Sunday, June 05, 2005

மறைக்கப்பட்ட போராட்டமும், மறைந்துபோன உயிர்களும் - 2

கடந்த பதிவில் வன்னியர்களின் சாலை மறியல் போராட்டத்தின் ஆரம்பகட்ட சூழ்நிலையை விளக்கினேன். அதிலிருந்து இன்னும் கொஞ்சம் பின்நோக்கி நகர்ந்து வன்னிய மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் பொழுது வன்னியர்கள் ஏன் போராட்டத்தில் குதித்தார்கள் என்பது தெளிவாகும்.

( நண்பர் குழலியின் கருத்தான ஊடகங்களால் மறைக்கப்பட்ட போராட்டம் என்ற கருத்தை நானும் நம்புவதால் தலைப்பை "மறைக்கப்பட்ட போராட்டம்" என்று மாற்றியுள்ளேன் )

வடமாவட்டங்களில் மிகப் பெரும்பான்மையான சமூகம் வன்னிய சமூகம் தான். தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 20% வன்னியர்கள் தான். இதே அளவுக்கு தான் தலித் மக்களும் உள்ளார்கள். தலித் மக்கள் தமிழகமெங்கும் பரவி இருக்கிறார்கள். ஆனால் வன்னியர்கள் வடமாவட்டங்களில் மட்டும் தான். ஒரே இடத்தில் பரவலாக இருந்தாலும் பிற மேல் சாதிகளால் ஒடுக்கப்பட்டவர்கள். இதற்கு பிற சாதிகளை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. ஏனெனில் காலங்காலமாக வன்னிய மக்களின் வாழ்க்கை முறை தான் எங்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றது என்று சொல்லலாம்.

என்னுடைய அப்பா சராசரி வன்னியர்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டவர். சாராயம் குடிக்கும் பழக்கம் கிடையாது. எந்த பிரச்சனைக்கும் செல்ல மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். எங்கள் கிராமத்தில் அவர் மேல் அனைவருக்கும் இந்த குணநலன்களால் நல்ல மதிப்பு உண்டு. ஆனால் சராசரி வன்னியர்கள் அப்படி கிடையாது.

என் அப்பாவை கிண்டலாக என் கிராமத்தில் சொல்வார்கள் "இவரெல்லாம் படையாச்சியே கிடையாது. பன்னிக் கறி சாப்பிடாதவனும், சாராயம் குடிக்காதவனும் படையாச்சியா என்ன ?"

வன்னியர்கள் எங்கள் கிராமத்தில் இருக்கும் முதலியார்களின் நிலங்களுக்கு கூலி வேலை செய்வார்கள். கூலியை பெற்று கொண்டு நேராக சாராயக் கடைக்கு செல்வார்கள். குடிப்பார்கள். பின் கலாட்டா, தகராறு எல்லாம் உண்டு. வன்னியர்கள் முரட்டுதனமானவர்கள். குடி, கும்மாளம், இது தான் வாழ்க்கை என்று நினைத்திருந்தனர். காலங்காலமாக இப்படியான ஒரு வாழ்க்கை முறையில் தான் அவர்கள் காலத்தை கடத்தினர். அக் காலத்தில் படைவீரார்கள் என்ற வகையில் அவர்கள் வாழ்ந்த அதே வாழ்க்கையை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்து கொண்டிருந்தனர். படிப்பறிவும் கிடையாது. அவர்களுடைய வாழ்க்கை தரம் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். வன்னிய கிராமங்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த நிலை தெரியலாம். சராசரி வன்னியர்கள் தினக்கூலிகள், காசுக்கு திண்டாடுபவர்கள்.

இவர்கள் தான் இப்படி என்றால் முந்திரி தோப்பு மற்றும் நிலங்களுடன் இருக்கும் வன்னியர்களின் வாழ்க்கை தரத்திலும் பெரிய வேறுபாடு இருக்காது. இவர்களிடம் பணம் இருக்கும். ஆனால் அந்த பணத்தை கொண்டு தங்கள் வாழ்க்கையை எப்படி சிறப்பாக அமைத்துக் கொள்வது என்று தெரியாது. பணம் இல்லாதவர்களின் குடிசைக்குள் படுத்துக் கொண்டு தான் நுழைய வேண்டும். பணம் உள்ளவர்களின் அடையாளம் ஓட்டு வீடு. அந்த ஓட்டு வீட்டின் நுழைவாசலில் மாடுகளின் தொழுவம் இருக்கும். நுழையும் பொழுதே சாணத்தின் நறுமணமும், மாடுகளின் மூத்திர வாசமும் நம்மை வரவேற்கும். ஒரு புறம் வைக்கோள், இன்னொரு புறம் தொம்மை. மற்றொரு புறம் முந்திரி கொட்டைகளை வெயிலில் காய வைத்து கொண்டிருப்பார்கள். நாட்டு கோழிகள் வீட்டில் திரிந்து ஆங்காங்கே தங்கள் கழிவுகளை இறக்குமதி செய்து வீட்டின் நுறுமணத்திற்கு மேலும் மணம் சேர்க்கும்.

வன்னியர்கள் கும்மாளப் பிரியர்கள். கூத்து கலைஞர்களில் பெரும்பாலானோர் வன்னியர்கள் தான். திருவிழாக்களில் கட்டாயம் தெருக்கூத்து இருக்கும். ஒரு தினுசாக வேடமிட்டு கொண்டு என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் வேகமாக பேசிக் கொண்டு மேடையில் குதித்து குதித்து ஆடுவார்கள். என் தாத்தாவுக்கு தெருக்கூத்து பைத்தியம். எந்த தெருக்கூத்தையும் விடாமல் பார்ப்பார். ஆனால் தெருக்கூத்து பார்ப்பதற்கு முன்பாக அவருக்கு சாராயம் வேண்டும். சாராயம் குடித்து விட்டு தள்ளாடிக் கொண்டே தெருக்கூத்து பார்க்க வேண்டும். "இப்ப என்ன ஆடுறானுங்க, அந்தக் காலத்துல ஆடுவானுங்க பாரு" என்று ஆரம்பிப்பார். தெருக் கூத்து வன்னிய மக்களின் (தலித் மக்களுக்கும் கூட) இரவுக் நேரக் கொண்டாட்டம். தெருக்கூத்து கலைஞர்களுக்கு இது முக்கிய தொழில் இல்லை. வேறு வேலை செய்வார்கள். திருவிழா காலங்களில் இரவு நேரங்களில் அவர்களின் கொண்டாட்டமாக இந்த தொழில் இருக்கும். இந்தக் கலை கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து கொண்டிருக்கிறது. (தெருக்கூத்து பற்றிய நாவல் ஒன்றை ஒருவர் எழுதியிருந்தார். பெயர் நினைவில்லை. இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல் என்று நினைக்கிறேன்)

தலித் மக்கள், வன்னியர்களை விட மிக அதிகமான அடக்குமுறைக்கு உள்ளானார்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் வன்னியர்களின் வாழ்க்கை முறைக்கும் தலித்களின் வாழ்க்கை முறைக்கும் பெரிய வேறுபாடு கிடையாது.

வன்னிய, தலித் மக்களின் வாழ்க்கை காலங்காலாமாக அதே நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் அறியாமை. இவர்கள் கிணற்று தவளைகள். தங்களுடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காதவர்கள். முதலியார்களிடம் வேலை செய்கிறோமே, நாம் ஏன் முதலியார்கள் அளவுக்கு முன்னேறக் கூடாது, அந்த முன்னேற்றத்தை அடைய என்ன வழி என்றெல்லாம் சிந்திக்க தெரியாதவர்கள். குடி, கும்மாளம் என்று மழுங்கிப் போன அவர்களின் மூளை அதற்கு மேல் சிந்திப்பதில்லை.

இவ்வாறு காலங்காலமாக இருந்த ஒரு சமூகம் திடீரென்று சிந்திக்க தொடங்கும் பொழுது என்ன நடக்கும் ? திடீர் என ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் முக்கியத்துவம் அடையும் பொழுது, "இவனுங்களுக்கு என்ன இவ்வளவு முக்கியத்துவம்" என்ற எண்ணம் பிறருக்கு பிறக்கிறது. பிரச்சனை வெடிக்கும். இது வரை தங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்கு இன்று என்ன திடீர் முக்கியத்துவம் என்று பிறர் நினைப்பார்கள். அது தான் எங்களுக்கு 80களின் பிற்பகுதியில் நடந்தது. எங்கள் போராட்டங்கள் திரிக்கப்பட்டன. மறைக்கப்பட்டன. அவதூறு பேசப்பட்டன. தலித்களுக்கு திருமாவளவனின் வரவிற்கு பிறகு இந்த அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கிறன. காழ்ப்புணர்ச்சியை ஊடகங்களும் பிறரும் கொட்டிக் கொண்டிருக்கிறனர்.


வன்னியர்களை சிந்திக்க வைத்து ஒடுக்கப்பட்ட அம் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில் பாடுபட்டவர் டாக்டர் ராமதாஸ். தொண்டையை கணைத்து கொண்டு தமிழ் வெண்பாவுடன் பேச ராமதாசுக்கு தெரியாது. அவருக்கு பேச்சாற்றல் எல்லாம் கிடையாது. உண்மையை பேசுவார். "நீங்க உருப்புடனுன்னா முதல்ல சாராயம் குடிக்கிறத நிறுத்தனும்" என்று சாதாரண தமிழில் சொல்வார். அவர் பேச்சிற்கு முதலில் வன்னியர்களிடம் இருந்து எதிர்ப்பு தான் கிளம்பியது. வன்னியர்களிடம் இருந்தே டாக்டர் ராமதாசுக்கு பல நேரங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?

முதல் எதிர்ப்பு சாரயத்திற்கு ? வன்னிய மகளிர் அணியைக் கொண்டு கிராமங்கள் தோறும் சென்று அவரின் முன்னிலையில் சாராயக் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். பல கிராமங்களில் சாராயக் கடைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கெல்லாம் வன்னிய ஆண்களின் ஆதரவு ராமதாசுக்கு இருக்கவில்லை. இதனை எந்த ஊடகங்களும் எழுத வில்லை. கவனிக்கவில்லை.

ஆனால் அன்புமணி கோட்டும் சூட்டும் அணிவது தான் இவர்களுக்கு தெரிகிறது. மெத்த படித்த மேதாவி வலைப்பதிவு எழுத்தாளர் ஒருவர் இதனை எழுதினார். எனக்கு இவற்றை படிக்கும் பொழுதெல்லாம் ஆத்திரம் ஏற்படுவதில்லை. நம் சமூகத்தில் பாட்டாளி வர்க்கம் தலையெடுக்கும் பொழுது பிற மக்களின் மன உளைச்சலாகத் தான் இதனை கருதுகிறேன்.

ஒரு திருமண விழா ராமதாஸ் தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. எந்த விழாவிலுமே எல்லா வேலைகளையும் பெண்கள் தான் செய்வார்கள். ஆனால் பந்திக்கு முந்துவது ஆண்கள் தான். எல்லா ஆண்களும் கொட்டிக்கொண்டது போக மீதம் உள்ளவற்றை பெண்கள் பந்தி என்று வைத்து அதில் சாப்பிடுவார்கள். ராமதாஸ் எல்லா வன்னிய திருமணங்களிலும் இனி பெண்களுக்குத் தான் முதல் பந்தி பின்பு தான் ஆண்களுக்கு என்று கூறினார். ஆனால் அவர் பேசி முடித்தது தான் தாமதம். அனைத்து ஆண்களும் அடித்து பிடித்து கொண்டு பந்திக்கு முந்தினர்.

இவ்வாறு பல விடயங்களில் திருந்தாத முரட்டு கூட்டமாக இருந்த வன்னிய இனம் தான் இன்றைக்கு சமூக பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்திருக்கிறது. நாகரிகம் பெற்ற சமூகமாக வன்னிய கிராமங்கள் மாற்றம் அடைந்து கொண்டிருக்கின்றன.

இந்த மாற்றத்திற்கு காரணம் டாக்டர் ராமதாஸ். ஒரு முரட்டு கூட்டத்தை திருத்தி அவர்களை தன் நிலை உணரச் செய்து போராட்ட குணம் மிக்க கூட்டமாக மாற்றினார். அவர்கள் வாழ்க்கை தரமும் பெரும் மாற்றம் கண்டது.
இன்றைக்கு வன்னிய சமூகத்தில் இருந்து பல மருத்துவர்களும், பொறியாளர்களும் உருவாகியிருக்கிறார்கள். உருவாகி கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் டாக்டர் ஐயாவின் அர்ப்பணிப்பு. போராட்ட குணம். ஒடுக்கப்பட்ட தன் இன மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற அவரது அயராத உழைப்பு. அதனால் தான் அவர் வன்னியர்களின் தலைவராக, இனமானக்காவலராக இருந்து கொண்டிருக்கிறார். வன்னியர்கள் அவர் பின் அணிவகுத்து நிற்கின்றனர்.


இந்த மாற்றங்களுக்கு விதை விதைத்தது 1987ல் நடந்த 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம். அந்த போராட்டத்தின் வெற்றி. அந்த வெற்றிக்கு காரணமான மாபெரும் தலைவன்.