திய நலனுக்கு பாடுபட்ட சர்வார்கார் ஹிட்லருக்கு பின் வருமாறு ஆதரவுதெரிவித்தார்.

"Germany has every right to resort to Nazism and Italy to Fascism and eventshave justified that those isms and forms of governments were imperative andbeneficial to them under the conditions that obtained there...."

தன்னுடைய பதிவில் டோண்டு இந்தியாவின் நலனுக்காகத் தான் ஹிட்லரை தாங்கள் ஆதரித்ததாக கூறுகிறார். ஆனால் இந்த அறைகூவல் விடுப்பதற்கு பல வருடங்கள் முன்பாகவே இந்தியாவின் நலனை பிரிட்டிஷாரிடம் அடகு வைத்து விட்டார்கள்.

சர்வார்காரின் அறைகூவலையும், நேதாஜியின் ஆதரவையும் ஒன்றாக்கி பார்க்க டோண்டு முயலுகிறார். நேதாஜியின் கால் தூசிக்கு கூட சர்வார்காரை சம்பந்தப்படுத்த முடியாது என்பதற்கு மேலே கூறியுள்ள ஆதாரங்களே போதுமானாது.

தங்களுக்கு சலுகையும், அடிபணிந்து ஏவல் செய்ய ஒரு வேலையும் இருந்து விட்டால் யாருக்கு வேண்டுமானாலும் கூஜா தூக்குவார்கள். அப்படித் தான் சர்வார்கார் கூஜா தூக்கினார்.

ஒரு முறை அல்ல பல முறை.

1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியார் ஆரம்பித்தார். அரசு ஊழியர்களை அரசுப் பணியில் இருந்து விலகுமாறு கூறினார்.

அப்பொழுது சர்வார்கார் "இந்துக்கள் யாரும் தங்கள் அரசாங்க உத்தியோகங்களை விட்டு விலகக் கூடாது. அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கான தங்கள் கடமைகளை (பிரிட்டிஷ் அரசுக்கு) தொடர்ந்து செய்து வர வேண்டும்" என்று கூறினார்.

பதவி சுகம் அதிகாரம் என இதற்காகத் தான் இவர் பலரை பல நேரங்களில் ஆதரித்தார் என்பது எல்லோருக்கும் புரியும். டோண்டுவுக்கும் புரியும். புரியாதது போல நடிப்பார்.

இங்கு நான் டோண்டு என்று கூறுவது டோண்டுவை மட்டும் அல்ல, மொத்த கூட்டத்தையும் தான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம். அதற்கு தான் டோண்டுவை அடையாளம் காட்டுகிறேன்

அடுத்த பதிவில் காந்தியாரை கொலை செய்த சதியில் சர்வார்கரின் பங்களிப்பை பற்றி எழுதலாம் என்று எண்ணம்