Thursday, March 17, 2005

தலித் - வன்னியர் இணைப்பு

ரோசாவசந்தின் பதிவிற்கு பின்னூட்டமளித்த பலர், திருமாவளவன் டாக்டர் ராமதாசுடன் சேர்ந்தது தான் மிகத் தவறான காரியம் என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மற்றொருவரோ, தலித்துகளை தாக்கிய ராமதாசுடன் திருமாவளவன் கைகோர்த்து உள்ளார் என்று தெரிவித்திருக்கிறார்.

இது உண்மை தெரியாமல் சொல்லப்படும் உளறல்கள்.

பொதுவாக தலித், வன்னியர் என்ற சொல்லப்படும் மக்களை சாதியை விலக்கிவிட்டு பார்த்தால் இருவரின் வாழ்க்கை தரத்திற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அடித்தட்டு உழைப்பாளிகளாக இருப்பவர்கள் இம் மக்கள் தான். ஆனால் வன்னியர்களுக்கு தாம் தலித்துகளை விட மேலானவர்கள் என்ற எண்ணம் உண்டு. எங்கள் கிராமத்தில் முக்கியமான இரு சாதிகள் முதலியார் மற்றும் வன்னியர். வன்னியர்கள் தலித்துகளை எப்படி கீழாக பார்க்கிறார்களோ அதைப் போலத் தான் முதலியார்கள் எங்களைப் பார்ப்பார்கள்.

சமுதாயத்தின் கீழ்தட்டில் இருந்த இரு சமுதாயங்கள் இரு வேறு மனோபாவங்களால் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கீழ் மட்டத்தில் இருந்த இரண்டு சமுதாயங்களின் விழிப்புணர்வுக்கு காரணகர்த்தாக்கள் டாக்டர் ராமதாஸ் மற்றும் திருமாவளவன்.

வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே பல கலவரங்கள் நடந்திருக்கின்றன. தலித்துகள் மீதான வன்னியர்களின் தாக்குதலையும் நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஆனால் வன்னியர்களின் இந்த மனோபாவத்தை மாற்ற டாக்டர் ராமதாஸ் பாடுபட்டார் என்பது தான் எந்த மீடியாக்களும் சொல்லாத உண்மை.

டாக்டர் ராமதாசின் அரசியல் வரலாற்றை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கொள்கையுடன் இருந்த காலம். கொள்கையை காற்றில் பறக்க விட்ட காலம். அவர் கொள்கையுடன் இருந்த காலத்தில் யாருமே அவரை கண்டுகொள்ள வில்லை. கொள்கையை காற்றில் பறக்க விட்டப் பிறகு தான் கலைஞர், ஜெயலலிதா என அனைவருக்கும் அவர் தேவைப்படும் பொருளாகிவிட்டார். மீடியாக்களும் அவரை கண்டு கொண்டு கிழிக்க தொடங்கின.

டாக்டர் ராமதாஸ் - திருமா இணைப்பு ஏதோ புதியதாக நடந்து விட்டதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் புதியதாக கடந்த சில மாதங்களில் நடந்த நிகழ்வு அல்ல. பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

குடிதாங்கி என்று ஒரு ஊர். ஒரு தலித் இறந்து விட்டார். தலித்தின் உடல் வன்னியர்கள் இருக்கும் கிராமத்தின் வழியாகத் தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒரு தலித் சடலம் வன்னியர்கள் இருக்கும் பகுதியில் செல்வதை வன்னிய மக்கள் அனுமதிக்கவில்லை. பிரச்சனை பெரியதாகி கலவரம் வரும் நிலை. டாக்டர் ராமதாசுக்கு இந்த செய்தி தெரியவந்தது. உடனடியாக இந்த கிராமத்திற்கு வந்தார். வன்னிய மக்களிடம் பேசிப் பார்த்தார். ஒன்றும் நடக்க வில்லை. வன்னிய மக்களின் எதிர்ப்பை மீறி அந்த தலித்தின் சடலத்தை வன்னிய கிராமத்தின் வழியாகவே கொண்டு சென்று இறுதிச்சடங்கள் செய்யவைத்தார் டாக்டர் ராமதஸ். வன்னியர்களின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்து நெகிழ்ந்துப் போன திருமாவளவன் டாக்டர் ராமதாசுக்கு "குடிதாங்கிக்கொண்டான்" என்று பெயர் சூட்டினார்.

அரசியல் நிகழ்வுகள் இருவரையும் பிரித்து விட்டது. இப்பொழுது சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் இரு சமுதாயங்கள் ஒன்று சேர்ந்திருப்பது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் டாக்டர் ராமதஸ் இந்த இரண்டு சமுதாய மக்களையும் ஒன்றிணைக்க ஆராம்பத்தில் இருந்தே முயற்சி மேற்கொண்டவர் என்பது எந்த ஊடகங்களும் வெளிக்கொண்டு வரவே இல்லை.

ராமதாசின் தற்போதைய அரசியல் கொள்கை பிடிப்புடன் இருப்பதாக நான் வாதாடிக்கொண்டிருக்க மாட்டேன். அதில் எந்தவித கொள்கையும் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் கொள்கை பிடிப்புடன் இருந்த பொழுது இந்த அரசியல் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்றே கலைஞர் நினைத்தார். திமுகவின் பாரம்பரிய ஓட்டு வங்கிகளான வன்னியர்கள் எங்கே பாமக வுடன் சென்று விடுவார்களோ என்ற அவரின் அச்சம் அவரை பாமக வை அழிக்க தூண்டியது.

ஒரு காலத்தில் பாமக வுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே தருவேன் என்று கூறிய கலைஞர் இன்று பல பாரளுமன்றத் தொகுதிகளையும், ராஜ்சபா இடத்தையும் கொடுத்திருக்கிறார். இதற்கு டாக்டர் ராமதாஸ் கொடுத்த விலை "கொள்கைகள்". கொள்கைகளுடன் இருந்திருந்தால் இன்று ராமதாஸ் காணாமல் போயிருப்பார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் ராமதசைப் பற்றி பல கட்டுரைகளை அவர் கொள்கைப் பிடிப்புடன் இருந்த பொழுது எழுதியிருக்கிறார். அது எல்லாம் அச்சுப் பிரதிகள். கிடைத்தால் வெளியிடுகிறேன். தமிழகத்தில் கொள்கை பிடிப்புடன் இருக்கும் ஒரே அரசியல் தலைவர் டாக்டர் ராமதாஸ் தான் என்று எழுதியிருப்பார். ஆனால் அந்தக் கட்டுரையை இப்பொழுது படித்தால் நல்ல நகைச்சுவையாக தோன்றும்.

எந்த கொள்கை பிடிப்புடன் கலைஞர் மஞ்சள் துண்டை போட்டு கொண்டிருக்கிறாரோ, எந்த கொள்கையுடன் கலைஞர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தாரோ, எந்த கொள்கையுடன் அதிமுகவும், திமுகவும் காங்கிரஸ், பாரதிய ஜனதா என்று அணி மாறிக் கொண்டே இருக்கிறார்களோ, எந்த கொள்கையுடன் வைகோ ஜெயலலிதாவுடனும், கலைஞருடனும் கூட்டணி அமைத்தாரோ, எந்த கொள்கையுடன் வீரமணி ஜெயலலிதாவை ஆதரிக்கிறாரோ, எந்த கொள்கையுடன் லல்லுவின் ஊழலை எதிர்க்கும் பாரதிய ஜனதா ஜெயலலிதாவுடன் கூட்டணி சேருகிறதோ, எந்த கொள்கையுடன் பிரதமர் பதவியை நிராகரித்த சோனியா ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணியை எதைச் செய்தாவது பதவியில் அமர்த்த துணிந்தாரோ அதேக் கொள்கையுடன் தான் ராமதசும் இருக்கிறார்.

ஆனால் மற்றவற்றைக் கண்டுகொள்ளாத மீடியாக்கள், வலைப்பதிபவர்கள் ராமதாசை மட்டும் விமர்சிப்பதை பாகுபாடு என்று தான் என்னால் சொல்ல முடிகிறது.

9 comments:

ROSAVASANTH said...

உங்களுடன் சில மாறுபாடுகள் இருந்தாலும் நான் சொல்லவந்த சில விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பாய் குடிதாங்கி சம்பவத்தை முன்வைத்து, அதற்கு பிறகான மோதல்கள், இன்றய இணைவை முன்வைத்து ஒரு பதிவு எழுத தொடங்கி முடிக்கவில்லை.

ஆனால் தலித்/வன்னியர் மோதல் நடந்த காலங்களில் ராமதாஸின் பல பேட்டிகள் முழுக்க தலித் விரோதமாகவே இருந்திருக்கின்றன. இன்றய இணைவு இருவருமே அரசியல் கட்டாயங்களை உணர்ந்து ஏற்படுத்திகொண்டது. அது பலர் கண்களை உறுத்துகிறது.விரிவாய் இது குறித்து எழுதும் நோக்கம் உண்டு.

வீரவன்னியன் said...

தலித் விரோதம் என்று சொல்வதை விட விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகத் தான் பேசினார் என்று சொல்லலாம். இதுவும் அரசியல் காரணங்களுக்காகத் தான். அது போல திருமாவளவன் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்ட பொழுதும் கலவரங்கள் நடந்தது உண்மை.

தங்களுக்குள் அடித்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று இப்பொழுதாவது உணர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இரு சமுதாயத்தின் இணைப்பு வடமாவட்டங்களில் ஒரு புதிய அரசியல் சக்தியின் உதயம் என்பது தான் பலருக்கு உறுத்தலாக இருக்கிறது.

வன்னியர் சங்கம் பாமக வாக உதயமான பொழுது அனைவருக்கும் எரிச்சல் ஏற்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் அரசியலுக்கு வந்த பொழுதும் எரிச்சல் ஏற்பட்டது. சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் இருப்பர்கள் பெரும் அங்கீகாரமே இந்த எரிச்சலுக்கு முக்கிய காரணம்.

இது பிராமணர்களுக்கு மட்டும் என்று சொல்ல முடியாது. இந்த இரு சமுதாயம் தவிர பிற அனைத்து சமுதாயத்தினருக்கும், அரசியல்தலைவர்களுக்கும் இந்த இணைப்பு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

Thangamani said...

ஆரம்ப காலகட்டங்களில் மக்கள் விழிப்புணர்வடைய இராமதாஸ் கடுமையாக உழைத்தார் என்பதை எனது நெருங்கிய நண்பர்களின் மூலம் நான் அறிவேன். ஆனால் அப்போது நிறுவனப்படுத்தப்பட்ட கட்சிகளால் அலட்சியப்படுத்தப்படதும், பிறகு கொள்கைகளை துறந்தபிறகு அவர்களால் அணைக்கப்பட்டதும் மிக முக்கியமானது. இது நமது அமைப்பைப்பற்றிய தகவல்களைத் தருகிறது. பதிவுக்கு நன்றி

சங்கரய்யா said...

வீரன், உங்களின் கருத்தினை முழுமையாக ஆமோதிக்கிறேன்

Sridhar Sivaraman said...

தனது கொள்கைகளை காற்றில் பரக்க விட்டதன் மூலம் அரசியல் களத்தில் திரு ராமதாஸ் வெற்றி பெற்றதாக வேண்டுமானால் சொல்லலாம். என்ன மற்றவர் தமிழ் பெயரை சொல்லி தனது சொந்தங்களுக்கு பதவி வாங்கிகொடுதது போல், இவர் சாதி பெயர் சொல்லி பதவி வாங்கி கொடுத்துள்ளார். மற்ற படி இவர்கள் போராடுவதாக சொல்லும் சமூகத்துக்கு இவர்களால் ஒரு பயனும் இருப்பதாக தெரியவில்லை.

Anonymous said...

//எந்த கொள்கை பிடிப்புடன் கலைஞர் மஞ்சள் துண்டை போட்டு கொண்டிருக்கிறாரோ, எந்த கொள்கையுடன் கலைஞர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தாரோ, எந்த கொள்கையுடன் அதிமுகவும், திமுகவும் காங்கிரஸ், பாரதிய ஜனதா என்று அணி மாறிக் கொண்டே இருக்கிறார்களோ, எந்த கொள்கையுடன் வைகோ ஜெயலலிதாவுடனும், கலைஞருடனும் கூட்டணி அமைத்தாரோ, எந்த கொள்கையுடன் வீரமணி ஜெயலலிதாவை ஆதரிக்கிறாரோ, எந்த கொள்கையுடன் லல்லுவின் ஊழலை எதிர்க்கும் பாரதிய ஜனதா ஜெயலலிதாவுடன் கூட்டணி சேருகிறதோ, எந்த கொள்கையுடன் பிரதமர் பதவியை நிராகரித்த சோனியா ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணியை எதைச் செய்தாவது பதவியில் அமர்த்த துணிந்தாரோ அதேக் கொள்கையுடன் தான் ராமதசும் இருக்கிறார்//

சபாஷ்! இப்படி சுயநல தலைவர்கள் வரிசையில் மகனையும் பின்பக்க கதவு வழியாக மந்திரியாக்கி தான் மற்றவர்களுக்கு இளைத்தவர் அல்ல என்று காட்டிவிட்ட ஒருவரால் திருமாவும் அவரை நம்பி உள்ள தலித் மக்களும் பயன் அடைவார்கள் என்று எப்படி நினைப்பது. பா.மா.காவின் அரசியல் தூண்டியில் வசமாக வலிய சென்று மாட்டிக்கொண்டுவிட்டார் திருமா. ஏமாரப்போவது திருமா அல்ல தலித் மக்கள் தான். அரசியலில் ஒற்றுமை என்பது தேர்தல் வரை தான்.

திருமாவை வெரும் ஒரு அரசியல்/சாதி தலைவராக மட்டும் பார்க்காமல் மேலும் ஒரு படி மேலே சென்று தலித்மக்களின் ரச்சகராக தமிழ்நட்டின் அம்பேத்காராக பார்பதால் அவர் எந்த அரசியல் சதியில் சிக்கிவிடக்கூடாது என்ற எண்ணத்திலேயே இப்படி சொல்கிறேன்.

மற்றபடி உங்களின் இந்த பதிவில் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

வீரவன்னியன் said...

உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி.

திருமாவளவனுக்கும் ராமதாசுக்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் கீழ்தட்டில் இருக்கும் தன் சமுக மக்களுக்காக போராடினார்கள். தேர்தல் அரசியலை வெறுத்தார்கள். தேர்தல் மறுப்பு இயக்கங்களையும் நடத்தினார்கள். ஆனால்
அதனால் ஒரு பலனும் கிடைக்க வில்லை.

1989 தேர்தலை புறக்கணிப்போம் என்றார் ராமதாஸ். பல பூத்துகளில் ஒட்டு பதிவே நடக்க வில்லை. அதனால் என்ன பலன். ஒன்றுமேயில்லை. அதையே தான் திருமாவளவன்
செய்தார்.

அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் மூலமாக சாதிக்கலாம் என்று நினைத்தார்கள். தனித்து நின்றார்கள். ஒன்றும் சாதிக்க வில்லை.

தேர்தலில் நிற்கும் பொழுது கட்சி தொடர்ந்து தோல்வியை தழுவும் பொழுது கட்சித் தொண்டர்கள் சிதறிப் போவார்கள்.

அது தான் நடந்தது. 1996 தேர்தலில் 4 தொகுதிகளை மட்டுமே பா.ம.க தனித்து நின்று வென்றது.(ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வும் 4 இடங்களில் மட்டுமே வென்றது)
கட்சி சிதறிப் போகும் அபாயம் ஏற்பட்டது. அங்கு தான் கொள்கைகளை துறந்து ராமதாஸ்
ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். இதைப் போல தான் அன்று வைகோவும் ஜெயலலிதாவிடம்
கூட்டணி சேர்ந்தார். அந்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டிருந்தால்
பா.ம.க. காணாமல் போயிருக்கும்.

இன்றைய இந்திய அரசியலின் யதார்த்த நிலை கூட்டணி தான்.

அதைத் தான் இன்று திருமாவளவனும் செய்திருக்கிறார். சிதம்பரம் தொகுதியில்
கடுமையான போட்டிக்குப் பிறகும் வெற்றி கிடைக்கவில்லை என்னும் பொழுது தொண்டர்கள்
விரக்தி நிலைக்கு சென்று விடுவார்கள். கட்சி காணாமல் போய் விடும்.

இந்த போட்டியில் தொடர்ந்து இருக்க கூட்டணி வேண்டும்.

/*
மற்ற படி இவர்கள் போராடுவதாக சொல்லும் சமூகத்துக்கு இவர்களால் ஒரு பயனும்
இருப்பதாக தெரியவில்லை.
*/

இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதும் எண்ணம் உண்டு

ROSAVASANTH said...

கடைசி பின்னூட்டத்தில் சொன்ன பல்க கருத்துக்களை ஏற்று கொள்கிறேன்.
//இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதும் எண்ணம் உண்டு //

நிச்சயமாய் எழுதுங்கள். இது குறித்த சில நேரடி தகவல்களையும் , கிராம அளவிலான யதார்த்தங்களையும் முன்வைத்தால் மிகவும் பயனுடையதாய் இருக்கும்!

Unknown said...

//1989 தேர்தலை புறக்கணிப்போம் என்றார் ராமதாஸ். பல பூத்துகளில் ஒட்டு பதிவே நடக்க வில்லை. அதனால் என்ன பலன். ஒன்றுமேயில்லை.//

பலன் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவரது அரசியல் பலத்தைக் காட்ட அந்தத் தேர்தல் புறக்கணிப்பு அவருக்கு உபயோகமாக இருந்தது.

சிதம்பரம் தொகுதியில் பல இடங்களில் பூத்கள் காலியாக இருந்தன. துரை. கிருஷ்ணமூர்த்தி தான் அந்த முறை தேர்தலில் தி.மு.க சார்பாக நின்றிருந்தார். அவர் நேரடியாக ராமதாஸை கேட்டுக்கொண்ட பிறகு ராமதாஸ் தலையசைக்கவும் பின்னரே பல வன்னிய ஓட்டுகள் பதிவானது. மாலை நாலு மணிக்கு மேல் தொடங்கி இரவு வரை நீண்டதாக நினைவு.

இது போன்ற நிகழ்வுகள் நிச்சயமாக மற்ற அரசியல் தலைவர்களை யோசிக்க வைத்திருக்கும்.

//அதைத் தான் இன்று திருமாவளவனும் செய்திருக்கிறார். சிதம்பரம் தொகுதியில்
கடுமையான போட்டிக்குப் பிறகும் வெற்றி கிடைக்கவில்லை என்னும் பொழுது தொண்டர்கள்
விரக்தி நிலைக்கு சென்று விடுவார்கள். கட்சி காணாமல் போய் விடும். //

முற்றிலும் உண்மை.