சாதிக் கட்சிகளை பற்றிய ஒரு சமூகவியல் ஆய்வு
இன்று தமிழ்நாட்டில் சாதிச் சங்கங்களும், சாதிக் கட்சிகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அரசியலில் போக்கிடம் இல்லாமல் வீட்டிற்கு போக வேண்டிய முன்னாள் அரசியல்வாதிகளுக்கு சாதி ஒரு ஆயுதமாக மாறி இன்று ஒவ்வொரு அரசியல்வாதியும் அரசியலில் வேர்வை சிந்தி, உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு ஊர் ஊருக்கு கூட்டம் போட்டு சாதியின் பெயரால் கட்சி ஆரம்பித்து கொண்டிருக்கிறார்கள். மெத்த படித்த மேதாவிகள் எல்லாம் சாதிக் கட்சிகள் பெருகுகிறது என்று கூறிக் கொண்டே இந்துவிலும், தினமலரிலும் தங்கள் வாரிசுகளுக்கு எந்த கோத்திரத்தில் வரன் தேடலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த தேர்தலில் ஆரம்பிக்கப்பட்ட புதிய நீதிக் கட்சி, மக்கள் தமிழ் தேசம் போன்றவையெல்லாம் காணாமல் போன அரசியல்வாதிகள் மறுபிறப்பு எடுக்க மேற்கொள்ளப்பட்ட புது அவதாரம். இந்த அவதாரமும் கலைந்து போய் இந்தக் கட்சிகளுக்கு அந்த சாதி மக்களின் மத்தியில் கூட எந்த செல்வாக்கு இல்லை என்று நிருபிக்கப்பட்டது.
இந்தச் சாதி சங்கங்கள் மற்றும் கட்சிகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் ராமதாஸ் ஆரம்பித்த வன்னியர் சங்கமும், பிறகு வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக வளர்ந்து பெற்ற வெற்றிகளும் தான் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் பெற்ற வெற்றியை ஏன் பிற சாதி சங்கங்களால் பெற முடியவில்லை. அவர்கள் யாருக்காக சாதி சங்கங்கள் தொடங்கினார்களோ அந்த சாதி மக்களே ஏன் இவர்களை கண்டு கொள்ள வில்லை. நம் சமூகச் சூழலை கொஞ்சம் ஆராய்ந்தால் அதற்கு காரணம் தெரியும்.
இந்த சாதிக் கட்சிகளை ஆராய வேண்டுமானால் வன்னியர் சங்கம் பெற்ற வெற்றியை முதலில் ஆராய வேண்டும். அன்றைய வன்னிய மக்களின் சமூக சூழலை பற்றி விளக்குகிறேன். இது நடுநிலை தவறாத நேர்மையான விளக்கம் என்பதை இப் பகுதிகளில் இருப்பவர்கள் அறிவார்கள்.
வன்னியர் சங்கம் 1980 களின் துவக்கத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. வன்னியர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் பலப் பெயர்களில் பலவாறாக சிதறிக் கிடந்தனர். திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் கவுண்டர் என்றும், பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம் போன்ற பகுதிகளில் படையாச்சி என்றும், சேலம், தருமபுரி போன்ற பகுதிகளில் கவுண்டர், படையாச்சி என்ற இரண்டு பெயர்களிலும் அழைக்கப்பட்டு வந்தனர். வன்னிய மக்கள் பெருமளவில் இருப்பது வடமாவட்டங்களில் தான். இவர்களை ஒன்று சேர்த்து வன்னியர்களுக்கான ஒரு அமைப்பாக வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது.
படையாட்சி = படை + ஆட்சி
இது தான் படையாட்சி என்ற பெயர் உருவாக காரணம். காலம் காலமாக இவர்கள் போர் வீரர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் மன்னர்கள் வரலாற்றில் கூட வன்னிப் படைகள் என்ற ஒரு பிரிவு இருந்தது. இவ்வாறு போர் வீரர்களாக இருந்து பின் அந்தப் படைகள் எல்லாம் கலைந்து போய் வாழ்கை போரட்டத்திற்காக கூலித் தொழிலாளர்களாக மாறினர். காலம் காலமாக இந்தப் பகுதியில் இவர்கள் இருந்தாலும் வன்னியர்களில் பெரும் பகுதி மக்களுக்கு சொந்தமாக ஒரு காணி நிலம் கூட கிடையாது. வட மாவட்டங்களில் ஆதிக்க சாதிகள் அல்லது மேல் சாதிகள் என்று சொல்ல வேண்டுமானால் அது நாயுடுக்கள், ரெட்டியார்கள், முதலியார்கள் போன்றோர்களே. விளை நிலங்கள் பெரும்பாலும் இவர்கள் கைகளில். இவர்களிடம் கூலி வேலை செய்வது வன்னியர்கள். இது தான் இங்கிருந்த நிலை.
தமிழ் நாட்டு மக்கள் தொகையில் சுமார் 20% மக்கள் வன்னியர்கள் தான். ஆனால் இந்தப் பெரும்பான்மையான மக்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கூலித் தொழிலாளிகளாக இருந்த நிலையில் தான் இவர்களின் முன்னேற்றத்திற்காக வன்னியர் சங்கம் பிறந்தது.
இந்தச் சமுதாயத்தில் பிறந்து இம் மக்கள் பட்ட இன்னல்களை கண்டு இந்த இன்னல்களுக்கு ஒரு விடிவு தேட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசு மருத்துவராக இருந்த டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். ஒவ்வொரு வன்னிய கிராமத்திற்கும் சென்று அந்த கிராமத்தின் உண்மை நிலையை கண்டு அம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமானால் இந்த சாதி மக்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் உதித்தது தான் இடஒதுக்கீட்டு போராட்டம். வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் மாநிலத்தில் 20%, மத்தியில் 2% கேட்டு துவங்கிய இடஒதுக்கீட்டு போராட்டம்.
முதலில் உண்ணாவிரதம், ரயில் மறியல், ஒரு நாள் சாலை மறியல் என்று தொடங்கி பின் 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் 1987ல் நடந்தது.
1987ல் நடந்த 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் தான் வன்னியர் சங்கத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஸ்தம்பித்தன. சென்னைக்கு ஏழு நாட்களும் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. கிராமங்கள் தோறும் போலீஸாரின் அடக்குமுறை. ஆண்கள் எல்லாம் சிறையில் இருக்க கிராமத்தில் எஞ்சியிருந்த பெண்களிடம் போலீஸார் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவங்கள் நிறைய உண்டு. என்னை போன்றவர்கள் எங்கள் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரி தோப்புகளில் ஒளிந்து கொள்வோம். இந்தப் போராட்டத்தில் 9 பேரை போலீஸாரின் துப்பாக்கி சூட்டில் வன்னிய சமுதாயம் பறிகொடுத்தது. பலர் காயமடைந்தனர். இந்தப் போராட்டத்தை எப்படியும் வெற்றியடைந்த வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் பல மரங்களை நாங்கள் வெட்டினோம் என்பதும் உண்மை. வெட்டப்பட்ட மரங்களில் என்னுடைய பங்கும் உண்டு. இதனை நான் பெருமையாகக் சொல்ல வில்லை. ஆனால் எங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்ற வேட்கைக்கு முன்பாக மரங்கள் எங்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. 9 பேரை போலீஸாரின் துப்பாகிச் சூட்டிற்கு பலி கொடுத்த எங்கள் சமுதாயத்தின் தியாகம் பற்றி ஊடங்கங்கள் இதுவரை ஒன்றுமே எழுதவில்லை. ஆனால் அவர்கள் எழுதியதெல்லாம் நாங்கள் வெட்டிய மரங்களைத் தான். நாங்கள் செய்த தவறுக்கு நிவாரணம் தேடத் தான் இன்று பசுமை தாயகம் சார்பாக லட்சக்கணக்கான மரக்கன்றுகளை வளர்க்கிறோம்.
(இந்தப் போராட்டத்தை பற்றிய எனது சாட்சியமாக நான் கண்டவற்றை மிக விரிவாக மற்றொரு பதிவில் பதிவு செய்கிறேன்)
இவ்வாறு போராடி பெற்றது தான் மிகப் பிற்படுத்த சமுதாயத்திற்கான (Most Backward Classes - MBC) 20% இடஒதுக்கீடு. வன்னிய மக்களுக்கு மட்டும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டால் பிரச்சனை உருவாகும் என்ற காரணத்தால் பின்தங்கி இருந்த பலச் சாதிகளை ஒன்றிணைத்து MBC பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் எண்ணிக்கையை கொண்டு பார்த்தால் இதில் இருக்கும் முக்கிய பிரிவு வன்னியர்கள் தான். இன்று வன்னிய சமுதயாத்தில் இருந்து பல பெறியாளர்கள், மருத்துவர்கள் உருவாகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த இடஒதுக்கீடு தான். நான் இன்று ஜெர்மனியில் இருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் அது ராமதாஸ் என்ற மனிதர் வன்னிய மக்களின் மத்தியில் உருவாக்கிய விழிப்புணர்ச்சியும் அதன் காரணமாக நடந்த போராட்டங்களும் அதற்கு விலையாக கொடுத்த உயிர்களும் தான்.
இது தான் வன்னியர் சங்கத்தின் வெற்றி. டாக்டர் ராமதாஸ் என்ற தனி மனிதன் சாதித்த வெற்றி. தன் சமுதாயத்திற்காக ராமதாஸ் என்ன செய்தார் என்று கேள்வி கேட்பர்வர்களுக்கு எங்களுடைய சிறிய பதில் இது (இன்னும் பல இருக்கின்றன).
இவ்வாறு வன்னியர் சங்கம் உருவாக ஒரு காரணம் இருந்தது. பிந்தங்கியிருந்த ஒடுக்கப்பட்ட வன்னிய மக்களை முன்னேற்ற அன்றைக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஒரு தலைவர் தேவைப்பட்டார். ராமசாமி படையாச்சியார், பண்ருட்டியார் போன்ற பல வன்னிய தலைவர்கள் இருந்தாலும் சுயநலம் இல்லாத போராட்ட குணம் மிக்க ஒரு தலைவர் அன்றைக்கு தேவைப்பட்டார். அந்த போராட்ட குணம் மிக்க தலைவராக தோன்றியவர் தான் டாக்டர் ராமதாஸ். அவரை வன்னியர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். அவர் வன்னியர்களின் ஒரே தலைவராக உருவாகினார்.
எந்த தலைவரும் திடீர் என்று உருவாகுவதில்லை. அன்றைக்கு இருக்கும் சமூக சூழல், மக்களின் பிரச்சனை போன்றவற்றுக்கு அவர்கள் மேற்கொள்ளும் அணுகுமுறை இவற்றால் தான் உருவாகுகிறார்கள்.
தந்தை பெரியார் உருவானதும் அப்படித் தான். அவர் உருவாக்கிய அமைப்பை அடித்தளமாக கொண்டு தான் அண்ணாவும், கலைஞரும் இன்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி. ஆர் அவர்கள் இந்த சித்தாந்தத்தில் இருந்து விலகி சினிமா கவர்ச்சியை கொண்டு அரசியலுக்குள் நுழைந்தார். இதனை திட்டமிட்டு செய்தார். திடீரென்று செய்ய வில்லை. இந்த சித்தாந்தமும் அவர் ஒருவருக்கு தான் சரியாக வந்தது. அதற்கு சாட்சி கடந்த தேர்தலில் ரஜினிகாந்த் கண்ட தோல்வி.
அது போலவே தலித் போராட்டம் என்பது திருமாவளவன் புதியதாக கண்டெடுத்த ஒன்று இல்லை. ஆனால் தலித்துகளுக்காக பல தலைவர்கள் தோன்றி எவருவே மக்களின் அபிமானத்தை பெறாத நிலையில் ஒரு போராட்ட குணம் மிக்க தலைவராக நேர்மையான தலைவராக தலித்துகளுக்கு கிடைத்தவர் தான் திருமாவளவன்.
ஆக மக்கள் முட்டாள்கள் அல்ல. தங்களுக்கு ஒரு தலைவன் தேவைப்படும் பொழுது தான் தங்களுக்கான தலைவரை அங்கீகரிக்கிறார்கள்.
அதனால் தான் தேவையில்லாத சமயத்தில் தோன்றிய சாதிக் கட்சிகளை மக்கள் நிராகரித்தார்கள்.
முதலியார்களுக்காக ஒரு தனிக் கட்சியை (புதிய நீதிக் கட்சி) ஏ.சி. சண்முகம் நிறுவனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ?
முதலியார்கள் பிற்படுத்த பட்டியலில் இருந்தாலும் உண்மையில் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லவே. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் முன்னேறிய சமுதாயம் தானே. ஏ.சி.சண்முகத்திற்கு அரசியலில் அங்கிகாரம் பெற வேண்டிய அவசியம் இருந்ததால் சாதிக் கட்சியை தொடங்கினார். ஆனால் முதலியார் சமூகத்துக்கு அவரது கட்சியை ஆதரிக்க வேண்டிய பின்பற்ற வேண்டிய எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்பதால் அதனை நிராகரித்தார்கள்.
அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற தேவர் சமுகத்திற்கும் ஒரு தலைவரும் இல்லையே ஏன் ? தங்களுக்கென ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டிய அவசியம் அம் மக்களுக்கு இல்லை.
இது போல தான் பல சாதி சங்கங்களும் அதற்கான தேவை இல்லாமல் அந்தச் சாதி மக்களாலேயே நிராகரிக்கப்பட்டன.
டாக்டர் ராமதாஸ் பெற்ற வெற்றியை கண்டு வன்னிய மக்களுக்காக போட்டியாக அமைப்புகளை தொடங்க முயன்ற பல தலைவர்கள் தோல்வியையே கண்டனர். அவர்கள் அதற்கு கண்டெடுத்த ஆயுதம் வன்னியர்களின் போராட்டம் காரணமாக பெற்ற 20% இடஒதுக்கீடு பிற சமுதாயத்திற்கு போய் சேருகிறது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு வேண்டும் என்பது தான். ஆனால் இதற்கு வன்னியர்கள் மத்தியிலேயே ஆதரவு இருக்க வில்லை. இன்று பல வன்னிய கிராமங்களில் படித்த இளைஞர்கள் உருவாகி விட்டார்கள். சமுதாயம் முன்னேற தொடங்கியிருக்கிறது. இந்த வாதம் எடுபடவில்லை.
இனி தொடங்கப்படும் எந்தச் சாதிக் கட்சியும் வெற்றி பெற முடியாது. சாதியை மட்டுமே முன்னிறுத்தி அங்கீகாரம் பெற முடியாது. நான் இந்தச் சாதிக் கட்சிகளை விலக்குங்கள் என்ற பதிவு எழுதுவதற்கும் அவசியம் இப்பொழுது இல்லை. ஏனெனில் மக்கள் தாமாகவே அக் கட்சிகளை நிராகரித்து விடுவார்கள்.
இன்று புதியதாக அரசியல் கட்சியை யார் தொடங்கினாலும் அவர்களும் தோல்வியே அடைவார்கள். ஏனெனில் அதற்கான அவசியம் இன்று இல்லை.
6 comments:
//9 பேரை போலீஸாரின் துப்பாகிச் சூட்டிற்கு பலி கொடுத்த எங்கள் சமுதாயத்தின் தியாகம் பற்றி ஊடங்கங்கள் இதுவரை ஒன்றுமே எழுதவில்லை. ஆனால் அவர்கள் எழுதியதெல்லாம் நாங்கள் வெட்டிய மரங்களைத் தான். //
இங்கு சில சாதி அடிப்படையிலான உரிமைகளே இருக்கின்றன. மனித உரிமை என்ற் ஒன்றே இந்தியாவில் இல்லை. பல சாதிகளைவிட மிருகங்களுக்கும், மரங்களுக்கும் அதிக உரிமைகள் உண்டு.
இன்று வரை பா.ம.கவை மரவெட்டிக்கட்சி என்று அழைக்கும் ஊடகங்கள், பி.ஜே.பி யை தலைவெட்டிக்கட்சி என்று ஒருபோதும் சொல்வதில்லையே!
//இங்கு சில சாதி அடிப்படையிலான உரிமைகளே இருக்கின்றன. மனித உரிமை என்ற் ஒன்றே இந்தியாவில் இல்லை.//
அப்படி அல்ல, மனித உரிமை என்று இருக்கிறது. ஆனால் எல்லோரையும் மனிதராய் நினைக்கும் கட்டாயம்தான் இல்லை.
Nanraga ezuthiyirukkireergal. Ithai vida arumuyaga sathikkatchigalai patri munnani pathrikaikalil kooda padittathu illai.
-Bala
வன்னியர் சங்க போராட்டத்தின் போது முதல் மூன்று நாட்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையும் அரசாங்கமும் தலித் மக்களை தூண்டிவிட்டு சாதி மோதலுக்கு வழி வகுத்ததை நேரில் கண்டேண். ஒரு பத்து ஆண்டுகள் வட மாவட்டத்திலே சாதி பிரச்சனை பற்றி எரிந்ததற்கு காவல் துறையும் அரசாங்கமும் தான் காரணம்
These things never reach people via mainstream media. The mainstream media always projects them as if they represent the caste not the people. Ramadoss too has to project himself as a politician no longer a leader of Vanniers.
My opinion is that, Ramadoss, should stop talking about Vanniers and talk about real political issues that affects the people, which I think he has done - he toned down a lot on talking just about them. However, this does not mean that he has to stop representing Vanniers. Here people give more importance to want one says, than to what he does. Let him be a leader of the people, get hold of strong position, and bring about the changes he wants. He is in a position to do that now.
This change has to be welcomed. Hope he will continue in the same vine.
Hope to see a better future for the Dalits too. And hope Thiruma will be able to bring about the same changes to them.
Partha
உண்மையிலேயே நல்லதொரு பதிவு வீரவன்னியன். உங்கள் தரப்பு நியாயங்களை அருமையாக எடுத்துரைதிருக்கிறீர்கள். இன்னும் எழுதுங்கள் நிறைய! இப்படி ஒரு பதிவின் கடைசியில் அரசியல் ஆருடம் தேவையா என்பதையும் யோசித்துக் கொள்ளவும்! ('கருத்து சொல்றாங்களாம்' என்று என்னை திட்ட வேண்டாம்!) அதே போல 'சாதிக் கட்சிகளை விலக்குங்கள்' என்று தலைப்பை பார்த்தவுடன் நான் ஏதோ வழக்கமான 'பா.ம.க. எதிர்ப்பு பதிவு போல'.. அதுவும் வீரவன்னியனிடமிருந்து என்று எதிர் பார்த்து வந்து ஏமாந்ததையும் ஒப்புக் கொள்ள வேண்டும்!
Post a Comment