Sunday, October 16, 2005

தோழர் தமிழரசன்

தமிழ் தேசியம் தழைத்தோங்கிய பகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழ் தேசியம் பற்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவு செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் சரியாக வெளிக்கொணரப்படவில்லை என்பது மட்டும் அல்லாமல் இதனை திரித்து பொய்க்கதை எழுதி மறக்கடித்தப் பெருமையும் வெகுஜன ஊடகங்களுக்கு உண்டு.

1947 விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆதிக்க சாதி பண்ணைக்காரர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலக்கட்டத்தில் இந்தியாவெங்கும் இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த இயக்கங்களின் செயல்பாடு தீவிரமாகி 1960களின் பிற்பகுதியில் மேற்குவங்காளத்தில் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் அமைப்பான மக்கள் யுத்தக் குழு - People's War Group - PWG தோன்றியது. இந்த அமைப்பு மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்தது.

கடலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், பென்னாடம், தருமபுரி போன்ற பின் தங்கிய கிராமங்களில் தான் இந்த இயக்கம் வளர துவங்கியது. இதற்கு இந்தப் பகுதியில் நிலவிய சமூக, பொருளாதார சூழலும் முக்கிய காரணம். வடமாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். இந்தப் பகுதியின் முக்கிய பொருளாதாரம் முந்திரி. முந்திரி வருடம் முழுக்க மகசூல் கொடுக்க கூடிய பயிர் அல்ல. வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே முந்திரி கிடைக்கும். பிறகு சீண்டுவார் இல்லை. இந்த முந்திரி காடுகளும் சிறு விவாசாயிகள் சொந்தமாக வைத்துக் கொள்ளக்கூடியவை அல்ல. பெரும் பண்ணைக்காரார்கள் வசம் தான் நிலங்கள் இருந்தன.

இப்பகுதியின் பெரும்பான்மை மக்களான வன்னிய, தலித் மக்கள் இந்தப் பண்ணைக்காரர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருந்து வந்தனர். பிற மாநிலங்களில் பண்ணைக்காரர்கள் - அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான போராட்டம் வெடித்த பொழுது இப்பகுதியிலும் இந்தப் போராட்டம் வேரூன்ற தொடங்கியது. நக்சலைட் இயக்கங்களும் தமிழ் மண்ணில் அறிமுகமாகின.

நக்சலைட் இயக்கமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் பின் தமிழ் தேசியமாக, ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை அடையும் இயக்கமாக உருவெடுத்தது. தமிழகத்தின் முதல் குண்டுவெடிப்பும் இப்பகுதியில் தான் நடந்தேறியது. அதனை அறிமுகப்படுத்தியர் பென்னாடத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள். பள்ளி ஆசிரியராக இருந்த புலவர் கலியபெருமாள் "மக்கள் யுத்தக் குழு" இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். மேற்குவங்க நக்சலைட் தலைவர் சாரு மஜும்தாருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

புலவர் கலியபெருமாள் மூலமாக நக்சலைட் இயக்கம் வடமாவட்டங்களில் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு புலவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட பொழுது அந்த குண்டுகள் வெடித்ததால், தீவிரவாத இயக்கம் பற்றிய செய்திகள் வெளிவரத்தொடங்கின. அவர் மீது கொலைக்குற்றம் போன்ற பொய்வழக்குகள் சுமத்தப்பட்டு அரசு அவரை சிறையில் அடைத்தது.

நக்சலைட் இயக்கத்தின் திருப்பு முனையாக இத் தருணத்தில் தோழர் தமிழரசன் உருவாகினார். 1980களில் இந்த இயக்கம் மிக வேகமாக வளர முக்கிய காரணம் தோழர் தமிழரசன் தான். People war Group இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் அவர் உயர்ந்தார். சாதியில்லா சமுதாயம் அமைப்பது, பண்னை நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுப்பது போன்றவை இவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. அதே சமயத்தில் தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளில் நம்பிக்கை உடையவராக தமிழரசன் விளங்கினார்.

1985ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு ஆதராக தமிழகத்தில் உணர்வு அலைகள் கரைபுரண்ட பொழுது, தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றோர் தங்களை தமிழ்தேசிய உணர்வுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இதனால் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர். இதன் பிறகு தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக "தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)" என்ற அமைப்பை தோழர் தமிழரசன் தோற்றுவித்தார்.

பொறியியல் பயின்ற தோழர் தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவராக இருந்தார். 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. மைய அரசின் தளங்களை தான் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கியது. தனித்தமிழ்நாட்டை உருவாக்கி அங்கு சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயத்தை அமைப்பது தான் தன்னுடைய லட்சியம் என்று தமிழரசன் முழங்குவார். பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் ஏழைகளுக்கு அளிப்பார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது லட்சியமாக இருந்தது.

1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது அவரை அடையாளம் தெரியாமல், அவர் "தோழர் தமிழரசன்" தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுட்டிருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்ல வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். இதை விட ஒரு சோகமான விடயம் பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தோழர் மறைந்து போனார்.

கொல்லப்பட்டது தமிழரசன் தான் என்று பிறகு கேள்விபட்டவுடன் பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் நிலவிய சோகம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. இப்பகுதி மக்கள் தமிழரசனை நேசித்தனர். அவரது முகம் கூட தெரியாமல் அவரது சேவைகள் மட்டுமே பலர் நினைவில் இருந்தது. இன்றும் நிற்கிறது.

தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றவையாக தெரியலாம். ஆனால் 1980களில் இப் பகுதியில் நிலவிய வறுமை, அறியாமை போன்றவையுடன் பொருத்தி பார்த்தால் அவருடைய போராட்டத்தின் பொருள் விளங்கும்.

தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி குறித்து பொய்க்கதைகளை தான் அவிழ்த்து விட்டனவே தவிர ஒரு பத்திரிக்கை கூட உண்மை நிலையை எழுதவில்லை.

தமிழக வரலாற்றில் மக்களை நேசித்த மாமனிதர்கள் பட்டியலில் தமிழரசனின் பெயர் முக்கியமானது. என்னைப் பொருத்தவரை நான் வாழ்ந்த காலக்கட்டத்தில் கண்ட முக்கியமான தியாகம் இது (இதேக் காலக்கட்டத்தில் என்னை மிகவும் பாதித்த மற்றொரு நிகழ்வு திலீபனின் மரணம்)

(செப்டம்பர் 1ம் தேதி அவரது நினைவு நாள் அன்று இந்தப் பதிவை எழுத நினைத்து மிக தாமதமாக வெளிவருகிறது)

13 comments:

Anonymous said...

நான் ஈழத்தைச் சேர்ந்தவன. தமிழரசனைப் பற்றி ஏறத்தாழ சரியாகவே அறிந்திருந்தேன். ஆனால் இவ்வளவு விபரமாக அல்ல. உங்கள் பதிவுக்கு நன்றிகள்.

கொழுவி said...

//நக்சலைட் இயக்கமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் பின் தமிழ் தேசியமாக, ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை அடையும் இயக்கமாக உருவெடுத்தது. //

நக்சலைட் என்பது ஓர் இயக்கத்தின் பெயரா? அல்லது ஒரு வகையைக் குறிக்கும் சொல்லா?
தெளிவுபடுத்துவீர்களா? நீங்கள் அப்பெயரைத் தவறாகக் கையாண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

Pot"tea" kadai said...

நான் அறிந்த வரையில் நக்சலைட் என்பதை தீவிர இடதுசாரி(கம்யூனிஸ்ட் - லெனினீய, மார்க்ஸீய)
இயக்கங்களுக்கே பயன்படுத்தி வந்தனர்.அதுவும் மேற்குவங்க "நக்ஸல்பாரி" கிராமத்தில் வேரூன்றி வளர்ந்த காரணத்தால் "நக்ஸலைட்டுகள்" என அழைக்கப்பெற்றனர். ஆக கம்யூனிஸ்டுகளே பொதுவாக நக்சலைட்டுகள் என வழங்கப்பெற்றனர். மேலும் இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட பொழுதும் 60, 70 களில் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைத் தொழிலாளிகளின் உரிமைக்காகப் போராடியக் கம்யூனிசத் தோழர்களையும் "நக்ஸலைட்டுகள்" என வழங்கி கண்டவுடன் சுட உத்தரவும் வழங்கி இருந்ததாக என எனது காலஞ்சென்ற பாட்டனார் கூறக் கேட்டிருக்கிறேன்

Anonymous said...

DAI POT TED KADAI
DID YOU GET YOUR GREEN YET
THEN WORK ON THAT DON'T WRITE ABOUT PULEE KEELE OKAY
YOU ARE ARE SELFISH INDIAN BITCH

Pot"tea" kadai said...

kekeke...anonymous...cant stop laughing...anyways iam selfish...thanks for your compliment...

easy mate!

drop in @ potteakadai sometimes with your id...just curious dude!

Anonymous said...

வணக்கம் சத்யம்,
//வன்முறை என்றைக்குமே பிரச்சினைகளுக்கு தீர்வாகாது....அதை புலிகள் செய்தாலும் சரி...எலிகள் செய்தாலும் சரி. //
அடக்கப்படும், ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்கள் இறுதித் தெரிவாகத்தான் போராடுகிறார்கள். தீவிரவாதம் என்ற சொல்லை எப்படியும் உபயோகிக்கலாம். சுதந்திர அமெரிக்காவிற்காக போராடியவர்கள், பிரஞ்சுப்புரட்சி செய்தவர்கள், ரஷ்யப் புரட்சியாளர்கள், சுபாஷ் சந்திரபோஸ்,Ho சி மின்,பிடல் கஸ்ரோ போன்றவர்களும் உங்கள் கருத்துப்படி வன்முறையாளர்களே. ஆனால் அவர்கள் தீர்வை புரட்சியின் முலம் சாதித்தார்கள். தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் அங்கீகாரம் கிடைத்தவுடன் புரட்சியாளர்களாகிறார்கள், அவ்வளவே.

Anonymous said...

//தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் அங்கீகாரம் கிடைத்தவுடன் புரட்சியாளர்களாகிறார்கள், அவ்வளவே//
யாசிர் அரபாத் சமீபத்தைய உதாரணம்.

Muthu said...

///1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு ////


இங்கதான் இடிக்குது

Anonymous said...

Nallatoru pathivu! Maraikkap patta Allathu Thirikkap patta Varalaarukalai Meetturuvaakkamum Athanmoolam Meelparvaiyum Avsiyam!

ஜெ. ராம்கி said...

தமிழ் தேசியம்னாலே நிறைய பேருக்கு ஜில்லு தட்டுது... பொத், பொத்துன்னு விழற ஒட்டை பார்த்தா ஆச்சர்யமாவும் இருக்குது! வாழ்க சாதி, மத, இன, மொழி பேதமில்லா சமதர்ம சமுதாய கனவு!

dondu(#11168674346665545885) said...

பொன்பரப்பி சம்பவம் நடந்த சமயத்தில் வந்த ஜூனியர் விகடனின் ரிப்போர்ட் என் நினைவிலிருந்து தருகிறேன்.

தமிழரசன் குழு இரண்டு மூன்று முறை சுட்டிருக்கிறது. இருப்பினும் பொதுமக்கள் பெரிய அளவில் இருக்கவே ஓரிருவர் பட்ட காயங்கள் தவிர பெரிய விளைவு இல்லை. தங்களை அடிப்பவர்களைப் பார்த்து தமிழரசன் தான் யார் என்று கூறி, தன் குழுவைச் சேர்ந்த மற்றவர்கள் கிராமத்தைப் பழி வாங்குவார்கள் என்று கூற, வெறிகொண்ட மக்கள் கொள்ளையர்களைச் மேலும் சரமாரியாக அடித்து கொன்றனர். அதற்கப்புறம் மற்றக் கொள்ளையர்களும் பொன்பரப்பியில் வாலாட்டவில்லை என அறிகிறேன். திருடுவர்களையெல்லாம் பொன்பரப்பியில் செய்ததைப் போல செய்ய வேண்டும் என்ற பேச்சுக்களும் எழுந்தன.

இப்போது இப்படி ஒரு கதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

http://www.geocities.com/tamiltribune/01/0802.html
how commandor Tamilarasan killed by Indian agencies, dondu believes everything published in Thuklak and vikatan

Anonymous said...

டோண்டு,

சென்னையில் செகுசு வீட்டில் இருந்து கொண்டு துக்ளக்கை நம்பி கதையளந்து கொண்டிருக்காதீர்கள்.

தமிழரசன் பற்றிய உண்மை அனைவருக்கும் தெரியும். தமிழரசன் கையில் துப்பாக்கி இருந்தும் பொதுமக்களை நோக்கி சுடவில்லை என்பதும் அனைவரும் அறிந்த உண்மை

வலைப்பதிவில் உள்ளவர்கள் முட்டாள்கள் அல்ல

தமிழரசனின் போரட்டம் சரியா, தவறா என்று விவாதியுங்கள். ஆனால் அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்

தியாகம் என்பது பற்றி உங்களைப் போன்றவர்களுக்கு என்ன தெரியப்போகிறது.

தமிழரசன் மக்களை நேசித்த தியாகி என்பது 100% உண்மை

மேலே நண்பர் ஒருவர் விட்டுச் சென்றுள்ள சுட்டியை சென்று கவனியுங்கள்.
http://www.geocities.com/tamiltribune/01/0802.html
வீரவன்னியன் கூறியதை விட இன்னும் அதிக தகவல்கள் உள்ளன

வீரவன்னியன்,

நல்ல பதிவு, இது போன்ற பதிவுகளை தொடருங்கள்