Friday, October 27, 2006

யதார்த்த சினிமா - தங்கர்பச்சான்

தமிழகத்தில் எத்தனையோ சினிமாக்காரர்கள் தோன்றியிருக்கிறார்கள், ஸ்டைல் என்ற பெயரில் ஊரை கெடுத்து குட்டிச் சுவராக்கியிருக்கிறார்கள், லிப் கிஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ச்சி புயலால் நாசமாக்கியிருக்கிறார்கள், "அவள் அம்மா என் காதலி, என் அப்பா அவள் காதலன்" போன்ற அற்புதமான தத்துவ படங்களை கொடுத்திருக்கிறார்கள், நாளை நாம் தான் தமிழக முதல்வர் என்ற கனவில் கையை சுற்றி சுற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் இமயங்களின் நாறிப் போன கதைகளுக்கு மத்தியில் தங்கர்பச்சானின் படங்கள் தான் சனங்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பலக் காலக்கட்டங்களில் பலர் உருவாகியிருக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் இருந்து வரும் கலைஞர்களால் தான் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த முடிந்திருக்கிறது. சினிமாவின் தரம் என்பது வெறும் கிராபிக்கல் அம்சங்களாக, டெக்னிக்கல் சமாச்சாரங்களாக இருப்பதில்லை. கதையம்சம் தான் படத்தின் தரமாக இருக்க முடியும்.

தமிழ் சினிமாவின் ஸ்டீரியோடைப் படங்களுக்கு மத்தியில் கிராமத்தின் ராஜா - பாரதி ராஜா, தமிழ் சினிமாவின் பாதையை மாற்றி அமைத்தார். சமஞ்சது எப்படி என்ற ரீதியில் பாடல்கள் எழுதிய தாடி மற்றும் குடுமிகளுக்கு மத்தியில் அற்புதமான வைர வரிகளை எழுதிய வைரமுத்து, அறிவுமதி அனைவரும் கிராமத்தான்கள் தான். என்னுடைய தமிழ் ஆசிரியர் கிராமத்தான்களால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்றார். அது உண்மை தான் என்பதை இவர்களைப் போன்றவர்கள் தான் நிருமித்துக் கொண்டிருக்கிறார்கள்

தமிழ் சினிமாவில் பலர் தோன்றியிருந்தாலும், யதார்த்தம், நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு போன்றவற்றுக்கு இங்கு பஞ்சம் அதிகம். அதனை களைந்தவர் தங்கர்பச்சான் தான் என்று உறுதியாக சொல்லலாம். தன்னுடைய அழகி மூலம் நிஜ வாழ்க்கையின் பல யதார்த்தங்களை திரையில் கொண்டு வந்தார். இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இது வரை திரையில் தோன்றாத வன்னிய பூமியை கொண்டு வந்தது. பலாப்பழத்தின் வாசனையை தமிழ் சினிமாவில் காணக் கூடிய முதல் வாய்ப்பு அப்பொழுது தான் கிடைத்தது.

அவருடைய "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" என்ற படத்தை பார்க்கும் பொழுது நான் என் வாழ்க்கையில் கண்ட பல நிகழ்ச்சிகள் நெஞ்சில் உருண்டோடியது.

என்னுடைய அத்தை ஒருவர் இருக்கிறார். அப்பாவின் தங்கை. ஜெயங்கொண்டத்தில் அரசு வேலையில் இருக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். குடிப் பழக்கம் உடையவர். தினமும் ஒயின் ஷாப்பிலும், சாராயக் கடையிலும் தான் வாசம் செய்வார். வீட்டிற்கு வரும் பொழுது தள்ளாடிக் கொண்டே தான் வருவார். கொஞ்சம் கூட பொறுப்பு இருக்காது. அரசு வேலைக்கு ஒழுங்காக செல்ல மாட்டார். கிடைக்கிற எல்லா லோனும் எடுத்து விடுவார். லோன் போக வரும் சம்பளம், சம்பள தேதியில் பிராந்திக் கடையில் கரைந்து போய் விடும். பிறகு வீட்டில் அடி தடி தான். அத்தை கஷ்டப்பட்டு சில வேலைகளுக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். அரசு வேலையில் இருந்தாலும், வருகிற சம்பளத்தை வைத்துக் கொண்டு சுகமாக வாழலாமே என்று பலர் புத்தி மதி சொல்வார்கள். ஒன்றும் காதில் ஏறாது. சம்பள நாள் வந்தால், நேராக அத்தை அவர் ஆபிசுக்கு சென்று விடுவார். அப்பொழுதெல்லாம் வங்கிகளில் பணம் நேரடியாக செல்லாமல் கவரில் சம்பளம் வரும். அவரிடம் இருந்து சம்பள கவர் பிடுங்க ஒரு பெரிய யுத்தமே நடக்கும். பெரிய கச்சேரியே அலுவலக வாசலில் நடக்கும். இந்த கூத்துக்கு பிறகு வேலைக்கு செல்வதையும் மாமா குறைக்க ஆரம்பித்து விட்டார். எதற்கு வம்பு அரசு வேலையாயிற்றே, வேலை போய் விடுமே, என்றாவது ஒரு நாள் திருந்துவார் என்ற எண்ணத்தில் அப்படியே விட்டு விட்டார்கள். அத்தை பல கஷ்டங்களை அனுபவித்தார். இப்படி தொடர்ந்த அவர் வாழ்வில் என் அத்தைப் பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழா ஒரு திருப்புமுனையாக அமைந்து இவரா இப்படி என்று வியந்து போனோம் ? வாழ்க்கையில் ஏற்படும் ஒரு கணம் சிந்தனை, பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. பலர் கூறிய புத்திமதி அவரை மாற்றவில்லை. ஆனால் சில கணம் தன் மகளை பெரிய மனுஷியாக பார்த்த பொழுது அவருக்குள் ஒரு தீப்பொறி எழுந்து அவரது வாழ்க்கையை மாற்றி விட்டது.

வாழ்க்கை ஒரு படிப்பினை. வாழ்க்கையில் நடக்கும் பல மாற்றங்களை திரைப்படத்தில் கொண்டு வருவது முடியாத காரியம். அந்த முடியாத காரியத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை தங்கர்பச்சான் ஏற்படுத்தி இருக்கிறார். "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" படத்தை பார்த்த பொழுது எனக்கு என் மாமாவின் முகம் தான் ஞாபகத்திற்கு வந்தது. தங்கர்பச்சான் முகத்திற்கும் அவர் முகத்திற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. கதையில் நடக்கும் பல, நிஜ வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. என் வாழ்க்கையில் நான் அனுபவிக்க வில்லை என்றாலும் கண் கூடாக பார்த்து இருக்கிறேன்.

அவருடைய சொல்ல மறந்த கதையிலும் சரி, அழகியிலும் சரி வாழ்க்கையின் யதார்த்தம் பிரதிபலிக்கிறது. சொல்ல மறந்த கதையில் சேரன் அனுபவிக்கும் மன உளைச்சலை அவ்வளவு சரியாக இது வரை தமிழ் சினிமாவில் யாரும் பிரதிபலித்தது இல்லை என்றே நினைக்கிறேன். அழகி பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

இந்த திரைப்படங்களை போலவே அவரின் ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு பெரிய மரத்தைப் பற்றிய கதை. ஒரு மரத்தை சுற்றி நிகழும் நினைவுகள், பொருட் செலவுக்காக அந்த மரம் வெட்டப்படும் பொழுது ஏற்படும் உளைச்சல். அதனை சுற்றி பின்னப்பட்ட உணர்வு அலை. எனக்கும் அது போன்ற நினைவுகள் உண்டு.

உண்மையான சனங்களின் கலைஞனாக தங்கர்பச்சானை தான் நினைக்க முடிகிறது.தமிழ் சினிமாவிற்கு தங்கத் தாமரை பெற்று தரும் தகுதி தங்கர்பச்சானுக்கு மட்டுமே உண்டு.

இது ஒரு மீள்பதிவு

4 comments:

BadNewsIndia said...

நல்ல பதிவு.
நீங்கள் சொன்னது போல், அழகியில் காட்டிய யதார்தம் இது வரை நான் பார்த்த எந்த படத்திலும் இல்லை.
பள்ளிக்கால ஞாபகத்தை எவ்வளவு அழகாக தூண்டி விட்டது அதன் காட்சிகள்.

தீப்பொறி மனதில் வந்தால் மாற்றங்கள் உருவாகும்னு சரியா சொன்னீங்க.

திரைப்படங்கள் மூலமே நல்ல மாற்றங்கள் கொண்டு வரலாம்.
நல்ல விஷயம் சொல்லக்கூட வேண்டாம், மனதை அமைதியாக வைத்து, மனதின் ஈரத்தை அப்பப்ப ஞாபகப்படுத்தர மாதிரி படங்கள் வந்தாலே போதும். ஊர் உருப்பட்டுடும்.

simplea அழகா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

murali said...

வீர வன்னியன்,
நன்றி.தங்கர் மிக நல்ல கலைஞன்.நல்ல பதிவு.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Anonymous said...

//அழகியில் காட்டிய யதார்தம் இது வரை நான் பார்த்த எந்த படத்திலும் இல்லை.//

எது சார் , குருவி கொத்துன கொய்யாபழம் பாட்டா ? அருமையிலும் அருமைதான் போங்க .

mathiyazhagan said...

manidha nunniya unarvugalai miga azhagaaga padam pidithu kaattiyirukkum vidham arumai. Thangarukku inaiyaana oruvan indraiya thamizh cinemaa soozhalil vaeru evanum illai. Solla marandha Kadhai arpudham. vanniyan mattumdhaan vaeru endha kavarchikkum idam kodukkaadhavan...ippadi puratchiyaagavum seyya koodiyavan.