Sunday, November 06, 2005

சந்திரிகாவும், ரத்த வெறியாட்டமும்

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் அரசியல் வாழ்க்கையின் இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிப்பது இலங்கையில் இருப்பவர்களுக்கு கவலை அளித்ததாக தெரியவில்லை. ஆனால் நம்முடைய இந்து பத்திரிக்கைக்கு அது ஒரு கவலைக்குரிய விடயமாக தெரிகிறது. ஏனெனில் இந்துவின் நடுப்பக்க கட்டுரைகளில் அதிகமாக பாசமூட்டி, தடவிக்கொடுக்கப்பட்ட ஒரே தலைவர் சந்திரிகா அவர்கள் தான். உலகின் வேறு எந்த தலைவருக்கும், ஏன் இந்திய தலைவர்களுக்கு கூட கொடுக்காத மரியாதையை இந்து சந்திரிகாவிற்கு வழங்க தவறியதில்லை.

சந்திரிகா மறுபடியும் முக்கியத்துவம் பெற என்ன வழிகள் இருக்கிறது என்பது குறித்து இந்துவின் நிருபமா அவர்கள் இன்றைய நடுப்பக்கத்தில் ஆராய்ச்சி செய்திருந்தார். படிக்க சுவையாக இருந்தது.

ஜெ.வி.பி போன்ற இனவாத சிங்கள வெறி குழுக்களை Radical அமைப்புகள் என்று மிருதுவாக வர்ணிக்கும் இந்து, புலிகள் என்றால் Chauvinist, bigot, racist போன்ற பதங்களை கையாளும்.

இதைத் தான் நடுநிலை நாளேடு என்று தோழர் ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற அறிவுஞீவிகள் போற்றுகிறார்கள்

தான் ஜனாதிபதியாக இருந்த காலக்கட்ட நினைவுகளை கடந்த வாரம் வெளியிட்ட சந்திரிகா, தன்னுடைய ஜனாதிபதி காலத்தில் அதிகமான போர்களை நடந்த வில்லை என்று கூறியிருக்கிறார் - I have not stained my hands with mud or blood

இது எவ்வளவு பெரிய பொய். இலங்கையில் ரத்த வெறியாட்டம் நடந்த முக்கியமான காலக்கட்டத்தில் சந்திரிகா தானே ஆட்சி செய்தார். இந்த ரத்த வெறியாட்டத்திற்கு சந்திரிகா தானே முக்கியமான காரணகர்த்தா. யாழ்ப்பாண தாக்குதல் யார் தலைமையில் நடந்தது ? பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக இடமாறிய காலத்தில் யார் ஆட்சி செய்தது ?

பிரஞ்ச் புரட்சியின் பொழுது "பிரட் கிடைக்கவில்லையா கேக் சாப்பிடுங்கள்" என்றானாம். தமிழ் பூமியில் ரத்த வெறியாட்டம் ஆடிய சந்திரிகா, என் ஆட்சியில் ரத்தக்கறை படியவில்லை என்று சொல்வதும் அது போல தான் உள்ளது.

நான் ஈழப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவன் இல்லை. அவர்களின் உண்மையான சோகம் புரியாது. ஆனால் ஈழ நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில் சந்திரிகாவின் பேச்சு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாக நினைக்கிறேன். என் கண்டனத்தைக் கூறவே இந்தப் பதிவு

Tuesday, November 01, 2005

நம் தேச குழந்தைகள்

விடுதலைப் புலிகள் சிறுவர், சிறுமிகளை படைகளில் சேர்ப்பதாக அவ்வப்பொழுது நம்முடைய இந்துவும், தினமலரும் முதலைக் கண்ணீர் வடிப்பதுண்டு.

சிறுவர்களை படைகளில் சேர்ப்பதை வன்மையாக கண்டிக்கிற அதே வேளையில், இந்தியாவில் இருக்கும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஒரு புள்ளி விபரம்

உலகிலேயே மிக அதிகமான குழந்தை தொழிலாளர்கள் இருக்கும் நாடு நமது அண்ணை பாரத பூமி தான்.

அரசு வெட்கமில்லாமல் கொடுத்துள்ள புள்ளி விபர கணக்குப்படி இந்தியாவெங்கும் 2கோடி குழந்தை தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஆனால் உண்மை நிலவரம் இதனை விட அதிகம் இருக்கும்.

பல ஆண்டுகளாக பல அமைப்புகள் தொண்டை வற்ற கூக்குரலிட்டு பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்துவின் நடுப்பக்கத்தில் பூலோகத்தின் அண்ட சராசரங்களில் இருக்கும் அறிவுஞீவிகளை அழைத்து புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக எழுதிக் கிழிக்கும் இந்து தன் கேண்டீனிலும், தன் அலுவலகத்திற்கு எதிரே இருக்க்கும் டீ கடைகளிலும் வேலை செய்யும் சிறுவர்களைப் பற்றி என்றாவது எழுதியதுண்டா ?

தன்னை ஒரு வல்லரசாக நினைத்து கொண்டு நாட்டாமை செய்ய நினைக்கும் நம் புண்ணிய தேசம், இரணுவத்திற்கு ஒரு வருடத்திற்கு கொட்டித் தீர்க்கும் பணத்தில் ஒரு கடுகு அளவு பணத்தை தான் கல்வி, ஏழ்மை ஓழிப்பு போன்றவற்றுக்கு செலவழிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித் மற்றும் ஓடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கின்றனர். அவர்களுடைய குடும்ப ஏழ்மை, படிப்பறிவின்மை போன்றவை தான் இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

நம் அண்டை தேச பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கும் முன்பு நம் லட்சணத்தையும் கொஞ்சம் கவனிப்பதே சிறந்ததாக இருக்கும்.

நம் தேசத்தில் உள்ள பல குழந்தைகளுக்கு அவர்களின் மழலைப் பருவத்தை மகிழ்ச்சியாக்கி கொடுப்போம். பல NGO நிறுவனங்களின் சேவைக்கு உங்களால் முடிந்ததை கொடுங்கள்

தீபாவாளி பட்டாசு சந்தோஷத்தை விட அது அதிக மகிழ்ச்சியை கொடுக்கும், அந்த மகிழ்ச்சிக்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்

சிவகாசி பிஞ்சுகள்

தீபாவளி பட்டாசு சத்தங்களை கேட்கும் பொழுதெல்லாம் எங்கோ தூரத்தில், சிவகாசியில் ஒரு மழலையின் அபயக் குரலாகத் தான் எனக்கு தோன்றும். என்னுடைய குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவாது தீபாவளியின் பொழுது பட்டாசுகள் கொளுத்தலாம் என்ற என் எண்ணத்தை கூட சிவகாசி பிஞ்சுகளின் சோகக் கதைகளை கேட்ட பிறகு அடியோடு மாற்றிக் கொண்டேன்.

இந்தப் பதிவு ஏதோ வலைப்பதிவுகளில் சில பின்னுட்டங்களை பெறுவதற்காகவோ அல்லது அதிக ஓட்டுகளைப் பெற்று தமிழ்மணத்தின் சம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காகவோ எழுதவில்லை என்பதை நான் உண்மையான உள்ளத்துடன் இங்கு பறைசாற்றி விட நினைக்கிறேன்.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் என் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு என்னுடைய இந்த வலைப்பதிவு இந்த வருடம் ஒரு வடிகாலாக அமைந்து விட்டது.

ஒவ்வொரு தீபாவளியின் பொழுதும் எல்லா ஊடகங்களிலும் அலசப்படும் இந்த விடயம், பிறகு ஜெயலட்சுமி கதையிலும், கராத்தே மேயர் கதையிலும் மறந்து போய் விடும். அடுத்த தீபாவளிக்கு தான் அனைவரும் இதனை மறுபடியும் நினைத்துப் பார்ப்போம்.

இந்த இடைவேளையில் சிவாகாசியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை, மழலைப் பருவ விளையாட்டுகள் எல்லாம் பறிபோய் விடும். காலையில் படிப்பு பின் மாலை முழுவதும் விளையாட்டு என்று பாரதி நகரத்தில் இருக்கும் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கு தான் பாடினான் போலும். சிவகாசியிலும், பிற ஏழ்மை கிராமத்திலும் இருக்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் வேலை தான்.

சிவகாசியில் சிறிதும் பெரிதுமாக சுமார் 500 பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த 500 தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மட்டும் சுமார் 20,000 முதல் 40,000 வரை இருக்ககூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 90 விழுக்காட்டில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு கரியாகி விடுகிறது.

இந்த ஒரு நாள் கூத்துக்காக சிவகாசி வருடம் முழுக்க உழைக்கிறது. பல மழலைகள் தங்கள் மழலைப் பருவத்தை இழந்து தவிக்கின்றனர். பலக் குழந்தைகள் பட்டாசு தயாரிக்கும் பொழுது நேரும் விபத்துக்களாலும், பல வித நோய்களாலும் மரணமடைகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கலாம். ஆனால் நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.

பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அதன் மூலம் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதாக வெளிஉலகுக்கு பட்டாசு முதலைகள் காண்பிப்பார்கள்.

பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.

1989ம் ஆண்டு மினம்பட்டி என்ற கிராமத்தில் நடந்த ஒரு வெடிவிபத்தில் 30பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா டூடே பத்திரிக்கை பின்பு நடந்திய விசாரணைகளில் சுமார் 300 பேர் இறந்ததாகவும், அதில் 200 பேர் குழந்தைகள் என்றும் தெரியவந்தது. அரசு அதிகாரிகள் உதவியுடன், பட்டாசு முதலைகள் இவ்வாறான பல செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றனர்.

பட்டாசு சுற்றும் பொழுது மருந்துப் பெருட்களுடன் வாழ்வதால் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகளின் கற்பப்பை வளர்ச்சி குறைந்து போவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த குழந்தைகளின் வாழ்நாள் கேள்விக்குறியுடன் தான் தொடங்குகிறது.

இப்படி பல குழந்தைகளின் பரிதாப வாழ்க்கையின் வெளிப்பாடு தான் நம்முடைய தீபாவளி மத்தாப்புகளும், புஸ்வானங்களும், காதைப் பிளக்கும் அணுகுண்டுகளும்.

ஒவ்வொரு மத்தாப்பின் ஒளியிலும் தெரிவது அழகான வண்ணங்களாக இருந்தாலும் அதற்கு பின் இருப்பது என்னவோ சிகப்பு நிறம் தான்... ஆம் அது சிவகாசி பிஞ்சுகளின் ரத்தம்..