மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை முழு அளவில் அமலாக்கக் கோரி பாமக சார்பில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து பாமக எம்பிக்களான மூர்த்தி, ராமதாஸ், பொன்னுசாமி, செந்தில், தன்ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு என்பது 5.3 சதவீதம் அளவே உள்ளது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு பிறகும் கூட மத்திய அரசுப் பணிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான பல இடங்கள் காலியாகவே உள்ளன.
இந்த இடங்களை சில சமூக நீதிக்கு எதிரான சக்திகள் நிரப்ப மறுத்து காலியாக வைத்துள்ளன.
இப்பிரச்னையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) ஜந்தர் மந்தர் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், பீகார் மற்றும் உபி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர் என்றனர்.