Friday, October 20, 2006

சிவகாசி பிஞ்சுகள்

தீபாவளி பட்டாசு சத்தங்களை கேட்கும் பொழுதெல்லாம் எங்கோ தூரத்தில், சிவகாசியில் ஒரு மழலையின் அபயக் குரலாகத் தான் எனக்கு தோன்றும். என்னுடைய குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவாது தீபாவளியின் பொழுது பட்டாசுகள் கொளுத்தலாம் என்ற என் எண்ணத்தை கூட சிவகாசி பிஞ்சுகளின் சோகக் கதைகளை கேட்ட பிறகு அடியோடு மாற்றிக் கொண்டேன்.

இந்தப் பதிவு ஏதோ வலைப்பதிவுகளில் சில பின்னுட்டங்களை பெறுவதற்காகவோ அல்லது அதிக ஓட்டுகளைப் பெற்று தமிழ்மணத்தின் சம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காகவோ எழுதவில்லை என்பதை நான் உண்மையான உள்ளத்துடன் இங்கு பறைசாற்றி விட நினைக்கிறேன்.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் என் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு என்னுடைய இந்த வலைப்பதிவு இந்த வருடம் ஒரு வடிகாலாக அமைந்து விட்டது.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் எல்லா ஊடகங்களிலும் அலசப்படும் இந்த விடயம், பிறகு ஏதேனும் ஒரு பரபரப்பு செய்திகளில் காணாமல் போய் விடும். அடுத்த தீபாவளிக்கு தான் அனைவரும் இதனை மறுபடியும் நினைத்துப் பார்ப்போம்.

இந்த இடைவேளையில் சிவாகாசியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை, மழலைப் பருவ விளையாட்டுகள் எல்லாம் பறிபோய் விடும். காலையில் படிப்பு பின் மாலை முழுவதும் விளையாட்டு என்று பாரதி நகரத்தில் இருக்கும் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு தான் பாடினான் போலும். சிவகாசியிலும், பிற ஏழ்மை கிராமத்திலும் இருக்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் வேலை தான்.

சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக சுமார் 500 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த 500 தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மட்டும் சுமார் 20,000 முதல் 40,000 வரை இருக்ககூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 90 விழுக்காட்டில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு கரியாகி விடுகிறது.

இந்த ஒரு நாள் கூத்துக்காக சிவகாசி வருடம் முழுக்க உழைக்கிறது. பல மழலைகள் தங்கள் மழலைப் பருவத்தை இழந்து தவிக்கின்றனர். பலக் குழந்தைகள் பட்டாசு தயாரிக்கும் பொழுது நேரும் விபத்துக்களாலும், பல வித நோய்களாலும் மரணமடைகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம். ஆனால் நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.

பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அதன் மூலம் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதாக வெளிஉலகுக்கு பட்டாசு முதலைகள் காண்பிப்பார்கள்.

பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.

1989ம் ஆண்டு மினம்பட்டி என்ற கிராமத்தில் நடந்த ஒரு வெடிவிபத்தில் 30பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா டூடே பத்திரிக்கை பின்பு நடந்திய விசாரணைகளில் சுமார் 300 பேர் இறந்ததாகவும், அதில் 200 பேர் குழந்தைகள் என்றும் தெரியவந்தது. அரசு அதிகாரிகள் உதவியுடன், பட்டாசு முதலைகள் இவ்வாறான பல செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றனர்.

பட்டாசு சுற்றும் பொழுது மருந்துப் பெருட்களுடன் வாழ்வதால் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகளின் கற்பப்பை வளர்ச்சி குறைந்து போவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த குழந்தைகளின் வாழ்நாள் கேள்விக்குறியுடன் தான் தொடங்குகிறது.

இப்படி பல குழந்தைகளின் பரிதாப வாழ்க்கையின் வெளிப்பாடு தான் நம்முடைய தீபாவளி மத்தாப்புகளும், புஸ்வானங்களும், காதைப் பிளக்கும் அணுகுண்டுகளும்.

ஒவ்வொரு மத்தாப்பின் ஒளியிலும் தெரிவது அழகான வண்ணங்களாக இருந்தாலும் அதற்கு பின் இருப்பது என்னவோ சிகப்பு நிறம் தான்... ஆம் அது சிவகாசி பிஞ்சுகளின் ரத்தம்..

1 comment:

bala said...

//ஆம் அது சிவகாசி பிஞ்சுகளின் ரத்தம்..//

வேதனை..பட்டாசுகள் என்பது ஒரு "national waste" நம்ம பகுத்தறிவு கட்சிகள் முணுக்குன்னா விழா எடுத்து மகிழ்வது போல்.

தமிழ் இனக் காவலர் கருணாநிதி அவர்களும்,தமிழ் மொழிக்காவலர் மருத்துவர் ராமதாசும் இரட்டை குழல் துப்பாக்கியாக வெடித்து இந்த பட்டாசு தொழிற்சாலைகளை என்று மூடுகிறார்களோ அன்று தான் அந்த பிஞ்சுகளுக்கு தீபாவளி.
செய்வார்கள் என்று பகுத்தறிவோடு காத்திருப்போம்.
சரியான சமயத்தில் இந்த அவலத்தை சுட்டிக் காட்டிய வீரவன்னியனுக்கு நன்றி.

பாலா