Tuesday, November 01, 2005

சிவகாசி பிஞ்சுகள்

தீபாவளி பட்டாசு சத்தங்களை கேட்கும் பொழுதெல்லாம் எங்கோ தூரத்தில், சிவகாசியில் ஒரு மழலையின் அபயக் குரலாகத் தான் எனக்கு தோன்றும். என்னுடைய குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவாது தீபாவளியின் பொழுது பட்டாசுகள் கொளுத்தலாம் என்ற என் எண்ணத்தை கூட சிவகாசி பிஞ்சுகளின் சோகக் கதைகளை கேட்ட பிறகு அடியோடு மாற்றிக் கொண்டேன்.

இந்தப் பதிவு ஏதோ வலைப்பதிவுகளில் சில பின்னுட்டங்களை பெறுவதற்காகவோ அல்லது அதிக ஓட்டுகளைப் பெற்று தமிழ்மணத்தின் சம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காகவோ எழுதவில்லை என்பதை நான் உண்மையான உள்ளத்துடன் இங்கு பறைசாற்றி விட நினைக்கிறேன்.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் என் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு என்னுடைய இந்த வலைப்பதிவு இந்த வருடம் ஒரு வடிகாலாக அமைந்து விட்டது.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் எல்லா ஊடகங்களிலும் அலசப்படும் இந்த விடயம், பிறகு ஜெயலட்சுமி கதையிலும், கராத்தே மேயர் கதையிலும் மறந்து போய் விடும். அடுத்த தீபாவளிக்கு தான் அனைவரும் இதனை மறுபடியும் நினைத்துப் பார்ப்போம்.

இந்த இடைவேளையில் சிவாகாசியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை, மழலைப் பருவ விளையாட்டுகள் எல்லாம் பறிபோய் விடும். காலையில் படிப்பு பின் மாலை முழுவதும் விளையாட்டு என்று பாரதி நகரத்தில் இருக்கும் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு தான் பாடினான் போலும். சிவகாசியிலும், பிற ஏழ்மை கிராமத்திலும் இருக்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் வேலை தான்.

சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக சுமார் 500 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த 500 தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மட்டும் சுமார் 20,000 முதல் 40,000 வரை இருக்ககூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 90 விழுக்காட்டில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு கரியாகி விடுகிறது.

இந்த ஒரு நாள் கூத்துக்காக சிவகாசி வருடம் முழுக்க உழைக்கிறது. பல மழலைகள் தங்கள் மழலைப் பருவத்தை இழந்து தவிக்கின்றனர். பலக் குழந்தைகள் பட்டாசு தயாரிக்கும் பொழுது நேரும் விபத்துக்களாலும், பல வித நோய்களாலும் மரணமடைகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம். ஆனால் நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.

பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அதன் மூலம் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதாக வெளிஉலகுக்கு பட்டாசு முதலைகள் காண்பிப்பார்கள்.

பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.

1989ம் ஆண்டு மினம்பட்டி என்ற கிராமத்தில் நடந்த ஒரு வெடிவிபத்தில் 30பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா டூடே பத்திரிக்கை பின்பு நடந்திய விசாரணைகளில் சுமார் 300 பேர் இறந்ததாகவும், அதில் 200 பேர் குழந்தைகள் என்றும் தெரியவந்தது. அரசு அதிகாரிகள் உதவியுடன், பட்டாசு முதலைகள் இவ்வாறான பல செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றனர்.

பட்டாசு சுற்றும் பொழுது மருந்துப் பெருட்களுடன் வாழ்வதால் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகளின் கற்பப்பை வளர்ச்சி குறைந்து போவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த குழந்தைகளின் வாழ்நாள் கேள்விக்குறியுடன் தான் தொடங்குகிறது.

இப்படி பல குழந்தைகளின் பரிதாப வாழ்க்கையின் வெளிப்பாடு தான் நம்முடைய தீபாவளி மத்தாப்புகளும், புஸ்வானங்களும், காதைப் பிளக்கும் அணுகுண்டுகளும்.

ஒவ்வொரு மத்தாப்பின் ஒளியிலும் தெரிவது அழகான வண்ணங்களாக இருந்தாலும் அதற்கு பின் இருப்பது என்னவோ சிகப்பு நிறம் தான்... ஆம் அது சிவகாசி பிஞ்சுகளின் ரத்தம்..

6 comments:

Sri Rangan said...

ஐயா வீரவன்னியன்,இந்தப் பதிவுக்காக உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி!இந்தப் பிஞ்சுகளில் குருதியை உறிஞ்சி ஏப்பமிடும் தொழிற்சாலைகள் ஒருபுறமிருக்க இந்த அமைப்பில் சிறார் உழைப்பின்றி வாழ முடியாத குடும்பங்களைப்போலத்தான் இன்றைய பல்தேசக் கம்பனிகளுக்கும் சிறார் உழைப்பு அவசியமாக இருக்கு.அடிடாஸ,பூமா போன்ற நிறுவனங்களுக்காக உலகத்தில் சுமார் மூன்று இலட்சம் குழந்தைகள் மாடாய் உழைக்கிறர்hகள்.பச்சை மண்கள் தெந்தகப் பாக்டரியில் படும் வேதனை சொல்ல முடியாத சோகமையா!

Anonymous said...

UNMAIYAI ULLATHU ULLAP PADI SONNAMAIKKU VAZTTHUKKAL.....NITCHAYAM MATRAM UNDAKUM.....

Bharathi said...

அதிர்ச்சியாக உள்ளது. சிவகாசியில் 15,16 வயது பையன்கள் தான் வேலை செய்வதாக நினைத்தேன். சிறு குழந்தைகள்?? குரூரம்..

இது இன்னும் தொடராமல் இருக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்? அனைத்து ஆலோசனைகளையும் இங்கு எழுதுங்கள். இந்த கொடுமையை எதிர்த்து ஒரு வலைத்தளம் ஆரம்பித்து மக்களின் கவனத்துக்கு கொண்டு போகலாமா?

Anonymous said...

நம்மைப்போன்ற வலைஞர்கள், வலைப்பூக்களில் ஆதங்கத்தை பதிவதுடன் மட்டும் நில்லாமல்...

பட்டாசு வாங்க மாட்டேன், கொளுத்தமாட்டேன் என்ற கோஷங்களுடன் நில்லாமல்..

எத்தனை பேர் ஆக்கபூர்வமான செயல்களில் இறங்கி உள்ளோம்..

நாங்கள் கல்லூரி நண்பர்கள் அனைவரும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் முடிந்த தொகையை பங்களித்து, குழந்தை தொழிலாளர்களுக்கு படிப்பு சொல்லித்தரும் சில கல்வி நிறுவனங்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு உதவி வருகின்றோம்..

வலைத்தளம் ஆரப்பிப்பதாலோ.. அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போவதில்லை, பிரச்சனையை பற்றி கவலைப்படுவதை விட வேறோடு களைய முற்ப்படுவோம்..

-
செந்தில்/Senthil

Bharathi said...

செந்தில்: அப்படிப்பட்ட கல்வி நிறுவனங்கள் பெயரையும் முகவரியையும் கொடுங்கள், நன்றி.

வீரவன்னியன் said...

பாரதி,

என்னுடைய மற்றொரு பதிவான "நம் தேச குழந்தைகள்" என்ற பதிவில் CRY என்ற அமைப்பை பற்றியும், அதன் சுட்டியையும் கொடுத்திருக்கிறேன்.

இது சிவகாசியில் இருக்கும் குழந்தைகளுக்கு நேரடியாக சென்று சேராது. ஆனால் அந்தக் குழந்தைகளைப் போல உள்ள பல கோடி இந்திய குழந்தைகளுக்கு இந்த நிதி சென்று சேரும்.

நான் அந்த அமைப்பு மூலமாகத் தான் என்னாலான கடமைகளை செய்கிறேன்.

உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்