ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றே யாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.
தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.
நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால் அதன் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும் அது மறை நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன்.
மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால், நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல்தான் எதிர்க்கிறேனே யொழியப் புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்
- தந்தை பெரியார்
2 comments:
Very good points..
It's should go to tamil community in the wesern world as well
ஒரு மனிதனுடைய நிரந்தர அடையாளமே அவன் தாய்மொழிதான். தேச அடையாளம் என்பது காலத்திற்குக் காலம் மாறுவது. தற்போது இருக்கும் இந்தியா எனும் நாடு ஐரோப்பியர்கள் வரும் வரை இருக்கவில்லை. பல இறைமையுள்ள தனி இராச்சியங்களாகவே அப்போதைய இந்தியாவின் பகுதிகள் இருந்து வந்தன. பின்னர் ஐரோப்பியர்கள் வந்து இராச்சியங்களைக் கைப்பற்றி எல்லைகளை மாற்றியமைத்தனர். அதே போல் இதே எல்லைகள் இனி வரும் காலங்களிலும் மாறலாம். அதன் மூலம் எமது தேசிய அடையாளம் மாறலாம். ஆனால் எங்கு போனாலும் நாம் தமிழர் எனும் அடையாளம் மாறாது. இப்போது புலம் பெயர்ந்து வாழும் பல தமிழர்களும் அந்தந்த நாடுகளின் குடியிரிமை பெற்று வாழ்கிறார்கள். இப்போது அவர்களின் தேசிய அடையாளம் மாறிவிட்டது. ஆனால் தமிழர் எனும் அடையாளம் மாறாது. எனவே பெரியார் சொன்னது போல் எம் மொழிதான் எமது அடையாளம். அதைக் காக்க வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் உண்டு.
Post a Comment