ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்விக் கூடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களைக் கண்டித்து நாளை போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐஐடி, ஐஐஎம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஆகிய உயர் கல்வி நிலையங்களில் இந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அமலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது மத்திய அரசின் முடிவல்ல. நாடாளுமன்றம் எடுத்த முடிவு. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லி போன்ற நகரங்களில் மாணவர்கள் என்ற போர்வையில் ஆதிக்க சக்திகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
இவர்களால் தான் 25 ஆண்டுகளாக மண்டல் கமிஷன் பரிந்துரைகள் தூசிபடித்து கிடந்தன. அதை அமலாக்க விடாமல் தடை ஏற்படுத்தினர். வி.பி.சிங் பிரதமராக வந்த பின்னர் தான் பெரும் தடைகளையும் மீறி அதை அமலாக்கினார். அப்போது எந்தெந்த ஆதிக்க சக்திகள் வி.பி.சிங்குக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனவோ, அவையே இப்போதும் தலை தூக்கியுள்ளன.
மண்டல் கமிஷன் கிளர்ச்சியை வைத்து விபி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது போல இப்போது பிற்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டைத் தர முயலும் மன்மோகன் சிங் அரசையும் கவிழ்த்துவிட திட்டம் போடுகிறார்கள்.
அந்தத் திட்டத்தை முறியடித்து, இப்போது மீண்டும் தலை தூக்கியுள்ள இந்த ஆதிக்க சக்திகளை ஒடுக்கி, அவர்கள் போடும் தடையை உடைத்து எறிய வேண்டிய பொறுப்பும் கடமையும் சமூக நீதியில் அக்கறையுள்ள அனைவருக்கும் உண்டு.
பிற்பட்டவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை மறுக்கும் ஆதிக்க சக்திகளைக் கண்டித்து நாளை (10ம் தேதி) பாட்டாளி மக்கள் சங்கம் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படும்.
இதன்மூலம் டெல்லி போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறவர்களும் அதைத் தூண்டிவிடுகிறவர்களும் அந்தப் போராட்டங்களை முக்கியப்படுத்தி வருபவர்களும் திருந்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
1 comment:
தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் உள்ளது..
இறுதியில் வெல்வோம் என நம்புவோமாக.
Post a Comment