Wednesday, March 15, 2006

தினகரன் வாங்குவீர்

தினகரன் நாளிதழ் புதுப்பொலிவுடன் வந்து கொண்டிருக்கிறது. நேர்மையான செய்திகளுடன், வண்ணமிகு பக்கங்களுடன், சிறப்பான பேப்பர் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு தரமாக இருக்கிறது.



தினமலர் போன்ற பார்ப்பன ஆதரவு நாளிதழ்களை புறக்கணித்து தினகரன் நாளிதழை வாங்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழாக தினகரன் உருவாகி கொண்டிருக்கிறது

அதற்கு எனது வாழ்த்துக்களை அனைத்து வலைப்பதிவர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

Sunday, March 12, 2006

வீரப்பன் தேடுதல் வேட்டை

நம் சமூகத்தில் அரசானது தனது குடிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கேடுகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு அதன் அதிகாரம் முழுவதையும், நிராயுதபாணிகளான மக்கள் மீது ஏவுவதும், சட்டத்தைப் புறக்கணித்து அத்துமீறல் புரிவதும் அச்சுறுத்துவதும், துன்புறுத்துவதும், என பயங்கரவாத செயல்களைச் செய்கிறது. சமூகத்தில் பயங்கரவாதம் என்ற சொல் எவ்விதமான புரிதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதனை நாம் விளக்கத் தேவை இல்லை. ஆனால் அதைவிட அரசினால் ஏவப்படும் பயங்கரவாதம் மோசமானது என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.

1993 கால கட்டத்தில் தமிழக - கர்நாடக எல்லையோர மலைப்பகுதி மற்றும் கிராமங்களில் சந்தன வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் நிகழ்ந்தேறிய அரச வன்முறையின் கோர முகம் இன்றைக்கும் நம் சமூகத்தின் முன்னால் முழுமையாக காட்டப்படவில்லை. சிலர் அறிந்த அந்த கோரம் மிகவும் கொடூரமானது. அக்கால கட்டத்தில் நிகழ்ந்தேறிய மனித உரிமை மீறல்கள், நம் சம காலத்தில் நம் பகுதியில் நடந்த கோரத்தின் உச்சம். நாம் நினைத்து பார்க்க முடியாத வக்கிரமும், கொடுமையும், உணர முடியாத வலியும் கொண்டது அந்த பயங்கரவாதம்.

காட்டில் மறைந்து வாழும் வீரப்பனைப் பிடிக்க என்று தமிழக - கர்நாடக அரசுகள் இணைந்து அதிரடிப்படையினை உருவாக்கின. சித்திரவதை புரியும் வதை கூடாரங்கள், அதற்காக உருவாக்கப்பட்ட மின்சாரம் பாய்ச்சும் மின் கருவிகள் உள்ளிட்ட வதை கருவிகள், இதனை இயக்கும் ஆயுத படைகள், காவல் அதிகாரிகள், அனைத்தும் இணைந்து அரசின் ஒப்புதலுடன் கொடுமைகள் நடத்தப்பட்டன.

மலைப்பகுதியில் மறைந்து வாழும் வீரப்பனைப் பற்றி தகவல் சேகரிக்க என்றும், விசாரணை என்ற பெயரிலும் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சித்திரவதைப் படுத்தப்பட்டனர். கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அனைத்து தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அதிரடிப் படையினரின் நோக்கம் மக்கள் சித்திரவதையால் அச்சுறுத்தப்பட வேண்டும், அல்லது “மோதல் சாவுகள்” என்ற பெயரில் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதாக இருந்தது.

அதிரடிப் படையில் பணிபுரிந்த அதிகாரிகள் தங்களுக்கு உலகின் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டதாக உணர்ந்தனர். அரசும் அதற்கு மௌனமாக தலையசைத்தது. இவ்வதிகாரிகள் தங்கள் கீழ்பணி புரியும் கீழ்நிலை அதிகாரிகளுக்கு கொஞ்சம் அதிகாரத்தை வழங்கினர். விளைவு எங்கு பார்த்தாலும் மலை மக்கள் சித்திரவதைக்கு உள்ளாகினர். சந்தேகிக்கப்படும் நபர்களின் உடலில் துவாரம் உள்ள மெல்லிய பகுதிகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. சமூகத்தின் உறவுகளை இழிவு செய்து, வன்முறையும், வக்கிரமும், தலைவிரித்து ஆடியது. சுமார் ஏழு ஆண்டுகளில் பல வதை முகாம்களில் இந்தக் கொடுமை நிகழ்ந்தேறியது.

அதிரடிப்படை காவல் துறையினர் கடவுள்களாக மாறினர். தன் பிடியில் உள்ள மனிதன் உயிரோடு வாழ்வதா.? இல்லை சாவதா.? என பல சமயம் அவர்கள் முடிவு செய்தனர். பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். “மோதல் சாவுகள்” “வீரப்பனின் கூட்டாளிகள் சண்டையில் கொல்லப்பட்டனர்” என்று ஊடகங்களின் செய்திகள் வழியே சிலரின் மரணங்கள் வெளியே அறிவிக்கப்பட்டன. வனத்தில் பல இடங்களில் ரகசிய புதைகுழிகள் உருவாக்கப்பட்டன. வதை முகாம்களில் பெண்கள், ஆண்கள் நிர்வாணப்படுத்தப் பட்டு வைக்க்பட்டிருந்தார்கள். பல இரவுகளில் பாலியல் வல்லுறவில் வதைப்படுத்தப்பட்ட பெண்களும் உண்டு. சட்டம், நீதி, சனநாயகம் எல்லாம் கானல் நீராகிப் போனதன் வெளிப்பாடாகவே வதை முகாம்கள் இருந்தன.

அந்த சமயத்தில் காவலர்கள் விசாரிக்க அழைத்துச் சென்றது எல்லாம் வீரப்பன் ஆட்கள், கொல்லப்பட்டது அனைத்தும் மோதல் சாவுகள் என்ற கருத்தாக்கங்கள் சமூகத்தில் பரப்பி விடப்பட்டன. இதன் உள் வாங்கல் நமது சமூகத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தனர். ஆனால் அவர்களுக்காக எந்த அரசியல் கட்சியும் பேச முன் வரவில்லை. பல சமயம் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தன் காலத்தில் தான் சுட்டுக்கொல்லப்பட்டவர் அதிகம் என பெருமைப்பட்டுக் கொண்ட கொடுமையும் நடந்தது. அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் அதிரடிப்படையின் நடவடிக்கைகளை கேள்வி கேட்டிருக்குமேயானால் பல மனித உயிர்களை நாம் பார்த்திருக்கலாம்.

ஆனால் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், மக்கள் குடியுரிமைக் கழகம், மக்கள் கண்காணிப்பகம், சோக்கோ அறக்கட்டளை, சிக்ரம் (பெங்களூர்) போன்ற சிறு சிறு இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சனநாயக சக்திகள் போன்றவை மட்டுமே தொடர்ச்சியாகப் போராடின. அதன் விளைவாக தேசிய மனித உரிமை ஆணையம் இதில் கவனம் செலுத்தியது. அதன் பின் ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.ஜே. சதாசிவம், தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய புலனாய்வுத் தலைவர் சி.வி.நரசிம்மன் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை தேசிய மனித உரிமை ஆணையம் நியமித்தது. இவ்விசாரணைக் குழுவின் நோக்கம் வீரப்பனின் தேடுதல் வேட்டையில் இரு மாநில சிறப்பு அதிரடிப்படை காவலர்கள், மனித உரிமை மீறலில் ஈடுபட்டது குறித்து ஆராய்வதாகவும், அதற்கு உரிய இழப்பீடு குறித்து தெரிவிப்பதாகவும் இருந்தது.

30.01.2000 நாளன்று இதன் முதல் விசாரணை தமிழகத்தின் கோபிச்செட்டிப் பாளையத்தில் துவங்கியது. பாதிப்புக்குள்ளான ஏராளமான பழங்குடி மக்கள், கிராம மக்கள் மற்றும் பல தரப்பினர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பல அமர்வுகளில் தங்கள் பாதிப்புகளைப் பதிவு செய்தனர். பெண்கள் மீதான பாலியல் வன்முறை, சித்திரவதை, கொலை என அந்த மக்கள் வெளிப்படுத்திய அவலங்கள் நம் நாகரீக சமூகத்தின் வாழ்நிலையை கேள்விக்கு உள்ளாக்கியவை. இதன் மூலம் அதிரடிப்படையின் முகம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனாலும் அதிரடிப்படையினர் விசாரணைக் குழுவின் விசாரணையை தடை செய்ய பல்வேறு முயற்சி செய்து இறுதியில் தோல்வியடைந்தனர். அதிரடிப்படையினர் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குற்றச் சாட்டுக்கு உள்ளான 38 காவல் துறை அதிகாரிகளை விசாரித்து தன் இறுதி அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம் முன்பு கடந்த 02.12.2003 அன்று சமர்ப்பித்தது. ஆனால் வெளியிடப்படவில்லை. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு மனித உரிமை இயக்ககங்களின் தொடர் முயற்சி மூலமும், டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் எடுத்த முன் முயற்சிகள் காரணமாகவும் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றம் தேசிய மனித உரிமை ஆணையத்தை நேரடியாகச் சந்தித்து வலியுறுத்திய பின்பு இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள், இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

விசாரணைக் குழு வீரப்பன் தேடுதல் வேட்டையில் தமிழக - கர்நாடக சிறப்பு கூட்டு அதிரடிப்படை காவலர்கள் சட்ட விரோதமாக தங்களின் வரம்பை மீறி மலையோர கிராம மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளனர் என தெளிவு படுத்தியுள்ளது.

- அதிரடிப்படையின் முகாம்களில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதை நிரூபிக்கும் வகையில் இவ்விசாரணையில் சாட்சியம் அளித்த லட்சுமியின் சாட்சியத்தை விசாரணைக் குழு ஏற்றுக் கொள்கிறது.

- அதிரடிப்படை காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையின் பொழுது வீரப்பன் கூட்டாளிகளுடன் நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். அரசு கொடுத்த ஆவணங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி மட்டும் தமிழகத்தில் எட்டு பேரும், கர்நாடகப் பகுதியில் 30 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களின் மரணம் குறித்த ஆவணங்களைப் பார்வையிட்ட விசாரணைக் குழு ஒரு உண்மையான சண்டையில் இந்த மரணங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது.

ஏனெனில் சுடப்பட்ட பலர் வெகு அருகில் இருந்து சுடப்பட்டுள்ளனர். கர்நாடக காவலர்கள் கொன்ற புட்டன் என்பவரின் வாயில் துப்பாக்கி வைத்து வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. சுவரின் மண்டை ஓட்டை பிளந்து வெளியேறிய குண்டு அதற்கு சாட்சியம். பாப்பாத்தி மணி என்ற சௌதாமணி ஆகிய பெண்களின் உடலில் துப்பாக்கி முனை வைத்து சுடப்பட்டுள்ளனர். துப்பாக்கி குழாயிலிருந்து குண்டுடன் வெளிப்படும் கரித்துகள்கள் சுடப்பட்டுள்ளவர்களின் உடலில் படிந்துள்ளது இதற்கு சான்று.

மோதல் சண்டையில் கொல்லப்பட்டதாக பலரை அதிரடிப்படை அறிவித்தது. ஆனால் இறந்தவர்கள் அனைவரின் உடலிலும் தலை மற்றும் அதனை ஒட்டிய பகுதி, மார்பு, முகுகு ஆகிய பாகங்களையே குண்டு தாக்கியுள்ளது. உண்மையான மோதல் சண்டையில் இவை சாத்தியம் இல்லை. எதிரே உள்ள நபர் சாக வேண்டும் என்ற நோக்கிலேயே சுடப்பட்டு மேற்கண்ட தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் உண்மையான சண்டையில் உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கும். குண்டு காயங்கள் உடம்பில் ஏற்பட்டிருக்கும். இவை மேற்கண்ட சம்பவங்களில் இல்லை. அது போலவே தமிழகப் பகுதியில் நடந்துள்ள மரணங்களில் நடுத்தர தொலைவிலிருந்து பக்க வாட்டுப் பகுதியில் சுடப்பட்ட காயங்கள் உள்ளன. மேலும் மரணங்கள் குறித்து விசாரித்த கோட்டாட்சியர் விசாரணை வெறும் கண் துடைப்பு ஆகும். இவ் விசாரணையில் இறந்தவர்களின் குடும்பத்தார், விசாரிக்கப்படவேயில்லை என்பதும், உண்மையை மறைக்க வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதாகும்.

கர்நாடகத்தில் இறந்தவர்கள் பலர் மீது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கை உள்ளதால் கண் துடைப்பு விசாரணை கூட பல சாவுகளுக்கு செய்யவில்லை.

இவ்வித மோதல் சாவுகள் குறித்து சந்தேகம் எழும் போது சுதந்திரமான, நீதித்துறை சார்ந்த நீதிபதி விசாரணை மேற்கொள்ள தேசிய போலீஸ் கமிசன் ஏற்கனவே வழி காட்டியுள்ளது. ஆனால் எதுவும் இங்கு பின்பற்றப்படவில்லை.

மோதல் சாவுகள் மற்றம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் போன்ற அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தார்க்கும் உரிய இழப்பீடு வழங்க இவ்விசாரணைக் குழு பரிந்துரைக்கிறது. அமலில் இருந்த தடா சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்ற பொழுது, “தடா சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களைத் தொடர்ந்து சிறையிலேயே வைத்துக் கொள்ளத் தேவை இல்லை. கைது செய்யப்பட்டவர்களின் குற்றத்தின் தன்மையைக் கொண்டு தடா மறு ஆய்வுக்குழு அமைத்து அவர்களை பிணையிலோ அல்லது வழக்குகளைத் திரும்பப் பெற்று விடுதலையையோ வழங்க அரசு முயல வேண்டும் என்பதாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் மத்திய உள்துறை செயலகத்தின் சுற்றறிக்கை உள்ளது.

தமிழ்நாடு அரசு வீரப்பன் வழக்கில் கைது செய்யப்பட்ட எழுபத்தி ஐந்து நபர்கள் உட்பட மொத்த தடா வழக்குகளை 1997 ஆம் ஆண்டு திரும்ப பெற்றது. இவ்வழக்குகளில் கைதானோர் மீது தடா பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்டது. மற்ற சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ஆனால் கர்நாடக அரசு 1993 ஆம் ஆண்டிலிருந்து இவ்வழக்குகளில் நான்கு வெவ்வேறு நிகழ்வுகளை ஒட்டி கைது செய்த 121 நபர்களில் 51 நபர்களை 2001 செப்டம்பர் வரை எட்டாண்டுகள் விசாரணைக் கைதிகளாகவே தொடர்ந்து சிறையில் வைத்திருந்தது. விசாரணைப் பிடியில் இருந்த ஒருவர் உட்பட 14 சிறைவாசிகள் மட்டுமே வெவ்வேறு சிறு மற்றும் இதர பிரிவுகளில் தண்டிக்கப்பட்டனர். ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு ஏழு ஆண்டு காலம் தங்களின் வாழ்வை 37 நபர்கள் சிறையிலேயே கழித்துள்ளனர்.

கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் வழி காட்டுதல்களை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது. எனவே எட்டாண்டுகள் சிறையில் வாடி விடுதலை செய்யப்பட்ட 37 பேரும் இழப்பீடு பெற தகுதியுடையவர்கள் என்று விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

- அதிரடிப்படை என்பது ஒரு ஆயுதப்படை. இதற்கு சட்டரீதியாக தனித்து இயங்கும் அதிகாரம் இல்லை. இந்த அதிரடிப்படை ஒருவரை கைது செய்யவோ, சோதனை செய்யவோ சட்டம் அனுமதிக்கவில்லை. அதிரடிப்படை என்பது வெறுமனே காவல் நிலையத்திற்கு உதவி செய்யும் ஒரு ஆயுதப்படை மட்டுமே. ஆனால் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை பலரை கைது செய்தும் பல நாள் சட்ட விரோத காவலில் வைத்தும், சித்திரவதை நிகழவும், காரணமாக இருந்துள்ளது. மின் உற்பத்தி சாதனங்களைக் கொண்டு மின் அதிர்வு மூலம் சித்திரவதை புரிந்துள்ளது என்று விசாரணைக் குழு கூறியுள்ளது.

- விசாரணைக் குழுவானது தனது அறிக்கையில் வீரப்பனின் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிந்துள்ளது. சித்திரவதை, பாலியல் வன்முறை, கொலை என்று புகார்கள் எழுந்துள்ளன. இவைகள் முற்றிலும் புறக்கணிக்க முடியாதவை. எனவே குற்றம் புரிந்த காவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நீதித்துறை சார்ந்த நீதிபதி தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள், மற்றம் காவலர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது கட்டாயமானதாகும். தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விட அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளது.

மேலும் விசாரணைக் குழுவானது தனது அறிக்கையில் அதிரடிப்படையினை வழி நடத்திய தலைமை உரிய கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்று கூறியுள்ளது. தமிழகத்தில் இப்படைக்கு தேவாரமும், கர்நாடகாவிற்கு சங்கர் பிதாரியும் தலைமை ஏற்றிருந்தனர்ன. பொது மக்கள் மத்தியில் பணியாற்றும் ஒரு ஆயுதப் படைக்குத் தரப் பட்டிருக்க வேண்டிய எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்கள் எதுவும் இப்பிரச்னையில் கடை பிடிக்கப்படவில்லை. மேலும் காவலர்களின் செயல்பாடு எவ்வித கண்காணிப்பிற்கும் உட்பட்டதாகவும் தெரியவில்லை என்று கூறியுள்ளது.

- விசாரணைக் குழு தனது அறிக்கையில் இழப்பீடு அளிப்பது பற்றியும் கூறியுள்ளது.

1. சித்திரவதைக்கு உள்ளானவர்கள்

2. தடா கைதிகளாக மைசூர் சிறையில் எட்டாண்டுகளாக வாடிய 38 பேர்

3. ‘மோதல் சாவுகள்’ என்ற பெயரில் அதிரடிப்படை காவலர்களால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர்.

4. சாட்சியளித்தவர்களில் 193 பேரில் 89 பேர் சாட்சியம் ஏற்று இழப்பீடு.

இந்த வகைமுறையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் படிக்க

நன்றி -- கீற்று